28 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாளும் நன்னிலந் தென்பனை
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவு நெடுங்களம்
காள கண்டன் உறையுங்
கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
தூர்நாட்டு விளத்தூரே.
 
              - சுந்தரர் (7-12-8)

 

பொருள்: நன்னிலம் , பனையூர் , கஞ்சனூர் , நீண்ட சடையையுடைன்  நெல்லிக்காவில்  , நெடுங்களம் ,  மிக , நஞ்சணிந்த கண்டத்துடன் கடைமுடி என்ற ஊரிலும்   , கண்டியூர் , வேளா நாட்டில் உள்ள வேளூர் , விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர்  என்ற ஊரிலும் ,  இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன் .

27 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை யமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
 
                    - திருநாவுக்கரசர் (4-15-5)

 

பொருள்: கோலக்காவில் உள்ள நல்மணி , குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான் , ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன் , தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர் , பால்போல் இனிக்கும் புதுமை மாறாத பழம் , பராய்த்துறையில் உள்ள பசிய பொன் , சூலம் ஏந்தியவன் , ஒப்பற்றவன் ஆகிய பெருமானை தோள்கள் குளிர  கைகளால் தொழுதேன் .

26 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.
 
         - திருஞானசம்பந்தர் (1-18-2)

 

பொருள்: ஆலாலநஞ்சைமிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும்,  கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன துன்பம் இல்லாதவரவர் 

25 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர மென்புபு னைந்த ஐயர்தம்
அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்கு
வித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்.
 
           - சேக்கிழார் (இளையான்குடிமாற நாயனார் புராணம் - 3)

 

பொருள்: எலும்பு மாலைகளை  அணிந்த சிவபெருமா னுடைய அடியவர் என்னும் முறைமையால், தம்மிடத்துப்  வந்தவர்கள் யாவராயினும், தாம் நாளும் இயல்பாகச் செய்து வரும் பத்திமையால் முற்பட வந்து அவர்களை எதிர்கொண்டு, கை குவித்து வணங்கி, நின்று, அவர்தம் செவிகளில் குளிர்ந்த, மென்மை யான, இனிய மொழிகளை அவர் விரும்புமாறு முதற்கண் சொல்லுவார் .

22 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று

         - காரைக்காலம்மையார் (11-4-10)

பொருள்:  ஈசனை நான் என்றும் என்  மனத்தில் இனியவனாக வைத்தேன் . அவனை என் தலைவனாக கொண்டுள்ள எனக்கு அரிய காரியம் என்று ஒன்றும் இல்லை. 

21 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
 
              - திருமூலர் (10-1-8)

 

பொருள்: மால், அயன்  முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை கண்டு அளந்து  தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யாரும் இல்லை. அப்படிப்பட்ட எங்கள் சிவபிரான் எல்லாவற்றையும்  உள்அடக்கி  கடந்து நிற்கின்றான்.

20 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உருக்கிஎன் உள்ளத் துள்ளே
ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.
 
        - திருமாளிகைத்தேவர் (9-4-7)

 

பொருள்: என் உள்ளத்தை உருக்கி அதன் உள்ளே ஊறுகின்ற தேனின் பெருக்கு மாறாதபடி, நடனத்தால் தன் உள்ளகக் குறிப்பினை அடியவர்களுக்கு அருளுகின்ற தில்லைப் பெருமான் பக்கல் செல்லும் மனப்பக்குவம் இல்லாத சுருக்கம் உடையவர்களையும், நரகத்தில் அழுந்துதற்குரிய வஞ்சகர் களையும், கெடாத தீவினைகளை நாளும் மிகுதியாகச் செய்து கொள் பவர்களையும், என் கண்கள் காணா. என் வாய் அப்பேயர்களோடு பேசாது .

19 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

என்னைஅப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின்
றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ
மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அன்னையொப் பாய்எனக் கத்தன்ஒப் பாய்என்
அரும்பொருளே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-16)

 

பொருள்: என்னை அப்பா! பயப்படாதே! என்று ஆற்றுவாரிலாமல் நின்று இளைத்துத் திரிந்தேன், உனது திருமேனிக்கு உவமை சொல்லின் மின்னலை ஒப்பாய், உனக்கு நீயே நிகர் , நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! எனக்குத் தாயை ஒப்பாய், தந்தையை ஒப்பாய். எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருளேயாவாய், ஆகையால் என்னை விட்டுவிடு வாயோ?

18 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ்
சிராப்பள்ளி
பாங்கூ ரெங்கள் பிரானுறை
யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி
பயிலும்ஊர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை
யூர்நாட்டு நறையூரே.
 
              - சுந்தரர் (7-12-4)

 

பொருள்: தேங்கூர் , சிற்றம்பலம் , சிராப்பள்ளி , அழகு மிக்க கடம்பந்துறை ,  எப்பொருட்கும் மேலானவனும் , எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவன்  நாங்கூர் ,  நறையூர்  என்பவை ஆம் எம் இறை நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள் ஆகும்.

15 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூ ரிலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி யுலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூ ழதிகை வீரட்டத் தரிமா னேற்றை யடைந்தேனே.
 
                   - திருநாவுக்கரசர் (4-15-4)

 

பொருள்: திருப்புறம்பயத்தில் உள்ள முத்து , திருப்புகலூரில் விளங்கும் பொன் , உறையூரில் ஓங்கிக் காணப்படும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள உலகுக்கு ஒளிதரும் கதிரவன்  , அருவிகள் ஒலிக்கும் திருக்கழுக்குன்றத்தில் தரிசிக்க வருபவர்களுக்குப் பற்றுக்கோடு , அறச்செயல்கள் என்றும் செய்யப்படுகின்ற திருவதிகை வீரட்டத்தானில்  உள்ள சிங்கம் ஆகிய பெருமானை அடியேன் அடைந்தேன் .

14 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும் வினை தானே.
 
        - திருஞானசம்பந்தர் (1-17-11)

 

பொருள்: கொடிகள் கட்டிய பெரிய  மாடங்களோடு உடைய  குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து உறையும்  அந்தணர்கள் வாழும் காழிப்பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத, எல்லா வினைகளும்  நீங்கும்

13 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அம்பொன் நீடிய அம்ப
லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை
யான்கு டிப்பதி மாறனார்.

       - இளையான்குடிமாற நாயனார் புராணம் (1)

 

பொருள்: பொன் வேயப்பெற்ற திருஅம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் பெருமானின் திருவடிகளை எந்நாளும் தமது நெஞ்சத்தில் வைத்து  வழிபாடாற்றி வருபவர். அப்பெருமானுக் குரிய அடிமைத் தன்மையில் சிறந்து விளங்கும் தகுதிப்பாட்டால் மேன்மை அடைந்தவர். உயர்ந்த வேளாண் குலம் செய்த தவத்தால், அக்குலத்தில் தோன்றி, இந்நிலவுல கில் தம் புகழை விளங்கச் செய்த பெருமையினார், அவர் இளையான் குடிப்பதியில் தோன்றியவர். மாறன் என்னும் பெயருடையார் என்பதாம்.

11 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். 

               - காரைக்காலம்மையார் (11-4-7)

 

08 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
 
               - திருமூலர் (10-1-6)

 

பொருள்: சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் தொலைவிலும்  இல்லை; அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், நந்தி என்னும் அவனை தவிர வேறொருவர்  இல்லை.

07 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துணுக்கென அயனும் மாலும்
தொடர்வருஞ் சுடராய் இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
அம்பலத் தாடிக் கல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச்
சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.
 
          - திருமாளிகைத்தேவர் (9-4-4)

 

பொருள்: பிரமனும் திருமாலும் தொடர்ந்து வந்து அறிவதற்கு அரிய ஒளிவடிவினனாய், உலகில்  தன்னை அணுகியிருக்கும் அடியவர்களுக்குத் தானும் அணியனாய்ச் செம் பொன்மயமான அம்பலத்தில் ஆடுகின்ற எம்பெருமானுக்கு அன்பர் அல்லாத அழுகை உடையவரையும், பிறரைத் துன்புறுத்தும் குருட்டுத் தன்மையை உடைய அறிவிலிகளையும், கீழ்மக்களாகிய வாய் அழுக்கை உடைய மாறுபடப் பேசுபவர்களையும் என்கண்கள் காணா. அப்பேயரோடு என் வாய் பேசாது.

06 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக்
கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட
லில்லடியார்
உடலில மேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேயென்
மதுவெள்ளமே.
 
           - மாணிக்கவாசகர் (8-6-13)

 

பொருள்: கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டின் கண்ணே நிலைபெறுகின்ற, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே!

05 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூல னூர்முத லாயமுக் கண்ணன்
முதல்வன்ஊர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய
நம்பன்ஊர்
கோல நீற்றன்குற் றாலங்
குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்
கூற்றத்து வெண்ணியே.
 
         - சுந்தரர் (7-12-3)

 

பொருள்: முக்கண் முதல்வனது தலங்கள் , ` மூலனூர் , முதல்வனூர் , நாலனூர் , குற்றாலம் , குரங்கணின்முட்டம் , வேலனூர் , வெற்றியூர் , வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி ` என்பவை, அழகிய திருநீற்றை அணிந்த , வேல்லைவிடை ஏறிய முதல்வனுன்  உடைய தலங்கள்  

04 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெ முத்தமனை யுள்ளத் துள்ளேவைத்தேனே

                - திருநாவுக்கரசர் (1-15-1)

பொருள்: பற்றற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன், பாசூரில் உறையும் பவளம், தில்லை சிற்றம்பலத்தில் உள்ள கனி போன்றவன் , தீண்டுதலுக்கு அரிய திருஉருவம், திருவெற்றியூரில் விரிந்த ஒளி, தூயவர்கள் தலைவன், கடல் ஒருபுறம் சூழ்ந்த ஒற்றியூர் உத்தமன் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தில் நிலையாக வைத்தேன். 

01 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புக ழொளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவன்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்தரு மிடும்பாவன மிதுவே.
 
              - திருஞானசம்பந்தர் (1-17-2)

 

பொருள்: இமயவன்  மகளாய் மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும் குற்றமற்ற சிவபிரான் விளங்குவதும்,  கலை வல்ல புலவர்கள் இடைவிடாது பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம் இதுவேயாகும்.