29 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 

                       -திருமூலர்  (10-22-10)


பொருள்: மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெரு மானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெரு மானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.

27 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அயர்வுற் றஞ்சலி கூப்பி அந்தோஎனை
உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே. 

                     -புருடோத்தநம்பி அடிகள்  (9-28-5)


பொருள்: என் மகளாகிய இப்பெண் சோர்ந்து கைகளைக் கூப்பி `ஐயோ! என்னை வாழச்செய்ய உன் கொன்றைப் பூமாலையை அருளுவாயாக` என்று உம்மை வேண்டுகிறாள். வேலைப்பாடுகள் அமைத்து நிறைந்த மதில்களைஉடைய தில்லைநகரில் உள்ள பெருமானீரே! நீர் இப்பெண்ணுக்கு அருள் செய்யுங்கள்!

26 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நல்கா தொழியான் நமக்கென்றுன்
நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
யருளாய் என்னை உடையானே. 

                    -மாணிக்காகவாசகர்  (8-21-10)


பொருள்: என்னை ஆளாக உடையவனே! நமக்கு இறைவன் அருள் புரியாது போகான் என்று எண்ணி, உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பலகால் கூறி, கண்கள் நீர் பெருகி, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி, மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து பொற்சபை என்றே துதித்துத் தளர்வு உற்றிருக்கும் உயிராகிய எனக்கு இரங்கி அருள் புரிவாயாக.

25 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கு மறிவரிய வத்தர்
பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

                               -சுந்தரர்  (7-38-10)


பொருள்: எலும்பையே அணிகலங்களாக அணிபவனும் , விடையை ஏறுகின்ற எங்கள் பெருமானும் , இசைஞானிக்கு மகனும் , வளர்ந்த வலிய பனைகளையுடைய சோலைகள் சூழ்ந்த , வயல்கள் நிறைந்த திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனுமான நம்பியாரூரனாகிய என்னால் , மதியாது சில சொல்லப்பட்ட அன்புருவினனும் , யாவருக்கும் அறிதற்கு அரிய தேவர் பெருமானும் , திருவதிகை மாநகரில் வாழ்பவனும் , எனக்குரிய பொன்போன்றவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன்போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு !

22 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணா ரருச்சுனற் கம்பும் வில்லும்
துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

                        -திருநாவுக்கரசர்  (4-50-1)


பொருள்: உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில் , சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற , பிரமனும் , நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர் . அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார் .

21 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

                             -திருஞானசம்பந்தர்  (1-52-1)


பொருள்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.

19 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாங்குவார் போல்நின்ற
மறைப்பொருளாம் அவர்மறைந்து
பாங்கின்மலை வல்லியுடன்
பழையமழ விடையேறி
ஓங்கியவிண் மிசைவந்தார்
ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத்
தூங்கியபொன் மலர்மாரி
தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார்.

                   - (31)


பொருள்: அதனை வாங்குவார் போல்நின்ற மறையின் பொருளாய பெருமானார் மறைந்தருளி, தம் இடமருங்கில் பார்வதி அம்மையாருடன், மிகவும் பழமையாய ஆனேற்றில் ஓங்கிய வானத்தின்மீது எழுந்தருளி வந்தார். ஒளியுடைய வானமும், நிலமும் கற்பகமலர் மழை பொழிந்தது. தொண்டராய மானக்கஞ்சாறர் அத்திருவுருவைக் கண்குளிரக் கண்டு தொழுது நிலமுறப் பணிந்தார்.

18 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே. 

                            -திருமூலர்  (10-22-2)


பொருள்கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.

15 July 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஆடிவரும் காரரவும்
ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவரு மாகண்டேன்
தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமை யோர்பரவும்
தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே
நிற்கவுமே ஒட்டாரே. 

                   -புருடோத்தநம்பி அடிகள்  (9-28-2)


பொருள்: ஆடிவரும் கரிய பாம்பினையும் அழகிய பிறையையும் பசியகொன்றைப்பூமாலையையும் எம்பெருமான் சூடிவருதலைக்கண்ட நான் அவரிடத்து மையலால் உடல்மெலிய என் தோள்வளைகள் நெகிழ அவற்றை இழந்தாலும், தேவர்கள் தேடிக் கொண்டுவந்து முன்நின்று துதிக்கும் அச்சிற்றம்பலத்துப் பெருமானார் தாம் கூத்தாடிக் கொண்டு வரும் பொழுது அவர் அருகே நின்று அவர் கூத்தினை அடியேன் காணும் வாய்ப்புப்பெறாதபடி விரட்டுகிறார்.

13 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அருளா தொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ.

                   -மாணிக்கவாசகர்  (8-21-8)


பொருள்: என்னை ஒரு பொருளாகக் கொண்டு வலிய வந்து ஆட்கொண்ட பொன் போன்றவனே! பொற்சபையில் நடிக்கின்ற கூத்தனே! நீ அருள் செய்யாது ஒழிந்தனையாயின், என்னை இவ் வுலகில் அஞ்சாதே என்பவர் யாருளர்? மயக்கம் பொருந்திய மனத் துடன் உன்னைவிட்டு விலகித் துன்பப்படுகின்ற என்னை வா என்று அழைத்து உன் தெளிவு பொருந்திய கூட்டத்தைக் காட்டாவிடில், யான் இறந்து போனால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களோ?

12 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை 


வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்
தெண்டோள்எம் பெருமானைப் பெண்பாகம் ஒருபால்
செய்தானைச் செக்கர்வா னொளியானைத் தீவாய்
அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

                           - சுந்தரர் (7-38-7)


பொருள்: கொடிதாகிய  வினை  என்னுங் கடலில் வீழ்ந்து தடுமாறும்  உயிர்கட்குப் பெரிதும் இரங்கித் தனது திரு வருளைக் கொடுத்து வீடுபேறாகிய நலத்தை வழங்கினவனும் , தலைக் கோலங்களை உடையவனும் , மைபோலுங் கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் உடைய எம்பெருமானும் , தனது திருமேனியின் ஒரு கூற்றைப் பெண் கூறாகச் செய்தவனும் , செவ்வானத்தின் ஒளி போல் பவனும் , தீதாகிய வாயினையுடைய பாம்பு படமெடுத்து ஆடுகின்ற சடையையுடையவனும் , மூன்று ஊர்கள் வெந்தொழியுமாறு அம்பை எய்தவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிது போதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன் போலும்

11 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எடுத்தன னெழிற் கயிலை யிலங்கையர் மன்னன் றன்னை
அடுத்தொரு விரலா லூன்ற வலறிப்போ யவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந்ந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கைவீ ரட்ட னாரே.

                       -திருநாவுக்கரசர்  (4-49-10)


பொருள்: கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இலங்கையின் மன்னனாகிய இராவணனைப் பொருந்திய கால் விரலால் அழுத்திய அளவில் அலறிப் போய் அவன் செயலற்று விழுந்து , செருக்கினை விடுத்துக் கை நரம்புகளை வீணை நரம்புகள் ஆக்கி ஒலித்து வேத கீதங்களைப் பாட , அவனுக்கு வெற்றியைத் தரும் வாளினையும் நீண்ட ஆயுளையும் நல்கினார் குறுக்கை வீரட்டனார் .

08 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சோலைமிக்க தண்வயல் சூழ் சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தான்
ஞாலமிக்க தண்டமிழான் ஞானசம்பந்தன் சொன்ன
கோலமிக்க மாலைவல்லார் கூடுவர்வா னுலகே.

                          -திருஞானசம்பந்தர்  (1-51-11)


பொருள்: சோலைகள் மற்றும் குளிர்ந்தவயல்களால் சூழப்பட்டதுமான திருச்சோபுரம் மேவிய இறைவனைச் சீலத்தால் , பழமையான புகழை உடைய அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும், நன்மைகளையே கருதுபவனும், உலகில் மேம்பட்ட தண் தமிழ் பாடியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய அழகுமிக்க இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகை அடைவர்.

06 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அருள்செய்த மொழிகேளா
அடற்சுரிகை தனையுருவிப்
பொருள்செய்தா மெனப்பெற்றேன்
எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல்
அடியிலரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார்
மலர்க்கரத்தி னிடைநீட்ட.

                        -மானக்கஞ்சாற  நாயனார்  (30)


பொருள்: இவ்வாறு அவர் அருள் செய்ததைக் கேட்ட மானக் கஞ்சாறர், உடனே, வலிமைமிகுந்த தனது சுழல்வாளை உறையி னின்றும் உருவி எடுத்து, `நான் இன்று கிடைத்தற்கரிய பெரும் பொருள் பெற்றேன்`, எனும் நினைவு கொண்டு, பூங்கொடி போலும் தம் மகளா ரின் இருள் நிறைந்த கருங் கூந்தலைப் பிடரி அளவுடன் அடியில் அரிந்து, கையில் எடுத்துத் தமது எதிர்நின்ற மயக்கம் செய்திடும் பிறப்பினை அறுத்துச் சீர்மைபெற வைத்திடும் மாவிரதியாரின் மலர்க்கரத்தில் கொடுத்திட

05 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

                      -திருமூலர்  (10-21-10) 


பொருள்: உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறு துணையாவான்.

04 July 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


அருள்பெறின் அகலிடத் திருக்க லாமென்
றமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடை யாரின் மிக்கார்
ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழியு மையாள்
கணவனை வல்வினை யாட்டி யேன்நான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
ஆசையை அளவறுத் தார்இங் காரே. 

                      -புருடோத்தநம்பி அடிகள்  (9-26-10) 


பொருள்: சிவபெருமானுடைய அருள் கிட்டினால் பரந்த தத்தம் உலகில் பலகாலம் இருக்கலாம் என்று இந்திரனும், பிரமனும் திருமாலும் ஆகிய அறிவுடையவரின் மேம்பட்டார் இருவரும், இன்றும் எங்கள் கூத்தப்பிரானைத் துதிக்கிறார்கள். இறைவனுக்கு மையல் ஏற்படுவதற்குக் காரணமான மழலை போன்ற மென்மையான சொற்களை உடைய பார்வதியின் கணவனாகிய சிவபெருமானை அடைவதற்குத் தீவினையை உடைய அடியேனுடைய நெஞ்சம் சுழல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஆசை இவ்வளவுதான் இருத்தல் வேண்டும் என்று ஆசையை அளவுபடுத்தி ஆசைகொள்பவர் இவ் வுலகில் யாவர் உளர்?

01 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


முன்னின் றாண்டாய் எனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
பொன்னம் பலக்கூத் துகந்தானே.

                   -மாணிக்கவாசகர்  (8-21-2)


பொருள்: பொற்சபையில் திருநடனம் செய்வதை விரும்பி யவனே! பெருமானே! முன்னே, என் எதிரே தோன்றி ஆட்கொண் டாய். நானும் அதன் பொருட்டாகவே முயன்று உன்வழியில் நின்று பணி செய்கின்றேன். ஆயினும் பின்னடைந்து விட்டேன். என்னை இன்று உன்பால் வரும்படி அருளி, `வா` என்று அழையாவிடில் அடிய வர் உன்னிடத்தில் நின்று, இவர் யார் என்று கேட்க மாட்டார்களோ?