30 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அப்பொற் பதியி னிடைவேளாண்
குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச்
சிவனார் செய்ய கழல்பற்றி
எப்பற் றினையும் அறஎறிவார்
எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பாற் பரிவுடையார்
எம்பி ரானார் விறன்மிண்டர்.
 
        - விறன்மிண்டநாயனார் புராணம் (4)

 


பொருள்: அத்தன்மைத்தாகிய அழகிய ஊரின்கண் வேளாண் குலத்தை விளக்குதற்கு ஏதுவாகத் தோன்றியவர். சொலற்கரிய பெருஞ்சிறப்பினையுடைய சிவபெருமானின் சிவந்த நிறமுடைய திரு வடிகளை எப்பொழுதும் எண்ணிய வண்ணம் இருத்தலின் எவ்வகைப் பற்றையும் அறுமாறு செய்பவர். யாவராலும் அளந்தறியக் கூடாத பெருமையுடையவர். மெய்யடியார்களிடத்துப் பேரன் புடையவர். இவர் எம் தலைவராகிய விறன்மிண்ட நாயனார் ஆவர்.

29 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.
 
          - (11-4-42)

28 August 2013

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.
 
        - திருமூலர் (10-1-36)

 

பொருள்: வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.

27 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேந்தன் வளைத்தது மேருவில்
அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
பொடியாட வேதப்புர வித்தேர்ச்
சாந்தை முதல்அயன் சாரதி
கதிஅருள் என்னுமித் தையலை
ஆந்தண் திருவா வடுதுறை
யான்செய்கை யார்அறி கிற்பரே.
 
              - (9-6-6)

 

 பொருள்: சிவனே  வானத்தில் உலாவிக்` கொண் டிருந்த மதில்களால் சூழப்பட்ட மூன்று கோட்டைகளும் சாம்பலாகு மாறு மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகியை வில் நாணாகக் கொண்டு,  திருமாலை அம்பாகக் கொண்டு, வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட, பிரமனைத் தேர்ப்பாகனாக உடைய தேரினைச் செலுத்திய சாத்தனூர்த் தலைவனே! உன் அருளே கதி` என்று என் மகள் பலகாலும் கூறுகிறாள். அவள் திறத்துத் தண்ணீரினால் குளிர்ந்த திருவாவடுதுறை என்னும் கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் செய்யநினைத்திருக் கின்ற செயலை யாவர் அறியவல்லார்?

26 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.
 
        - மாணிக்கவாசகர் (8-7-5)

 

பொருள்: திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

23 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற் றறுமே.
 
          - சுந்தரர் (7-15-10)

 

பொருள்:  பிற பாடல்களை அடியவர்கள்  பாட மறந்தாலும் , பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும் , சோழனது நாட்டில் உள்ளதும் , பழமையான புகழை யுடையதும் , ஆகிய திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை , அவனை ஒரு நாளும் மறவாத , திரட்சியமைந்த , பூவை யணிந்த கூந்தலையுடைய , ` சிங்கடி ` என்பவளுக்குத் தந்தையாகிய ,  நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடினால் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும் .

21 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப் பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு பதர்க பாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.
 
        - திருநாவுக்கரசர் (4-20-3)

 

பொருள் :  பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வரும்  , கோயில் பணி செய்பவர்கள் . ஆதி சைவர்கள் , சிவகணத்தார் , விரிந்த சடையை உடைய , விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள் , அந்தணர் , சைவர் , பாசுபதர் , கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே !

20 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே.
 
         - (திருஞானசம்பந்தர் 1-21-8)

 

பொருள்:  கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச்செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும் மற்றும் அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் என்றும்  வாழ்வர்.

19 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்ப ரென்றே
நன்னெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என்னுரை செய்தே னாக
இகல்விறன் மிண்டர் பொற்றாள்
சென்னிவைத் தவர்முன்
செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
 
     - மெய்பொருள் நாயனார் புராணம் (24)

 

பொருள் : இன்னுயிர் நீங்குமாறு வாளால் சிதைக்கக் கண்டும், எம் சிவபெருமானுடைய அடியாரென்ற திருவேடமே மெய்ப்பொருள், எனத்தாம் கொண்ட நெறியைப் பாதுகாத்த சேதி நாட்டின் அரசராகிய மெய்பொருள் நாயனார் பெருமையில் என்னால் இயன்றவகையில் ஒரு சிறிது சொன்னேன்: இனி வலிமை யுடைய விறன் மிண்ட நாயனாரின் அழகிய திருவடிகளைத் தலைமேற் கொண்டு அவர் முன் செய்த திருத்தொண்டைச் சொல்லத் தொடங்கு கின்றேன்.

 

16 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.

      - காரைகாலம்மையார் (11-4-47)

பொருள்: நெஞ்சே, சென்றுஅடைய வேண்டிய பேறு அம்மைக்கு ஒரு பாகம் அளித்த ஈசன் திருவடியே ஆகும். அதை விடாம்மல் பற்றுவையாக. 

14 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.
 
            - திருமூலர் (10-1-35)

 

பொருள்: சிவபெருமானை  வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும்,  தலைவன் என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.

13 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நினைக்கும் நிரந்தர னேயென்னும்
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
தருணேந்து சேகரன் என்னுமே.
 
       - (9-6-3)

 

பொருள்: நல்லநெற்றியை உடைய பெண்களே! என்மகள் எம்பெருமானை விருப்புற்று நினைப்பவளாய் என்றும்  நிலை பெற்றிருப்பவனே என்றும், பிறைச் சந்திரனுடைய அழகினைக் கொண்ட சிவந்த சடையில் மறைந் திருக்கும் கங்கைநீர் ஈரமாக்குகின்ற பெருமானுடைய கொன்றைப்பூங் கண்ணியின்மீது விருப்பம் கொண்டு பேசுவாள். மனத்திற்கு இன்ப வெள்ளத்தை அருளுபவனாய், மலைமகளை  மணந்த குணபூரணனாய், வளமான சாத்தனூரில் விருப்புடையவனாய் அவ்வூரிலுள்ள ஆவடு துறை என்ற கோயிலில் உகந்தருளியிருக்கும் பிறைசூடி என்று எம் பெருமானைப் பற்றிப் பேசுவாள்.

12 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.
 
       - மாணிக்கவாசகர் (8-7-4)

 

பொருள்: ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடையவர்கள்  எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளான வனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.

11 August 2013

பலன் தரும் பதிகங்கள்

பலன் தரும் பதிகங்கள்

1. குருவருள், திருவருள், ஞானம், அறிவு கிட்ட பாடவேண்டிய திருப்பதிகம்  - திருஞானசம்பந்தர் (1-1)


 - திருச்சிற்றம்பலம் -

1தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.1
2முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப் பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.2
3நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப் பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.3
4விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன் மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.4
5ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப் பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.5
6மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.6
7சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன் கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம் பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.7
8வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன் துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.8
9தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்  நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன் வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப் பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.9
10புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப் பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.1.1.10
11அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.1.1.11
- திருச்சிற்றம்பலம் -
திருத்தலம் : சீர்காழி, திருப்பிரமபுரம்   
இறைவர் திருப்பெயர் : தோணியப்பர், சட்டைநாதர் 
இறைவியார் திருப்பெயர்  :    பெரிய நாயகி,  திருநிலைநாயகி.

08 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்க ழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயினா லறையோ
ஈண்டுமாடங்க ணீண்டமா ளிகை மேலெழுகொடி வானி ளம்மதி
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
 
          - (திருநாவுக்கரசர் 4-20-1)

 

பொருள்: நெருங்கிய நீண்ட மாடங்கள் மாளிகைகள் மற்றும் அதன்  மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் வானத்திலுள்ள பிறையைத் தீண்டியவாறு வானத்தில் உலவும் திருவாரூரிலுள்ள பெருமானே ! உன்னைக் காண்பதனையே எண்ணமாகக் கொண்டு உன்னை விருப்புற்று நினைத்தவாறு இருந்த அடியேனுடைய உள்ளத்தில் நீ புகுந்தாயாக , உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளை என் மனத்திற்கு அணிகலனாக அணிந்து கொண்டிருக்கின்ற என்னை விடுத்துப் புறத்தே போக விடேன் . 

07 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவன மமர்தரு பரமனே.
 
         - (திருஞானசம்பந்தர் 1-21-5)

 

பொருள்:  தன்னை எதிர்த்து வந்த யானை  அஞ்சிப் பிளிற, அதனை உரித்தருளிய மிக்க குணாளனும், உயர்ந்த பசுக்களின் நாயகனாகிய விடையின்மீது வரும் ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான், பல கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும், விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும், மிக்கதவத்தை மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும், தன்னை வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் திருமரைகாட்டில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

06 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அரசிய லாயத் தார்க்கும்
அழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை
விளம்புவார் விதியி னாலே
பரவிய திருநீற் றன்பு
பாதுகாத் துய்ப்பீர் என்று
புரவலர் மன்று ளாடும்
பூங்கழல் சிந்தை செய்தார்.
 
          - (மெய்ப்பொருள் நாயனார் புராணம் - 22)

 

பொருள்: அடுத்து  அரசு இயற்றுதற்குரிய இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம் பிரிவால் வருந்தி நிற்கும் அரசமா தேவியார், ஏனைய சுற்றத்தார் முதலியோர்க்கும் தம் உள்ளத்தில் கருக்கொண்டு நிற்கும் கொள்கையைக் கூறுபவராய், `முறையாகப் போற்றிக் காக்கத் தக்க திருநீற்றினிடத்து வைத்து வாழும் அன்பில் சோர்வு வாராது அதனை என்றும் பாதுகாத்து, இவ்வுலகில் கொண்டு செலுத்தக் கடவீர்` எனும் கட்டளையைக் கூறியபின், மெய்பொரு ளார், திருமன்றில் அருட்கூத்து இயற்றுகின்ற பெருமானின் அழகிய வீரக்கழலினை அணிந்த திருவடியை மனத்தகத்து எண்ணியிருந்தார்.

05 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு.

        - காரைகாலம்மையார் (11-4-43)

 

02 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
 
           - திருமூலர் (10-1-33)

 

பொருள்: சிவபெருமானை நானும் நாள்தோறும் நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி  வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றான் .

01 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாதி மணங்கம ழும்பொழில்
மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள் பொன்னெடுந்
திண்டோள் புணர நினைக்குமே.
 
         - (9-6-2)

 

பொருள்: என் மகள் நறுமணம் கமழும் சோலைகளும், அழகிய மேல்மாடிகளை உடைய மாளிகைகளை உடைய வீதிகளும் சூழ்ந்துள்ள, ஒளிவீசும் மதில்களால் அழகு செய்யப்பட்டுள்ள சாத்தனூரில் உள்ள உண்மையான வேதநெறியில் வாழும் சான்றோர் கள் வணங்குகின்ற, ஏனைய தேவர்களுக்கு முற்பட்ட பழைமை யனாகிய, அழகிய ஆவடுதுறை என்ற கோயிலில் உகந்தருளி யிருக்கும் குணபூரணனாகிய எம்பெருமான் பெருமையை உள்ளவாறு அறியும் ஆற்றல் இலளாய் அவனுடைய பொன்நிறமுடைய நீண்ட வலிய தோள்களைத் தழுவநினைக்கின்றாள்.