28 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்
றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே.
 
            - சேந்தனார் (9-5-11)

 

பொருள்: உள்ளத்தில்  பொருந்துமாறு இனிய ஞானஒளியைப் பரப்பி, உயிரினங்கள் மாட்டுத் தன் கருணையைப் பொழிகின்ற உமையின்  கணவனாய், வளம் பொருந்திய கங்கையையும் பிறையையும் சூடியவனாய், இளைய காளைமீது வருபவனாய் உள்ள ஒளி விளங்கும் திருவீழிமிழலையில் உள்ள, அரசே என்று என்னால் இயன்றவரையில் முருகன் தந்தையாகிய அப்பெருமானை அடியேன் குரல்வளை ஒலி வெளிப்படுமாறு அழைத்தால், அடியேன் பற்றுக்கோடாகக் கொண்ட பொன்நிறம் பொருந்திய கற்பகமரம் போன்ற அப்பெருமான் அடியேன் பக்கல் வரத் தவறுவானோ?

27 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக்
கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம்
பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற்
றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக்
கடையவனே.
 
     - மாணிக்கவாசகர் (8-6-50)

 

பொருள்: பவள மலை போன்ற ஒளியுடைய திருமேனியனே! என்னை அடிமையாக உடையவனே! சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய தேவர்களுக்கு இரங்கி, அவர்கள் அமுதம் உண்ணுதற் பொருட்டு, கொல்லும் வேகத்தோடு எழுந்த ஆல கால விடத்தை உண்டவனே! கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், வாழ்த்தினாலும், எனது குற்றத்தின் பொருட்டே மனம் வாடி, துக்கப்படுவேன்; அவ்வாறுள்ள என்னை விட்டுவிடுவாயோ?

26 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்
புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன்
காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்
கருதா யாகிலுங் கருதி
நானேல் உன்னடி பாடுத லொழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.
 
              - சுந்தரர் (7-15-1)

 

பொருள்: திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே . உனக்கு அணிகலமும் , அரைநாணும் பாம்பாதல் கண்டு அஞ்சேன் ; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன் ; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும் , யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன் ; வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும் , உன்னை மறவேன் ; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும் , உன்னை கண்ணாரக் காண்பேன் ; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும் , நானோ , அன்பினால் என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியேன் 

25 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.
 
            - திருநாவுக்கரசர் (4-19-1)

 

பொருள்: சூலப்படை உடையவனாய், குங்குமம் பூசிய அழகிய தோள்களாகிய, அருவிகள் விழும் எட்டு மலைகளை உடையவனாய், பால்போன்ற இனிய சொற்களை உடைய உமையொரு பாகனாய், தனக்குத் துணையான ஆலமரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்த பெருமானை நான் ஆரூரில் கண்டேன்.

24 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர்
குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே.
 
           - திருஞானசம்பந்தர் (1-21-4)

 

பொருள்:  சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும், மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி சிவபுரமாகும், அதனை நினைபவர் சயமகள் தலைவரவர் 

21 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.
 
      -மெய்ப்பொருள் நாயனார் புராணம் (12)

          

பொருள்: மங்கலம் பெருக என்வாழ்வே சிறக்க வந்தாற்போல, இவ்விடத்திற்கு எழுந்தருளப் பெற்றது எதனால் ?` என்று மெய்ப்பொருளார் வினவ, முத்தநாதன், உங்கள் தலைவர் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறு எங்கும் கிடைத்திராத அரியதொரு நூலைக் கொண்டு வந்தேன் என்றான்.
 

20 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.

           - காரைகாலம்மையார் (11-4-35)

19 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.
 
           - திருமூலர் (10-1-25)

 

பொருள்: மேகத்தை போன்ற  நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதித்தால் அவனை அடைதலாகிய பெரும்பேற்றை பெறலாம். 

18 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்
நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
இவர்நம்மை ஆளுடை யாரே.
 
     - சேந்தனார் (9-5-9)

 

பொருள்: பலகோடிக் கணக்கான பாதங்களையும், பலமுடிகளையும், பல வலிய தோள்களை யும், பலகோடிக்கணக்கான திருவுருவங்களையும், திருநாமங்களை யும், அழகிய முக்கண்கள் பொருந்திய முகங்களையும் செயல்களையும் கொண்டு எல்லைக்கு அப்பாற்பட்டவராய் நின்று, அந்தணர் ஐந்நூற்றுவர் துதித்து வழிபடுகின்ற எண்ணற்ற பலகோடி நற்பண்புகளை உடையவர் அழகிய திருவீழிமிழலையை உகந்தருளியிருக்கும் பெருமானார். இவர் நம்மை அடியவராகக் கொள்ளுபவர் .

17 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச
லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண்
நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்
பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்
தடர்வனவே.
 
        - மாணிக்கவாசகர் (8-6-34)

 

பொருள்: வெண்மையான பல்லும் , கருமையான கண்ணும், பாற்கடலில் தோன்றிய திருமகள் வணங்கிப் பொருந்திய அழகிய திருப்பாதங்களையுடைய, பாம் பணிந்த பெருமானே! அரசனே! மணம் பொருந்திய முடியினையுடை யவனே! மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, கொடிய வினைப் பயன்கள் வந்து தாக்குகின்றன. அறிவில்லாத சிறியேனது குற்றத் திற்குத் தீர்வாக, அஞ்சற்க என்று நீ அருள் செய்தல் அல்லாது விட்டு விடுவாயோ?

14 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்

            - சுந்தரர் (7-14-12)

 

13 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.

      - திருநாவுக்கரசர் (4-18-10)

பொருள்: சிவபெருமானை சுற்றியுள்ள பாம்பின் கண், பல், விரலால் நெரித்த இராவணன் தலை, அடியார் செய்கைகள்  பத்து ஆகும்.  

12 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு மகளொடு திகழ்வரே.

            - திருஞானசம்பந்தர் (1-21-2)

பொருள்: பெரிய மலைகள் சூழந்த மனிதர்கள் முதல் தேவர் வரை வாழும் உலகங்கள் நிலைபெற, அலைகடலில் துயில் கொள்ளும் அரி வந்து வணங்கும் சிவபுரம் உள்ள சிவனை உள்ளன்போடு 
நினைபவர்களிடம் திருமகள்  (செல்வம்) வந்து சேரும். 

11 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.
 
        - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (7)

 

பொருள்: உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு,  தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு முத்தநாதன் சென்றான்.

10 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.

          - காரைகாலம்மையார் (11-4-32)