27 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையு ளனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.
 
                 -திருநாவுக்கரசர்  (4-38-1)

 

 பொருள்:   சடையில் கங்கையையும் ஒளிவீசும் பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு உமை ஒரு  பாகராய் , மான்குட்டியையும் , மழுப்படையையும் , உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார் நம் ஐயாறனார் ஆவர்.
 

24 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவொளிகாணிய பேதுறுகின்ற திசைமுகனுந் திசைமேலளந்த
கருவரையேந்திய மாலுங் கைதொழ நின்றதுமல்லால்
அருவரையொல்க வெடுத்தவரக்க னாடெழிற்றோள்க ளாழத்தழுந்த
வெருவுறவூன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே.
 
                   -திருஞானசம்பந்தர் (1-39-9)

 

பொருள்: திருவேட்கள நன்னகர் இறைவர், அழகிய பேரொளிப் பிழம்பைக் காணும்பொருட்டு மயங்கிய நான்முகனும், எண்திசைகளையும் அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், அடிமுடி காண இயலாது கைதொழுது நிற்க, கயிலைமலை தளருமாறு அதனை எடுத்த இராவணனின் வெற்றியும் அழகு மிக்க தோள்களும் ஆழத் தழுந்தவும் அவன் அஞ்சி நடுங்கவும் தம் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவார்.

23 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாணனே தோன்றும் குன்றில்
நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல
காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி
மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர்
இருப்பர்கும் பிடலாம் என்றான்.
 
                    -கண்ணப்பநாயனார் புரணாம்   (96)

 

பொருள்: நாணனே, இதோ தெரிகின்ற மலைமேல் செல்வோம் என்று கண்ணப்ப நாயனார் கூற , நாணனும், `நீ அம்மலைக்குச் செல்வாயாயின் நல்ல காட்சியையே காண்பாய். வானுயர எழுந்த திருக்காளத்தி மலையின் மேல், எவர்க்கும் அருள் புரிதலில் மாறு படுதல் இல்லாத குடுமித்தேவர் என்னும் பெருமான் இருப்பர். கும்பிடலாம் என்றான்.

22 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட
மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய

                - சேரமான் பெருமாள் நாயனார் (11-8-99,100)

 

21 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.
 
            - திருமூலர் (10-8-10)

 

பொருள்: வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்ட தென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்

20 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

களையா உடலோடு சேரமான்
ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை
மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா
யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின்
ஆடரங்கே.
 
                     -பூந்துருத்தி காடநம்பி  (9-19-5)

 

பொருள்: இந்த உயிருள்ள உடலோடும் சேரமான் பெருமாள் நாயனாரோடும் ஆரூரன் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார் மதத்தை நீங்காத வெள்ளை யானையைக் கயிலை மலையை அடைவதற்கு இவர்ந்து செல்லவும், இளம்பிறையைச் சூடிய பெருமானே! நீ தில்லை மூவாயிரவரோடும் கலந்து விளையாடுகின்ற திருச்சிற்றம்பலமே உனக்குக் கூத்தாட்டு நிகழ்த்தும் அரங்கமாக உள்ளது.

17 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.
 
              -மாணிக்கவாசகர்  (8-14-5)

 

பொருள்: வேள்வி  குலைதலும் தேவர்கள் ஓடின விதத்தைப் பாடி உந்தீபற; உருத்திர நாதானகிய இறைவன் பொருட்டு உந்தீபறப்பாயாக!

16 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்
கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக்
கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங்
கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.
 
                - சுந்தரர் (7-30-1)

 

பொருள்: யானைத் தோலைப் போர்த்துநின்ற காலத்தில் உமையவள் அஞ்ச , அதனைக் கண்டு நின்றவனும் , திருக்கருப்பறியலூரில் உள்ள , தளிர் கிள்ளுதற்குரிய மாமரங்களில் இருந்து குயில்கள் பாட , கீழே மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ள எம்பெருமானும் ஆகிய இறைவனை ,  கண்களைச் சிறிது மூடியிருந்து உள்ளத்தில் அன்போடு நிலை பெயராது இருத்தி , இவ்வாறு மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

13 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வானவர் வணங்கி யேத்தி வைகலு மலர்க டூவத்
தானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்க ணேற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தான மேய
கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.
 
                  -திருநாவுக்கரசர்  (4-37-6)

 

பொருள்: வானவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க , அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய் , வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற் புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற , வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது இருக்கின்றேனே. 

10 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச் சங்கவெண்டோடு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ்சூழப் போதருமா றிவர்போல்வார்
உடைதனினால்விரற் கோவணவாடை யுண்பதுமூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை யூர்திநயந்தார் வேட்கள நன்னகராரே.
 
              -திருஞானசம்பந்தர்  (1-39-2)

 

பொருள்:  தாழ்ந்து சடைமுடியை எடுத்துக் கட்டிச் சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதிற் சரிந்து விளங்கவும், அருகில் பூதங்கள் சூழ்ந்து வரவும், போதருகின்றவர். அவர்தம் உடையோ நால்விரல் கோவண ஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும் அவர் நாம் போற்றும் திருவேட்கள நன்னகர் இறைவன் ஆவர்! 

09 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெய்யமா எழுப்பஏவி
வெற்பராயம் ஓடிநேர்
எய்யும்வாளி முன்தெரிந்து
கொண்டுசெல்ல எங்கணும்
மொய்குரல் துடிக்குலங்கள்
பம்பைமுன் சிலைத்தெழக்
கைவிளித் ததிர்த்துமா
எழுப்பினார்கள் கானெலாம்.

                    - கண்ணப்ப நாயனார்  புராணம் (77)

 

பொருள்:  விலங்குகளை எழுப்பும்படி வேடர்களை ஏவ, அம்மலைநாட்டு வேடரெல்லாம் மிருகங்களை எய்வதற்கு ஏற்ற கூரிய அம்புகளை எடுத்துக் கொண்டு, எங்கும் ஓடிச் செல்ல, எப்பக்கங்களிலும் மொய்த்தெழுகின்ற உடுக்கின் கூட்டங்களின் ஓசை பெருக, பம்பைப் பறைமுன் முழங்க, கைகளைத் தட்டி, நிலம் அதிரும் ஓசை செய்து, காட்டிலுள்ள மிருகங்களை யெல்லாம் அவ்வேடர்கள் எழுப்பினார்கள்.

08 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா நலந்திகழும்
கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் சூழொளிய

                -சேரமான்பெருமாள் நாயனார் (11-8,63,64)

07 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.
 
                  -திருமூலர்  (10-8-5)

 

பொருள்: கதிரவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.

06 April 2015

திருக்கழுக்குன்றம் படங்கள்

திருக்கழுக்குன்றம் படங்கள்










தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முத்து வயிரமணி மாணிக்க
மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு
விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும்
எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க
மாயிற்றே.
 
              - பூந்துருத்திகாடநம்பி (9-19-1)

 

பொருள்: முத்து, வயிரம், மாணிக்கம் என்ற மணிகளால் செய்யப்பட்ட மாலையின் ஒளிவீசுவது போன்றும், விளக்கின் ஒளி போன்றும், எல்லாத் திசைகளிலும் உள்ள தேவர்கள் போற்றிப்புகழும் தில்லைத் தலத்தில் உள்ள, ஒளிவீசும் பொன்னம்பலம் எம்பெருமானுக்கும் திருக்கூத்து நிகழ்த்தும் அரங்கமாக ஆயிற்று.

03 April 2015

மயிலை பங்குனி உற்சவம் 2015 - 3

மயிலை பங்குனி உற்சவம் 2015 - 3

அறுபத்து மூவர்  உற்சவம் 





 

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.
 
                   - மாணிக்கவாசகர் (8-14-1)

 

பொருள்: சிவபெருமானது  வில் வளைந்தது; போர் மூண்டது; மூளுதலும் முப்புரங்களும் ஒருமிக்க வெந்து நீறாயின. அந்தத் திரிபுரத்தை அழித்த நற் செய்தியை நினைத்தால் வியக்கத்தக்க தாக இருக்கிறது என்று உந்தீபறப்பாயாக
 

02 April 2015

மயிலை பங்குனி உற்சவம் 2015 - 2

மயிலை பங்குனி உற்சவம் 2015 - 2

வெள்விடை கபாலி காட்சி 

கபாலி 
 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வளங்கனி பொழின்மல்கு
வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை யுறைவானை
இளங்கிளை யாரூரன்
வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை
பத்தர்கட் குரையாமே.
 
                 - சுந்தரர் (7-29-10)

 

பொருள்: வளம்  மிகுந்த சோலையும்  , நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற , வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , சிங்கடிக்குத் தங்கையாகிய , ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன் , மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை , அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும் .
 

01 April 2015

மயிலை பங்குனி உற்சவம் 2015

 மயிலை பங்குனி உற்சவம் 2015

பிள்ளையார் 

அதிகார நந்தி - கபாலீஸ்வரர் 

கற்பகவல்லி அம்மையார் - கந்தர்வி வாகனம்  

முருகன் வள்ளி தெய்வானை -கந்தர்வ வாகனம் 

சண்டிகேஸ்வரர் வெள்விடை வாகனம் 

அங்கன்பூம்பவை திருஞானசம்பந்தர் 
 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலக்கில்நின் னடியார்கள்
மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய
தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங்
கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
 
              - சுந்தரர் (7-29-8)

 

பொருள்: அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் தீர்பவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் , மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும் , அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ !