30 March 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


பாரூர்பல புடைசூழ்வள
வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை
பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள்
பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர்
புகழாகுவர் தாமே

              - சுந்தரர் (7-71-10)

 

பொருள்: கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திரு மறைக்காட்டை , நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும் , வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூ ரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடு கின்ற , அப்பெருமானது திருவடித் தொண்டர்கள் , நீர் சூழ்ந்த நிலத் தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள் .

29 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே யுணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கட் பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளே னிறைவ னேநா னென்செய்வான் றோன்றி னேனே.

                  - திருநாவுக்கரசர் (4-78-2)


பொருள்: ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்ற ஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன் . பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன் . இறைவனே ! நான் எதற்காக இருக்கிறேன் ? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

27 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய ரழகினையருளுவர் குழகலதறியார்
கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி
ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

                         -திருஞானசம்பந்தர்  (1-78-2)


பொருள்: சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர்மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ?

26 March 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அண்டர் பிரானும் தொண்டர்தமக்
கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.

            -சண்டேசுவரநாயனார் புராணம்  (56)  


பொருள்: அண்டர்  தலைவராகிய சிவ பெருமானும், சூழ்ந்த ஒளி வடிவில் தோன்றி நிற்கும் விசாரசருமரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக ஆக்கி, `நாம் உண்ட திருவமுதின் மிகுதியும் உடுப்பனவும் சூடுவனவும் ஆன இவை யாவும் உனக்காகும்படி தந்து, அவற்றுடன் சண்டீசன் எனும் பதமும் தந்தோம்` என்று திருவாய் மலர்ந்து தம் இளம்பிறை விளங்கும் சடைமீதிருந்த கொன்றை மாலையை எடுத்து, அவருடைய அழகிய நீண்ட திருமுடிமீது சூட்டியருளினார்.

23 March 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 

            - திருமூலர் (10-2-22,4)


பொருள்: வேதத்தை ஓதும் உரிமை பெற்றமையால் `வேதியர்` எனப் பெயர்பெற்றிருந்தும் சிலர், மகளிர் இன்பத்தில் பற்று நீங்காமையால், சிவபெருமானை வழிபட நினையாமல், பிற தெய்வங் களை வழிபடுதலில் முனைந்து நிற்பர்.

22 March 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


பொன்னார் சடையோன் புலியூர்
புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே.

            -திருக்கோவையார்  (8-11,8)


பொருள்: பொன்போலும் நிறைந்த சடையையுடையவனது புலியூரைப் புகழாதாரைப்போல வருந்த; எனக்குப் புரிந்த நோய் என்னாலறியப்படுவதில்லை; ஆயினும் இதன்றிறத்து யானொன்றுரைக்க மாட்டேன்; எனக்குத் துணையாகிய மனனே; அயலார் சொன்னாரென்று இவள் வந்து சொல்லுகின்ற இக்குற்றம் என்கண் வாராமல்; அவராற்றாமை கூறக் கேட்டலானுண்டாகிய என தாழ்துயரை உள்ளவாறு சொல்ல வல்லையாயின்; நீர்மையையுடைய இனியவர்க்கு நீ சொல்லு வாயாக

20 March 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை யாளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

              - சுந்தரர் (7-71,7)


பொருள்:  வளர்தற்குரிய   இளமை யான பிறையை உடையவனும் , யான் முன்னே செய்த வலிய வினை களை , களைகளைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது , செந்நெற் கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற , மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும் , ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல் , வளைந்த சங்குகளோடு , சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும் .

19 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உய்த்தகா லுதயத் தும்ப ருமையவ ணடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கண் மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று வாடிநா னொடுங்கி னேனே.


                                    -திருநாவுக்கரசர்  (4-77-8)


 பொருள்: கயிலை மலையை எடுக்கத் தொடங்கிய ராவணன் , பார்வதிக்கு ஏற்பட்ட அச்சம் தீர , பெருமான் தன்னுடைய கால் விரலை வைத்து அழுத்த அதற்கு இலக்காக இராவணன் , தன் பெரிய தலைகளைக் கொடுத்தான் . பிறை சூடிய மூர்த்தியாகிய பெருமானுடைய , வண்டுகள் மொய்க்கும் நறுமணம் உடைய மலர் போன்ற திருவடிகளை அப்பெருமான் கரடுமுரடான என் தலைமீது வைத்தால் அத்திருவடிகள் வருந்துமென்று அவை என் தலையைச் சாராதவாறு நான் தாழ்ந்து ஒடுங்கினேன் .

15 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மைச்செறிகுவளை தவளைவாய்நிறைய மதுமலர்ப்பொய்கையிற் புதுமலர்கிழியப்
பச்சிறவெறிவயல் வெறிகமழ்காழிப் பதியவரதிபதி கவுணியர்பெருமான்
கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக் கருத்துடைஞானசம் பந்தனதமிழ்கொண்
டச்சிறுபாக்கத் தடிகளையேத்து மன்புடையடியவ ரருவினையிலரே.

                -திருஞானசம்பந்தர்  (1-77-11)


பொருள்:  குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப்பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத்தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாதகருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.

13 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொடுத்த இதழி சூழ்சடையார்
துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம்பொருட்டால்
ஈன்ற தாதை விழவெறிந்தாய்
அடுத்த தாதை இனியுனக்கு
நாம்என் றருள்செய் தணைத்தருளி
மடுத்த கருணை யால்தடவி
உச்சி மோந்து மகிழ்ந்தருள.

                   - சண்டேசுவரநாயனார் (54) 


பொருள்: கொன்றைப்பூவைச் சூடிய சடையையுடைய பெருமான், தம் திருவடிகளில் வீழ்ந்த விசாரசருமரைத் திருக்கரத்தால் எடுத்து நோக்கி, `எம்பொருட்டால் உன்னைப் பெற்ற தந்தை வீழ வெட்டினாய். அடுத்த தந்தை இனி உனக்கு நாம்` என்று கூறி, அருள் செய்து, மகனாரை அணைத்தருளி, பெருகும் கருணையால் அவர் திருமுதுகைத் தடவி, உச்சியில் முத்த மிட்டு மகிழ்ந்தருளலும்.

12 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

             -திருமூலர்  (10-2-22,1)

 

பொருள்: கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமையேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!

09 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
வார்குழ லேந்திழையே.

           -திருக்கோவையார்  (8-11,1) 


பொருள்:  தாதுபொருந்திய மலரையுடைய குஞ்சிகளின்கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள் தண்டேனைப் பருகி; தேதேயெனப்பாடுந் தில்லையையுடையானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சினவேலையுடையாரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும் வாராநிற்பர்; வந்து நின்று ஒன்று முரையாடார்; மதுவார்ந்த குழலை யுடைய அவரிடத்து நாஞ்செய்யத் தக்கது யாதென்றறிகின்றிலேன்

08 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அங்கங்களும் மறைநான்குடன்
விரித்தான்இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும்
வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு
வணங்கும்மறைக் காடே

              - சுந்தரர் (7-71-3)


பொருள்: மறைகள்  நான்கினோடு , அவற்றின் அங்கங்களை யும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம் ; அஃது யாதெனின்  , தென்னை மரங்களும் ,  பனை மரங்களும் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில் , சங்குகளும் , விளங்குகின்ற இப்பிகளும் , வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப் பட , மரக்கலங்களும்  கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும் .

07 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு விருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப் புலியுரி யரைய னாரை
ஏவணச் சிலையி னாரை யாவரே யெழுது வாரே.

                -திருநாவுக்கரசர் (4-77-2)


பொருள்: கோவணத்தை உடுத்தி  ,  பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி , தீப்போன்ற செந்நிற உடம்பில் சாம்பலைப் பூசி , அழகிய வடிவினராய் , செந்தாமரைக் காடு அனைய நிறத்தை உடையவராய் , புலித்தோலை இடையில் அணிந்தவராய் , அம்புக்கு ஏற்ற அழகிய வில்லை உடையவருமான பெருமானின் வடிவழகினை ஓவியத்தில் எழுதவல்ல ஆற்றல் உடையவர் யாவர் ?

06 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விளக்கினார் பெற்ற வின்ப மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே.

                           -திதிருஞானசம்பந்தர்   (1-77-3)


பொருள்: திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும் . ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால் , தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும் . கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர் . எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன .

05 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர்
பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும் படர்சடையடிகளார் பதியதனயலே
வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு மறிகடற்றிரைகொணர்ந் தெற்றியகரைமேற்
கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

                   -திருஞானசம்பந்தர்  (1-79-2)


பொருள்: நீல மலர் போன்ற அழகியமிடற்றை உடையவரும், கயிலைச் சிகரத்தில் உறைபவரும், உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும், முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும், அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி, பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண், இலவங்கம், சங்குகள் சுறா ஆகியனவற்றைக் கொணர்ந்து வீசும் கரைமேல் நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும். அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

02 March 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சிந்தும் பொழுதில் அதுநோக்கும்
சிறுவர் இறையில் தீயோனைத்
தந்தை யெனவே அறிந்தவன்தன்
தாள்கள் சிந்துந் தகுதியின ல்
முந்தை மருங்கு கிடந்தகோல்
எடுத்தார்க் கதுவே முறைமையினால்
வந்து மழுவா யிடஎறிந்தார்
மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்.

                       - சண்டேசுவரநாயனார் புராணம் (51)


பொருள்: பாற்குடங்களைக் காலால் இடற அவற்றினின்றும் பால் சிந்தும் பொழுதில், அதனை நோக்கிய சிறுவராய விசாரசரும னார், ஓர் இறைப்பொழுதில் அத்தீயவன் தம் தந்தை என உணர்ந்ததும், அப்பெரும்பிழை செய்தானின் கால்களைத் தடிய, முன்னாகக் கிடந்ததொரு தண்டினை எடுத்த போது, அதுவே ஒரு மழுவாக, தந்தையின் கால்களை வெட்டினார். அவ்வந்தணனும் மண் மேல் வீழ்ந்தான்.

01 March 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 

             - திருமூலர் (10-2-21,4)


பொருள்: வேதத்தை ஓதும் உரிமை பெற்றமையால் `வேதியர்` எனப் பெயர்பெற்றிருந்தும் சிலர், மகளிர் இன்பத்தில் பற்று நீங்காமையால், சிவபெருமானை வழிபட நினையாமல், பிற தெய்வங் களை வழிபடுதலில் முனைந்து நிற்பர்.