31 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்டவா திரிந்து நாளுங் கருத்தினா னின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த விறைவநீ யாடு மாறே.
 
               - திருநாவுக்கரசர் (4-23-5)

 

பொருள்:  கண்டவாறு ஞான நிலைக்குப் பொருந்தியவண்ணம் உலகியலுக்கு மாறுபட்டு உள்ளத்தில் நின் திருவடிகளை நிலையாகக் கொண்டு ஆடிப்பாடி உன் திருவருட் குறிப்பினாலேயே , வண்டுகள் பண்களைப்பாடும் சோலைகள் மிகுந்த சிற்றம்பலத்திலே எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் துதிக்குமாறு இறைவனாகிய நீ ஆடும் கூத்து .

30 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.
 
             - திருஞானசம்பந்தர் (10-25-5)

 

பொருள்: மலையரசன்  மகளாகிய பார்வதிதேவியோடு உடனாய் விளங்குபவனும், அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன்பள்ளியில் விளங்கும் சிவபிரானையே, இலைகளையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார் மேல் வினைநில்லா.

29 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அத்தர் முன்புசென் றடிகள்நீர் தந்தகோ வணத்தை
வைத்தி டத்துநான் கண்டிலேன் மற்றுமோ ரிடத்தில்
உய்த்தொ ளித்தனர் இல்லைஅஃ தொழிந்தவா றறியேன்
இத்த கைத்தவே றதிசயங் கண்டிலே னென்று.
 
                  - அமர்நீதி நாயனார் புராணம் (23)

 

பொருள்: எவ்வுயிர்க்கும் தந்தையாக விளங்கும் அம் மறையவர் முன் சென்று, `பெரியீர்! நீர் தந்த கோவணத்தைக் காப்பாக வைத்த இடத்தில் நான் கண்டிலேன்; அதனை வேறிடத்து வைத்து ஒளித்தார் எவரும் இல்லை; அக்கோவணம் மறைந்தவாறு அறிகி லேன்; இத்தகையதொரு அதிசயம் வேறு எங்கும் கண்ட தில்லை`, என்று கூறினார். 

28 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன்.

             - காரைக்கால்யம்மையார் (11-4-92)

 

27 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.
 
                - திருமூலர் (10-2-1)

 

 பொருள்: தமிழ்மறையில்  (அறம், பொருள், இன்பம், வீ டு) சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.

24 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்
தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
                 - கருவூர் தேவர் (9-9-1)

 

பொருள்: கலைகளுடைய பொருள்களும், அக்கலைகளை இயல்பாகவே அறிந்த அறிவுமாய், கற்புக்கடம் பூண்ட நெறியானே என்னைப் பெற்று எனக்கே முலைப்பால் தந்து உதவுகின்ற தாயை விடத் தயையுடையவனாகிய முக்கண்களை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் இடம், மலைகளைக் குடைந்து அமைத்தாற் போன்ற பலமாடிகளை உடைய மாட வீடுகளிலெல்லாம் வேதியர்கள் முறையாக ஓதும் வேதத்து ஒலி நீரை அலைக்கும் கடல் ஒலிபோல ஒலிக்கும் அழகிய குளிர்ந்த நீர் வளம் உடைய களத்தூரிலுள்ள அழகு விளங்கும் திருக்கோயிலாகிய ஆதித்தேச்சரமே.

23 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                        - மாணிக்கவாசகர் (8-8-7)

 

பொருள்: இடைவிடாமல் நினைப்பவர்களுடைய மனத்தில் தங்கியிருப்பவனும், நினையாதவர்க்குத் தூரமாய் இருப்பவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனும் வேதங்களை ஓதுபவனும், பெண்பாகனும், எம்மை ஆட்கொண்ட தலைவனும், தாய் போலும் மெய்யன்பு உடையவனும், உலகு ஏழிலும் தானே நிறைந்து அவற்றை ஆள்பவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

10 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
மாகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்திஎங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.
 
                - சுந்தரர் (7-18-1)

 

பொருள்: சிவபெருமான்  பிறத்தலும் இல்லை,  முதுமை அடைதலும் இல்லை ;  இறப்பதும்மில்லை  ; உறைவிடம் காட்டிடத்துள்ளது ; அதுவன்றி ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும் , தண்ணிய திருத்துருத்தியும் ,   அரைக்கண் இறுகக் கட்டுவது பாம்பு ; இவற்றை முன்பே அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தேயிருப்பேம் . இவற்றை அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தொழிவேமோ !

09 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே.
 
                            - திருநாவுக்கரசர் (4-23-1)

 

பொருள்: வினை நீங்கியவனே ! எல்லாருக்கும் முன்னவனே ! தில்லை அம்பலத்தே ஆடுகின்ற தலைவனே ! மேம்பட்டவனே ! மேம்பட்ட யோகியே ! அடியேன் பத்தனாய்ப் பாடும் ஆற்றல் இல்லேன் .  எதனால்  அடியேன் பத்தி செய்வேன் ? அடியேனை நீ இகழவேண்டா . அடியேன் உன் ஆடலைக் காணத் தில்லை வந்துள்ளேன் .

08 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேன் மன்னும் பாவமே.
 
                  - திருஞானசம்பந்தர் (1-25-1)

 

பொருள்: மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய உமையை  ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக்கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்தவையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.

07 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஐயர் கைதவம் அறிவுறா தவர்கடி தணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்தவே றிடத்தின்
மையில் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணமுன்
செய்த தென்னென்று திகைத்தனர் தேடுவா ரானார்.
 
                        -  அமர்நீதி நாயனார் புராணம் (20)

 

பொருள்: வந்து கேட்கும் பெருமைமிக்கவரின் (ஐயர்) வஞ்சத்தை அறியாதவராகிய நாயனார், விரைந்து உட்சென்று பார்க்க, தனியிடத் தில் மிகப்பாதுகாப்பாக வைத்திருந்த அவர்தம் கோவணத்தைக் கண்டிலர்; தாம் முன்பு காத்து வைத்த கோவணம் எங்குற்றது? என்று திகைத்து அதனைத் தேடுவாராயினர்.

06 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.

                  - காரைகாலம்மையார் (11-4-85)

பொருள்: சிவபெருமானை காணும்பேறு பெற்றால், அவனை கண்ணாரக்கண்டு, கையாரக் கூப்பி, விண்ணிறைந்து இருக்கும் அவனை எப்பொழுதும் எண்ணத்தால் எண்ணியும் இன்புறுவேன். 

03 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.
 
                  - திருமூலர் (10-1-56)
பொருள்:  சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய்  இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவதாகிய இலயசிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.

02 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத்
தெண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில்
பொழிலகங் குடைந்துவண் டுறங்கச்
செருந்திநின் றரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
                           - கருவூர்த்தேவர் (9-8-11)

 

பொருள்: பெரிய அலைகளால் மோதப்படும் முத்துக்களை உடைய கடல் சூழ்ந்த அகன்ற பூமியில் உள்ள எண்ணற்ற, அழகிய கண்ணாகிய அறிவு இல்லாத இழிநிலையிலுள்ள மக்கள், திருந்துகின்ற உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான கருவூர்த் தேவருடைய புறப்பொருள் துறையாகிய கடவுள் வாழ்த்தாகிய இனிய தமிழ் மாலையை உளங்கொண்டு ஏற்றருளும் மேம்பட்ட கருணையை உடைய சிவபெருமானுடைய கோயில், சோலைகளிலே மலர்களைக் குடைந்து வண்டுகள் உறங்கவும் செருந்தி நிலையாக அரும்புகளைத் தோற்றுவிக்கின்ற பெரும்பற்றப்புலியூர் என்ற தலத்திலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.