28 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடிஆ டும்பத்தர்க் கன்புடை யானைச்
செல்லடி யேநெருங் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
நான்உறு குறைஅறிந் தருள்புரி வானை
வல்லடி யார்மனத் திச்சையு ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

                 -சுந்தரர்  (7-67-2)


பொருள்: பல் அடியவரது தொண்டுகட்கும் இரங்கு பவனும் , இசையோடு பாடி , அதனோடு ஆடலையும் செய்கின்ற சீரடியார்களைத் தன் தமர்களாகக் கொண்டு தொடர்புடையவனாகின்ற வனும் , தன்னை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே மாறுபடாது சென்று அணுகித் தன்னைப் பெற்றவர்கட்கே சித்தியையும் முத்தியையும் தருபவனும் , நல்ல அடியார்களது மனத்தில் , எய்ப்பிற்கு என்று வைத்துள்ள நிதியின் நினைவுபோல நின்று அமைதியைத் தருபவனும் , நான் அடைந்தனவும் அடையற்பாலனவுமாகிய குறைகளைத் தானே அறிந்து , அவற்றைக் களைந்தும் , வாராது தடுத்தும் அருள்புரிபவனும் , கற்றுவல்ல அடியார்களது உள்ளத்தில் தங்குவதற்கு விருப்பம் உடைய வனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து கண்டேன் ; 

27 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னு ணித்தலு மைவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன்
குலைகள்மாங் கனிகள் சிந்துங் கோவல்வீ ரட்ட னீரே.

                -திருநாவுக்கரசர்  (4-69-2)


பொருள்: குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக் கோவலூர்ப் பெருமானே ! தலையைச் சுமந்து கொண்டு , இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன் .

26 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய் நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர் கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையின் மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

                     - திருஞானசம்பந்தர்  (1-71-1)


பொருள்: மறையவர்  இல்லங்களில் வேதப்பொருள்களை உள்ளடக்கிய பாடல்களைப் பாட, அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப்பாடித் தேனை உண்ணுகின்ற நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பிறைசூடிய சடையர். புலித்தோலை உடுத்தவர். பிளந்த வாயினை உடையபாம்பினை அணிந்தவர். விடக் கறை பொருந்திய கழுத்தை உடையவர். பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை உடையவர். எலும்பு மாலை அணிந்தவர்.

25 September 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு
நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய்த ரும்படி வேண்டின வெல்லாம்
வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை
எய்த ஆகம விதியெலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.

                   -திருகுறிப்புத்தொண்டர் நாயனார்  (60)


பொருள்: உயிர்கள் யாவையும் ஈன்றவரான உமையம் மையார், தாம் கொய்த பல மலர்களும், கம்பையாற்றில் எடுத்த நீராட்டு நீரும், ஒளிநிலவும் திருமேனிப் பூச்சாகும் சந்தனமும், நெய்விட் டேற்றிய செழுமைமிக்க சுடருடைய விளக்குகளும், நறுமணப் புகைகளும் ஆகிய இவையாவும் நிறைவுடைய சிந்தையில்,நீளப் பெருகிய அன்பினால், அங்கு உண்மையான வழிபாட்டிற்கு வேண்டிய பொருள் எல்லாவற்றையும் எம்பெருமாட்டியார் வேண்டியபோது அவரிடம் எடுத்துத் தோழியர் கொடுத்திட, அது மெய்ம்மையான வழி பாடாக விளங்கிட, ஆகமத்தில் சொல்லியவாறு எம்பிராற்குப் பூசனை செய்துவந்தார்

22 September 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. 

                   -திருமூலர்  (10-2-14,31)


பொருள்: கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.

21 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


செம்மைநலம் அறியாத
சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து
முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி
நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

                 -மாணிக்கவாசகர்  (8-51-9)


பொருள்: செப்பமாகிய நல்வழியை அறியாத அறிவிலி களோடு கூடித் திரிகின்ற என்னை முதல்வனாகிய பெருமான் மும்மலங்களையும் அறும்படி செய்து, எம்மையும் ஓர் பொருளாக்கி, இந்நாயைச் சிவிகையில் ஏற்றினான். எனக்கு அருள் செய்த பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

20 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
புகழி னால்அருள் ஈந்தமை யறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை யடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

                   -சுந்தரர்  (7-66-5)


பொருள்: வேதம் ஓதுபவனே . உலகிற்கு முதலாய மூர்த்தியே , உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே , திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , நீ , மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபொழுது , அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து , உன் திருவடியை அடைந்து , மேல்உலகத்தை ஆளும் வண்ணம் , அவர்கட்கு , புகழத்தக்க வகையில் திருவருள் ஈந்தமையை அறிந்து , அடியேன் , மேலான உனது திருவடியையே தொழுது முறையிட்டு , உன்னை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

19 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கூடினா ருமை தனோடே குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண வாலங்காட் டடிக ளாரே.

                           -திருநாவுக்கரசர்  (4-68-8)


பொருள்: பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார் .

14 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விழவாரொலியு முழவுமோவா வேணு புரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சே ரணிகொள் சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலை களைவாரே.

                          -திருஞானசம்பந்தர்  (1-70-11)


பொருள்: திருவிழாக்களின் ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் பதியில் அழல் வண்ணனாகிய சிவபிரானின் அருள்சேரப் பெற்ற அழகிய ஞானசம்பந்தன் எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருவீங்கோய்மலை ஈசனின் திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்.

13 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.


                  -திருகுறிப்புத்தொண்டர் நாயனார்  (51)


பொருள்: அது பொழுது, எண்ணற்ற ஆகமங்களை மொழிந்தருளிய சிவபெருமான், தாம் விரும்பும் உண்மையாவது தம்மை முறைப்படி வழிபடுவதேயாகும் என்று அம்மையாருக்கு உரைத்தருள, பெண்களுக்கெல்லாம் நல்லவராய அப்பெருமாட்டியாரும், உயிர்கட் கெல்லாம் தலைவராய அப்பெருமானாரை வழிபாடாற்றத் தம் உள்ளத்து விருப்பம் கொண்டார்.

12 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 

                   -திருமூலர்  (10-2-14,23)


பொருள்: நுண்ணுடம்புக் கருவிகள் எட்டனுள் தன் மாத் திரைகள் ஐந்தனையும் புலன்களாகக் கொள்கின்ற ஞானேந் திரியங்கள் ஐந்தும், அப்புலன்களைத் தம்பால் பற்றிக் கொள்கின்ற, எஞ்சிய `மனம், அகங்காரம், புத்தி` என்கின்ற அந்தக்கரணங்கள் மூன்றும் கூடிய உடம்பென்னும் பையினுள் உயிர் என்கின்ற சரக்கைச் சிவ பெருமான் முன்னர்க் கட்டிவைத்துப் பின்னர் அவிழ்த்து விடுவான்.

11 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை


மண்ணதனிற் பிறந்தெய்த்து
மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி
எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத்
தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

                   -மாணிக்கவாசகர்  (8-51-4)


பொருள்: மண்ணுலகில் பிறந்து விழகடவேனுக்கு அளவுபடாத அன்பை அருள் செய்து என்னை ஆண்டான். மேலும் எனக்குத் தன் திருவெண்ணீறு அணிவித்து, தூய்மையாகிய முத்தி நெறியை அடையும் வண்ணம் அருள்செய்தான். அவ்விறைவன் எனக்கு அருள் செய்த பேற்றைப் பெறவல்லவர் யாவர்?

08 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறைய வன்ஒரு மாணிவந் தடைய
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மான்என் றெப்போதும்
ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

                  -சுந்தரர்  (7-66-1)


பொருள்: திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , உன்னை , அந்தணனாகிய பிரமசாரி ஒருவன் அன்புடன் வந்து அடைய , அவனது அரிய உயிரைப் போகாது நிறுத்த வேண்டி , உதிரத்தைக்கொண்ட சூலத்தையுடைய இயமனைக் காலால் உதைத்துக்கொன்ற காரணத்தை உணர்ந்து உணர்ந்து , அடியேன் , ` யாவர்க்கும் முதல்வன் ; எமக்குப் பெருமான் ` என்று எப்பொழுதும் துதித்துத் துதித்து , அஞ்சலி கூப்பிநின்று , கழலும் சிலம்பும் ஒலித்தலைக் கொண்ட உனது செவ்விய திருவடியிடத்துக் கொண்ட அன்போடும் வந்து அடைந்தேன் ; என்னை ஏற்றுக் கொண்டருள் .

07 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும்
கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய வாலங்காட் டடிக ளாரே.

                            -திருநாவுக்கரசர்  (4-68-1)


பொருள்: பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய் , விரும்புபவர்களுக்கு எளியவராய் , உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய் , நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார் .

06 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகா டிடமாகக்
கோலச்சடைக டாழக்கு ழல்யாழ் மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண வாடும் பரமனார்
ஏலத்தொடுநல் லிலவங்கமழும் ஈங்கோய் மலையாரே.

                    -திருஞானசம்பந்தர்  (1-70-2)


பொருள்: சூலம் ஒன்றைத்தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும், குழல் யாழ் மொந்தை ஆகிய இசைக்கருவிகள் முழங்கவும், பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதிதேவி காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார்.

04 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அந்தணர்கள் அதிசயித்தார்
அருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர்
தம்மைவினை மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையும்
துணையடிகள் தொழுதிருக்க
அந்தமிலா ஆனந்தப்
பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.

              -திருநாளைப்போவார்  நாயனார்  (36)


பொருள்: அந்தணர்கள் அதிசயித்தனர். அரிய முனிவர்கள் வழிபட்டனர். தம்மை வந்தடைந்த திருத்தொண்டராய திருநாளைப் போவாரை, வினை மாசு கழிய, அழகிய தாமரை மலர் போன்ற இரு திருவடிகளையும் எஞ்ஞான்றும் தொழுது கொண்டு இருக்குமாறு அழிவில்லாத ஆனந்தப் பெருங்கூத்தர் திருவருள் புரிந்தார்.

01 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. 

                -திருமூலர்  (10-2-14,13) 


பொருள்: கருவினுள் வீழ்ந்த உயிர் அவ்விடத்தே இறக்கும் ஊழ் உளதாயின், பதிந்த கருவைச் சிவபெருமான் பலநிலைகளில் பல்லாற்றான் அழிந்தொழியச் செய்வான். அவ்வாறின்றிப் பிறந்து வாழும் ஊழ் உளதாயின், இடையூறுகள் பலவற்றால் தாக்கப்படுகின்ற வினைக்கட்டுடைய அக்கருவைச் சிவபெருமான் அது பிறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்தில் சுழிகளில் அகப்படாது ஆற்றில் நீராட்டுதல் போலவும் எரிகின்ற வைக்கோற் குவையிலிருந்து வாங்கிச் சுடாது வைத்தல் போலவும் தாயது வயிற்றில் உள்ள நீராலும், நெருப்பாலும் அழியாது காப்பான்.