31 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.
 
                       -திருநாவுக்கரசர்  (4-37-1)

 

பொருள்: காலன்  கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன் . ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே ! தற்போதம் அற்று நின்போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன் .

30 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 

நயர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வா மிவையுற் றுணர்வார்க்கே.
 
              - திருஞானசம்பந்தர் (1-38-11)

 

பொருள்: உயர்ந்தவர்கள்  வாழும் சீகாழிப்பதியுள் வாழும் ஞானசம்பந்தன், தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய இத்திருப்பதிகப் பாடல் களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்.

27 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.
 
                  - கண்ணப்ப நாயனார் புராணம் (12-54)

 

 பொருள்: தந்தையின் நிலையைத் உள்ளே கொண்டு, தம் மனத்தில் கவலை கொண்டு, பின்னர்த் தந்தை யின் தளர்வால் தங்கள் குலத்தலைமைக்கு வந்த குறைபாட்டை நிரப்ப வேண்டும் என்று மனத்தில் கொண்ட குறிப்பால், அப்பொறுப்பினை மறாது ஏற்றுக் கொண்டு, முன்னாகத் தந்தையின் திருவடிகளை முறைப்படி வணங்கி, முறைமையால் அவன் கொடுக்கும் சுழல் வாளையும் உடைத்தோலையும் வாங்கிக் கொண்டு, உளத்தில் அரசியல் பளுவைக் கொண்ட திண்ணனார்க்கு, சிறந்த தந்தையாகிய நாகன், மகன் நிலைகண்டு முகமலர்ந்து இதனைச் சொல்லுகின்றான்.

26 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்

              - சேரமான்பெருமாள் நாயனார் (11-8-33,34)

பொருள்: தும்புரு நாரதர்கள் பாட, நுன்னிடையர்கள் ஆட, சிவபெருமான் விண்ணவர்கள் பணிய விடை மேல்  

25 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.
 
                  - திருமூலர் (10-8-1)

 

 பொருள்: பூங்கொம்பில் தளிர் முதலாக அதனால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே கேளாது பின்பு முயல்வோம் என்று காலம் கடத்துவர். 

24 March 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே.
 
               -பூந்துருத்தி காடநம்பி  (9-18-2)

 

பொருள்: சிவனை  பத்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப்பருக, அவர்கள் பருகுந் தோறும் அமுதம்போல அவர்களிடத்தில் அவ்வருள் இனிமை வழங்கும். இவருடைய அழகிய உருவம் ஒளிவீசிக் கொண்டிருப் பதைக் காணுங்கள். எம்பெருமானார் அருட்சத்தியாகியும், மங்கல மாகிய சிவமாகியும், உலகுகளை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகியும், உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் அசபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார்.

23 March 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

பன்னாட் பரவிப்
பணிசெய்யப் பாதமலர்
என்னாகம் துன்னவைத்த
பெரியோன் எழிற்சுடராய்க்
கன்னா ருரித்தென்னை
யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
              -  மாணிக்கவாசகர் (8-13-9)

 

பொருள்:  பல நாள் துதித்து, பணிவிடை செய்யும் படி, தன் திருவடி மலரை, என் மனத்தில் பொருந்த அமைத்த பெருமையையுடையான், அழகிய சோதியாகி, முற்படக் கல்லில் நார் உரித்த பிறகு என்னை ஆண்டருளினவனுடைய இரண்டு திருவடிகள் அழகியனவாயிருந்த விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ

20 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆவியைப் போகாமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக்
குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங்
கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
 
           -சுந்தரர்  (7-29-2)

 

 பொருள்:வாவிகளில் கயல்மீன்கள் பாய  , குளத்திலும் , நீர்மடைகளிலும் , கருங்குவளையும் , செங்குவளையும் , தாமரையும் , செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டாய்!! 

19 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குடையுடை யரக்கன் சென்று குளிர்கயி லாயவெற் பின்
இடைமட வரலை யஞ்ச வெடுத்தலு மிறைவ னோக்கி
விடையுடை விகிர்தன் றானும் விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை யடிகள் போலும் பழனத்தெம் பரம னாரே.
 
            - திருநாவுக்கரசர் (4-36-10)

 

பொருள்: அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை , அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் , காளையை வாகனமாக உடைய , உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான் , தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர் .

18 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
 
             - திருஞானசம்பந்தர் (1-38-2)
 

 

பொருள்: வலிமை உடைய  கொடியயானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி, குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் உள்ள திருமயிலாடுதுறை ஆகும்.

17 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன்
என்மகனை உங்களுக்கு நாத னாக
எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன்
அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.
 
                 -கண்ணப்பநாயனார் புராணம்  (45)

 

பொருள்: இவ்வாறுகூறியவற்றைக் கேட்டலுமே நாகன் தானும், தன்னைப்பற்றி வரும் தன் மூப்பின் தொடர்ச்சியினை நோக்கி, சொன்ன அவர்க்கு முன்னாகச் சொல்வான், மூப்பி னால் நான் முன்பு போலச் செப்பமாக வேட்டையினில் முயற்சி கொள்ள இயலாதாயிற்று. ஆதலின் என் மகன் திண்ணனை உங்கட்குத் தலைவனாக எல்லீரும் ஏற்றுக் கொள்ளுங்கள்` என, அது கேட்ட அவ்வேடர்களும் அவன் நிலை கண்டு இரங்கினர், எனினும் திண்ண னாரைத் தலைவராகக் கொண்டனர். 

16 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்

              -சேரமான்பெருமாள் நாயனார்  (11-8-24,25)

பொருள்:  பன்னிரண்டு தேவர்கள் பல்லாண்டு  என் வாழ்த்த, நாரதன் யாழ்  மீட்ட, எமன் வாழ்க என்று மங்கள வாழ்த்துக்கள் கூறினான்.   

09 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.
 
              - திருமூலர் (10-7-10)

 

  பொருள்:  மக்கள் அறியாமல் வாழ்ந்துவரும் பொழுது  கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையால்   வாழும்  நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.

06 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன்
முரிவதோர் முரிவுமை யளவும்
தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே.
 
           - பூந்துருத்தி  காடநம்பி (9-18-1)

 

பொருள்: கைகளில் முத்துக்களால் ஆகிய தோள் வளைகளை அணிந்து, கழுத்தில் ஒப்பற்ற தனிமாலையைச்சூடி, மூன்று கண்களை உடைய தலைவராய், இவ்வுலகிலே மிக்க சிறப்பையுடைய திருவாரூரில் முதல்வராய், வீதிகளில் திருவுலாப்போகும் அழகராய் அசபாநடனம் என்று போற்றப்படும் கூத்தினைச் சிறப்பாகப் புரிந்து வருகிறார். திருவீதி உலாமேற்கொண்டு, இங்ஙனம் உடம்பை வளைத்து எம்பெருமான் ஆடும் ஆட்டத்தின் விளக்கம் உமாதேவி அளவிலும், கங்காதேவி அளவிலும் அடங்காது மேம்பட்டுள்ளது. எம்பெருமானுடைய கொள்கைதான் யாதோ?

05 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பண்பட்ட தில்லைப்
பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன்
அருக்கனெச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப்
படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
          - மாணிக்கவாசகர்  (8-13-4)

 

 பொருள்:மதிப்புப் பெற்ற தக்கனும், சூரியனும், எச்சன் என்பவனும், சந்திரனும், அக்கினியும், அலங்கரித்தலமைந்த, தில்லை நகர்க்கு இறைவனாகிய சிவபெருமானை, துதியாதவர்களாய், மேன்மை பொருந்திய பூதப்படையையுடைய, வீரபத்திரக் கடவுளால் காயப்பட்ட விதத்தை எடுத்துப்பாடி, பூவல்லி கொய்யாமோ.

04 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காரா ரும்பொழில்சூழ் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணை
யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்ட னுரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.
 
             - சுந்தரர் (7-28-10)
 
 பொருள்:மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள , ` திருவீரட்டானம் ` என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து , அழகிய திரு நாவலூரில் தோன்றியவனும் , திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின் , சிவலோகத்தில் இருப்பார். 

02 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தா னவர்கள் கேளார் குணமிலா வைவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரம னாரே.
 
               - திருநாவுக்கரசர் (4-36-2)

 

பொருள்:  போவதர்க்கு வழியாக ஆனவரும் , முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார் . அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்பதில்லை . ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன் . நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீய வினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் உள்ளார்.