30 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறையு மரவும் புனலுஞ் சடைவைத்து
மறையு மோதி மயான மிடமாக
உறையுஞ் செல்வ முடையார் காவிரி
அறையுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.
 
                           - திருஞானசம்பந்தர் (1-28-5)

 

பொருள்: பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து, நான்மறைகளை ஓதிக் கொண்டு, சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு உறையும், வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோமே 

29 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மன்னிய சிறப்பின் மிக்க
வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து
சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க
தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ
தானிலை யென்னுங் கோயில்.
 
                - எறிபத்த நாயனார் புராணம் (5)

 

பொருள்: நிலைபெற்ற சிறப்பினால் உயர்ந்த வளத்தினை உடைத்தாகிய அந்நகரத்தின்கண் இருக்கும் பொன்னாலாகிய மதிலைச் சுற்றி அமரர்களும் வழிபடுதற்குரிய சிறப்பினால், தம் உள்ளத்துக் கலந்த அன்பிற்சிறந்த அடியவர்களின் இதயத்தை விட்டு என்றும் நீங்காத அந்நிலைமையினையுடைய சிவபெருமானார் இருப் பது ஆனிலை என்னும் திருக்கோயி லாகும்

28 May 2014

தினம் ஒரு திருமுறை


 தினம் ஒரு திருமுறை

என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் வன்னஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு

              - ஐயடிகள் கடவர் கோன் நாயனார் (11-5-20)

27 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
 
                 - திருமூலர் (10-4-2)

 

பொருள்: என் மலத்தைப் பற்றற நீக்கியவனாகிய எங்கள் சிவபெருமான் நந்தி தேவரே. அவர் மேற்கூறியவாறு அருட்கண்ணை எனக்குத் திறப்பித்து ஆணவ மலமாகிய களிம்பை அறுத்து, அக் களிம்பு அணுக ஒண்ணாத சிவமாகிய மாற்றொளி மிக்க பொன்னை உணர்வித்து, பளிங்கினிடத்துப் பவளத்தைப் பதித்தாற் போல்வதொரு செயலைச் செய்தார். அவர் பதிப்பொருளேயன்றி வேறல்லர்.

26 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே.
 
                - கருவூர் தேவர் (9-10-7)

 

பொருள்: வில்வம் வன்னி முதலிய தழைகள் பொருந்திய முடியும், வெள்ளிய திருநீற்றின் ஒளியும், சங்கு வளைகள், உடுக்கை இவற்றின் ஒலியும், காதணியை அணிந்த செவியும், குளிர்ந்த சடையின் திரட்சியும், எருதும், திரள்திரளாகத் தோன்றுகின்ற ஒளி வீசும் பொற்பொடிகளைத் தோற்றுவிக்கின்ற நீர் வளம் மிக்க வயல் களிலே ஆரவாரம் மிக்கிருக்கும் கீழ்க்கோட்டூரில் உள்ள, மேகங்கள் தன் மீது தவழுமாறு உயர்ந்த உயரத்தை உடைய மணிஅம்பலத்தில் நின்று ஆடும் வலிமைமிக்க சிவபெருமானுடைய செல்வங்களாகக் காணப்படுகின்றன.

16 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறுகெடுப் பார்அய னும்மரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர்
நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்
நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்த வில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
             - மாணிக்கவாசகர் (8-9-5)
பொருள்: பிரமனும் திருமாலும் அறுகம்புல்லை எடுத்த லாகிய பணியைச் செய்வார்கள். அவர்களைத் தவிர ஏனையோராகிய இந்திரன் முதலிய வானுலகத்தவர்களும் முணுமுணுக்கின்ற தேவர் கணங்களும் நமக்குப் பின் அல்லாமல் அவ்வறுகினை எடுக்கவிட மாட்டோம். நெருங்கிய முப்புரத்தை எய்து அழித்த வில்லையுடைய வனாகிய திருவேகம்பனது செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடி நகையோடு கூடிய சிவந்த வாயினையுடையீர்! மூன்று கண்களை யுடைய எம்தந்தைக்குப் பூசிக் கொள்ளும் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

15 May 2014

தினம் ஒரு திருமுறை

 தினம்  ஒரு திருமுறை

முல்லை முறுவலுமை ஒரு
பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலையிற் பலி
கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற் கவை
அட்டித் தரப்பணியே.
 
                  - சுந்தரர் (7-20-5)

 

பொருள்: முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே , சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , அடியேன் , குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . ஆதலின் , அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி , அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

14 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நம்பனே யெங்கள் கோவே நாதனே யாதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ யென்றென்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.
 
                            - திருநாவுக்கரசர் (4-26-1)

 

பொருள்: திருவதிகை வீரத்தானத்தில் எழுந்துதருளியிருக்கும் பெருமானீரே ! எல்லாராலும் விரும்பப்படுகிறவரே ! எங்கள் அரசரே ! ஆதிமூர்த்தியாகிய பார்வதிபாகரே ! மேம்பட்டயோகீசுவரே ! பொன்னையும் பவளமலையையும் ஒத்தவரே ! அன்பரே !` என்று உம்மைப் பலகாலும் வாய்விட்டழைத்து உமது தாமரை மலர் போன்ற பாதங்களைத் காணத் துயருற்று அடியேன் வருந்துகின்றேன் .

08 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
 
                  - திருஞானசம்பந்தர்  (1-28-1)

 

பொருள்: நெஞ்சே, சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு துய்ப்பேன் என்னாது, அருளே துணையாக நுகர்வேன் என்று கூற, இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார், ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும், திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

07 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.
 
           - அமர்நீதி நாயனார்  புராணம் (48) 

 

பொருள்: சிவபெருமான்  தம் திருவருளினால், நன்மையும், பெருமையும் மிக்க அத்துலையே அவர்களை மேலே அழைத்துச் செல்லுகின்ற விமானமாகி, மேற்செல்ல, குற்றமற்ற அன்பராகிய நாயனாரும் அவர்தம் மைந்தரும் மனைவியாருமாகிய குடும்பத் தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாததும் அழிவு படாததுமாகிய சிவ பதத்தைக் கொடுத்த பெருமானுடன் சிவபுரியை அணைந்தனர்.

06 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.
 
              - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-18)

 

பொருள்: இழவு விழாக் கொண்டாடுதல் முன்னம் மழபாடி உரை சிவனை கண்டு நினை நெஞ்சே! 

05 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
 
                     - திருமூலர் (10-4-1)

 

பொருள்:  அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பி னால் கசிந்து  உருகப்பண்ணி, எனது மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.

02 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்
செவிஅவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே என்னும்என் மனனே.
 
                        - கருவூர்த்தேவர் (9-10-4)

 

பொருள்: தெளிந்த  திருநீற்றை அணிந்த சிவபெருமான் அணியும் நீற்றினையே என் உடல் விரும்புகிறது. என் செவிகள் அவனை அறியும் அறிவைத்தரும் நூல்களையே கேட்கின்றன. என் வாய் அவனுடைய திருநாமத்தை மெதுவாக ஒலிக்கிறது. என்கண்கள் அவனுடைய விமானத்தை நோக்கியதால் என்னை வெப்பமாக மூச்சு விடச்செய்கின்றன. கிளிகள் பூஞ்சோலையிலே இனிமையாகப் பேசி மாம்பொழிலைநோக்கி ஆரவாரம் செய்யும் கீழ்க் கோட்டூரில் உறையும் வள்ளலே! மணியம்பலத்தில் நின்று கூத்துநிகழ்த்தும் வலிமையுடையவனே! என்று என்மனம் அவனை நினைக்கும்