30 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத்
தாங்கிக்கொள்ளே.

                 - மாணிக்கவாசகர் (8-6-1)

பொருள்: கடையேனைப் கருணையால், வந்து ஆண்டு கொண்டருளினை. இடபவாகனனே! அடியேனை விட்டுவிடுவாயா? வலிமையுடைய, புலியின்தோலாகிய ஆடையை உடுத்தவனே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! சடையையுடையவனே! சோர்ந்தேன்; எம்பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக.

29 November 2012

திருக்கழுக்குன்றம் கார்த்திகை நிறைமதி மலைவளம்

திருக்கழுக்குன்றம் கார்த்திகை நிறைமதி மலைவளம்

படிவிளக்கு காட்சி 

விளக்கு - சிவலிங்கவடிவம் 


மலைமேல் சோதி தரிசனம் 



 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ.
 
                     - திருநாவுக்கரசர் (4-12-5)

 

பொருள் : இந்த மண்ணுலகில் பொருந்தி வீட்டின்பமே இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும்,  தூய்மையை உடைய மறையவர்களுக்கும்,  வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும், வீடு இன்பப் பேறுமாய் நிற்பவனாய், பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் அப்பனை  உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் நான் கைவிடக் கூடியவனோ?

28 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூனற்பிறை சடைமேன்மிக வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர் தலைவன்னல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே

                - திருஞானசம்பந்தர் (1-14-11)

பொருள்: பிறையை சடைமுடிமீது அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக்,  கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீர்காழி (கழுமல) நகரின் தலைவனும், கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலைகளை பாடி  வழிபட வல்லவர் குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.

27 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்

            - சேக்கிழார் (12-3-2)

பொருள்: உலகியற் பொருள்களில் பற்று வைக்காமல் , நிலையுடைய அறத்தில்  பற்று வைத்து வாழ் பவர். கங்கையை சடையில்  உடைய சிவபெருமானிடத்து அன்புடையவர். உண்மையான அடியவர்களுக்கு  தொண்டு களைச் செய்து வரும் விருப்புடையவர். உலகினரால் போற்றப்பெறும் இல்லறத்தை ஏற்று ஒழுகுபவர். சைவத்தின் உண்மைப் பொருளாக விளங்குகின்ற சிவபரம்பொருளைச் நினைத்தே வாழ்பவர். 

26 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

             - காரைகாலம்மையார் (11-3-6)

பொருள்:  சங்கரனை, பெரிய சடையை உடையவனை , அதன் மேல் பாம்பை அணிந்தவனை, எப்பொழுதும் நெஞ்சமே நீ மறவாமல் நினை.   

23 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.

                  - திருமூலர் (10-36)

பொருள்:  திருமூலன் பாடிய இந்த மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்திபெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. இதனை  நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர் என்பது திண்ணம்.
இதன் மூலம் திருமூலர் மூவாயிரம் பாடல்கள் தான் இயற்றினார் என்பது நன்கு
பெறப்படும். 

22 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

 தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங் கடைந்ததென் மதியே.

          - திருமாளிகைத்தேவர் (9-2-4)

பொருள்:  தேர் உலவும் விழாக்காலங்களில் குழல் ஒலியும், தெருவில் கூத்துக்களால் ஏற்பட்ட ஒலியும், அடியார்கள் இறைவனைப் புகழ்கின்ற ஒலியும், மறைகளை  ஓதுதலால் ஏற்படும்  ஒலியும், பரவிக்கடல் ஒலியைப் போலப் பொலிவு பெறுகின்ற பெரும்பற்றப் புலியூரில், சிறப்புடைய தாளத்திற்கு ஏற்ப மேம்பட்ட கூத்தின் இயற்கையிலே சிறந்து விளங்கிய, சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! கச்சணிந்த முலை யினை உடைய உமாதேவி மெதுவாக அழுத்திப் பிடிக்கும் திரட்சியை உடைய மேம்பட்ட அழகினை உடைய துடைகளில் அடியேனுடைய உள்ளம் பொருந்தியுள்ளது.

21 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.

        - மாணிக்கவாசகர் (8-5-100)

பொருள்:  நான் உன்னைப் பாடு வேண்டும். பாடிப்பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும். நான் அம்பலத்தாடும் உன்  மலர்க்கழல் அடையும்படி செய்தல் வேண்டும். இந்த உடம்பை ஒழித்து நீ  எனக்கு வீடுப்பேற்றை   தந்தருளல் வேண்டும். உன்னை நான் வணங்குகிறேன். 

20 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.
 
         - சுந்தரர் (7-10-1)

பொருள்:  நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையையுடைய எம்பெருமானும்,  ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும், தீயில் நின்று ஆடுபவனும், மேலானவனும், மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும், மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி இருக்கும் இடம்,  திருவனேகதங் காவதம் ` என்னும் திருக்கோயிலே.

19 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

        - திருநாவுக்கரசர் (4-11-8)

பொருள்:  நம் வீட்டில் ஏற்றும் விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்கும். சொல்லின் உளளே  நின்று விளக்குவதாய் , ஒளியுடையதாய் , பல இடங்களிலும்  காண நிற்பதாய், ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை தருவது  திருவைந்தெழுத்து மந்திரமே .

இப்பாடல் நாம் தினசரி வீட்டில் விளக்கு ஏற்றும் போழுது பாடவேண்டியப்பாட்டாகும்.   

16 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே

      - திருஞானசம்பந்தர் (1-13-5)

பொருள் :  நமது எண்ணதின் (தியானத்தின்) பயனாய் இருப்பவனும், நான்முகனாய் உலகைப் படைப்போனும், இசையோடு கூடிய மறைகளாய்  விளங்குவோனும், மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும், எல்லோர்க்கும் தலைவனானவனும், கண்ணிறைந்த அழகு  ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும்

15 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.

     - சேக்கிழார் (12-2-2)

பொருள் : கற்பனைகளையெல்லாம் கடந்து நிற்கும் சோதியாகிய  இறைவன், தன் கருணையால் வடிவு கொண்டு, எல்லோருக்கும்  அற்புதம் விளைக்கும் திருக்கோலத்தில், அரிய மறைகளின் முடிவாக உள்ள உபநிடதங்கட்கும் உச்சியின் மேலாய் நிற்கும் ஞான ஒளி வடிவாய் விளங்கும் திருச்சிற்றம்பலத்துள் நிலைத்து நின்று,  பொருந்த நடனம் செய்தருளும்  திருவடிகட்கு, என் வணக்கத்தைப் தெரிவித்துக் கொள்கிறேன்

14 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.

     - காரைகாலம்மையார் (11-3-2)

பொருள்: சிவனைப் எப்பொழுதும் மறவாமல்  நினைவாரை அவன் இப்புவிமேல் பிறவாமற் காப்பான். 

12 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

        - திருமூலர் (10-32)

09 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூ மப்பட லத்தின்
பியர்நெடு மாடத் தகிற்புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்த சிற் றம்பலக் கூத்தா
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள் என் மனத்துவைத் தருளே.

        - திருமாளிகைத்தேவர் (9-2-1)

08 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே

              - மாணிக்கவாசகர் (8-5-94)

07 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறுபதும் பத்தும் எட்டும்
    ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்
     சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
      நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
      அப்பனே அஞ்சி னேனே.


                - சுந்தரர் (7-8-3)

06 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே

            - திருநாவுக்கரசர் (4-11-1,2)

05 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே
.
    
                      - திருஞானசம்பந்தர் (1-12-11)

03 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆதியாய் நடுவு மாகி
   அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
   தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
   பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
   பொதுநடம் போற்றி போற்றி

               
                    - சேக்கிழார் (12-2-1)

02 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.


        - காரைகாலம்மையார் (11-2-22)

01 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
                       -  திருமூலர் (10-24)