19 May 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தம்மானை யறியாத சாதியா ருளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட
லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

                            - சுந்தரர் (7-38-1)


உலகில் , தம் தலைவனை உருவறியாத இயல்புடையவரும் உளரோ ! இல்லை ; அங்ஙனமாக , கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடைய அப்பெருமான் , தனது திருவடியை எடுத்து என் தலைமேல் வைத்தேவிடுவான் என்னும் விருப்பத்தினாலே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவில்லாத , நாய்போலும் சிறுமையுடையேனாகிய யான் , சடைமேற் சூடிக்கொண்ட பிறையை உடையவனும் , விடைமேல் ஏறுகின்ற வேறுபாட்டினனும் , யானையின் தோலைப் போர்ப்பவனும் , கரிந்த காட்டில் ஆடுதல் உடையவனும் , விடையைக் கொடியாக உடையவனும் , எம் தலைவனும் ஆகிய அலையெறியும் கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவன் அதனைச்செய்ய வந்த சிறிது பொழுதினும் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொரு காலும் அது வாயாது போலும் !

18 May 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திண்டிற லரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை
எண்டிற லிலனு மாகி யெடுத்தலு மேழை யஞ்ச
விண்டிறல் நெரிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட் டுகந்த பரமராப் பாடி யாரே.

                      -திருநாவுக்கரசர்  (4-48-10)


பொருள்: இராவணன் எம் பெருமானைப் பற்றி எண்ணியறியும் அறிவு வலிமை இல்லாதவனாய்ப் பெருமைமிக்க கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி பயப்பட , அவன் உடல் வலிமை நீங்குமளவுக்கு அவன் உடல் நெரியுமாறு மிகவும் வெகுண்டு விரலை ஊன்ற அவன் அலறிவிழப் பின் அவன் பாடிய பண்களையும் அவற்றின் திறங்களையும் கேட்டுகந்த பெருமான் திருஆப்பாடியார் ஆவார் .

12 May 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே.

                                      -திருஞானசம்பந்தர்  (1-50-10)


பொருள்:  பொதிய மலையைத் இடமாகக் கொண்டவனே, திருப்பூவணத்தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ வலிவலம் மேவிய இறைவனே,

06 May 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை


அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை

04 May 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 

                               -திருமூலர்  (10-20-10)


பொருள்: செல்வம் உடையவரேயாயினும், இலரே யாயினும் அன்பால் இளகுகின்ற மனம் உடையவரே சிவபெருமானது திருவடிகளை அடையும் நெறியைப் பெறுவர். அங்ஙனம் அந் நெறியைப் பெற்று அவனது திருவடிகளே எல்லா உயிர்கட்கும் பற்றுக் கோடு என ஒருதலையாக உணர்பவரே அவன் உலகத்தை அடைந்து வாழ்வர்.

03 May 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாரணி நறுமலர் வண்டு கெண்டு
பஞ்சமம் செண்பக மாலை மாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
வந்துவந் திவைநம்மை மயக்கு மாலோ
சீரணி மணிதிகழ் மாட மோங்கு
தில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந் தஞ்சல் என்பார்
ஆவியின் பரமன்றென்றன் ஆதரவே.

                          -புருட்டோதம நம்பி  (9-26-1)


பொருள்: தேன் மிகு  நறுமலர்களைக் கிளறுகின்ற வண்டுகள் பாடுகின்ற பஞ்சமப் பண், சண்பகப் பூமாலை, மாலைக் காலம் என்ற இவை கச்சணிந்த அழகிய முலைகள் மெலியுமாறு தொடர்ந்து வந்து நம்மை மயக்குகின்றன. அம்மயக்கத்தைப் போக்க அழகினைக் கொண்ட மணிகள் விளங்குகின்ற மாடங்கள் உயர்ந்த தில்லையம்பலத்திலுள்ள எங்கள் செல்வனாகிய சிவபெருமான் நமக்குக் காட்சி நல்கவில்லை. என்திறத்து அருள் செய்து என்னை அஞ்சாதே என்று சொல்லக்கூடியவர் யாவர் உளர்? என் விருப்பம் என் உயிரால் தாங்கப்படும்

02 May 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

                     -மாணிக்கவாசகர்  (8-20-5)


பொருள்: பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. வயல் சூழ்ந்த திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற எம் பெருமானே!