28 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இருந்தனம் எய்தியும் நின்றுந்
திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் றானே
களையுநம் தீவினையே.
 
            - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-17)

 

பொருள்: நெஞ்சே, நாம் தவறு செய்யாமல் திருந்தும் பொழுது, மாதொரு பாகத்துப் பொருந்தப் பெற்ற புண்ணிய வடிவினனும்,கொடியோரை அழித்தலால் அவர் புண் பொருந்திய சூலத்தை ஏந்தியவனும் ஆகிய எம் சிவபெருமான் நமது தீவினை களை யெல்லாம் அவனே முன் வந்து நீக்கிவிடுவான். நின்றும், திரிந்தும், கிடந்து அலைவுற்று மிக்க பொருளை ஈட்டியபோதிலும் வருத்தத்தையே தருகின்ற இவ்வுலக வாழ்க்கையை  உன்னை விட்டு நீங்கும்படி நீக்கு.

27 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
 
                  - திருமூலர் (10-4-19)

 

 பொருள்: மாணிக்கத்துள்   மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்கத்துள்ளே  மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!

26 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
 
                   - கருவூர்த்தேவர் (9-13-1)

 

 பொருள்:முன்னொரு காலத்தில் திருமால் கூட அறிய முடியாத ஒருவனாய் சத்தி, சிவம் ஆகிய இருபொருள்களாய் இருக்கின் றவனே! முக்கண்ணனே! நான்கு பெரிய நீண்ட தோள்களை உடைய கரும்பே! தேனே! அமுதமே! கங்கைகொண்ட சோளேச்சரம் என்ற திருக்கோயிலில் உகந்தருளியிருப்பவனே! அன்ன வடிவு எடுத்துப் பிரமன் வானத்தில் பறந்து உன் உச்சியைத் தேடுமாறு அவ்வளவு பெரியவனாகிய நீ சிறியனாகிய அடியேனை அடிமை கொள்ள விரும்பி அடியேனுடைய உள்ளத்தில் புகுந்த எளிவந்த தன்மையை அடியேன் ஒருநாளும் மறக்கமாட்டேன்.

25 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சட்டோ நினைக்க
மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ
கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித்
தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
                 - மாணிக்கவாசகர் (8-10-7)

 

பொருள்: மனத்துக்கு அமுதம் போலும் சிவ பெருமானை நினைத்தால் எமக்குச் சேதமுண்டாமோ? உண்டாகாது. ஆதலால், அவனை மறவேன். அவனை நினைத்தற் கிசையாத துட்டரை யாம் காணவும் அருவருப்போம். அந்தப் பெரியோனிடத்தே கோத்தும்பி நீ சென்று ஊதுவாயாக.

22 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செடியேன் தீவினையில் தடு
மாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனா தொழி
தல்த கவாமே
முடிமேல் மாமதியும் அர
வும்மு டன்துயிலும்
வடிவே தாம் உடையார் மகி
ழுங்கழிப் பாலையதே.

                 - சுந்தரர் (7-23-1)

 

பொருள்: திருமுடியின் மேல் , பெருமை பொருந்திய பிறையும் , பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர் , குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும்  இவன் நம் அடியவன்  என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில் , வாளா இருத்தல் தகுதியாகுமோ.

21 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலா லினிது சொன்ன
கிஞ்ஞரங் கேட் டுகந்தார் கெடிலவீ ரட்ட னாரே.
 
                    -திருநாவுக்கரசர்  (4-28-6)

 

பொருள்: அதிகை வீரட்டனார் மைக்கு அழகு தரும் , தமக்குத் தாமே நிகரான கண்களை உடைய பார்வதிபாகராகிய தமது கயிலைமலையை நோக்கி ஓடி அதனைப் பெயர்க்க முற்பட்டு உடம்பிலுள்ள நரம்புகளும் குருதியும் சிந்த , விழுந்து நசுங்கி வேகம் தணிந்து இராவணன் கை நரம்புகளையே வீணையின் நரம்புகளாக அமைத்து அவற்றை ஒலித்துக்கொண்டு அன்பூர இனிமையாகப் பாடிய பாடலைக் கேட்டு உகந்து அவனுக்கு அருளியவர் ஆவார் .

20 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்
காலன் றனையா ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்
தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-31-3)

 

பொருள் : அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தை பிரான் சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் கால காலன் எனப்படுபவன்.

19 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார்
ஒழியமற் றுள்ளா ரோடி
மட்டவிழ் தொங்கல் மன்னன்
வாயிற்கா வலரை நோக்கிப்
பட்டவர்த் தனமும் பட்டுப்
பாகரும் பட்டா ரென்று
முட்டநீர் கடிது புக்கு
முதல்வனுக் குரையு மென்றார்.
 
                        - எரிபத்தனாயனார் புராணம் (26)

 

பொருள்: எறிபத்தரால் வெட்டுண்டு விழுந்தவர்  அல்லாமல் அங்கிருந்த வேறு சிலர், தேன் துளிக்கும் ஆத்தி மாலையை யணிந்த புகழ்ச்சோழநாயனாரின்அரண்மனைக்கு ஓடிச்சென்று, வாயில் காவலர்களைப் பார்த்து, பட்டத்து யானையும் இறந்து அதனைச் செலுத்தும் பாகரும் இறந் தார்கள் என்று, நீவிர் விரைவாகச் சென்று அரசருக்குத் தெரிவிப்பீராக என்று சொன்னார்கள்.

18 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.
 
              - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-14)

 

பொருள்: மண்ணுலகத்தை ஆள விரும்புகின்றவர்களே,  சிவபெருமானைக் கைகுவித்துக் கும்பிடுங்கள். விண்ணுலகை ஆள விரும்புகின்றவர்களே, சிவபெருமானது திருவடிகளில் வீழ்ந்து பணியுங்கள். நாள்தோறும் பற்பலவற்றை விரும்புகின்றவர்களே சிவபெருமானை இடையறாது நினையுங்கள். சிவபெருமானோடு இரண்டறக் கலக்க விரும்புகின்றவர்களே, அப்பெருமானை நந்தவனத்தில் உள்ள நல்ல பல மலர்களால் அருச்சனை செய்யுங்கள். என்றும் நரகத்தில் நிற்றலாகிய பொல்லாத விளைவை விரும்புகின்றவர்களே,  சிவ பெருமானுடைய அடியாரை வருந்தப் பண்ணுங்கள்.

14 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
 
                - திருமூலர் (10-4-17)
 
பொருள்: சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங் களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக்கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற் கரிதாம்.

13 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆரணத்தேன் பருகிஅருந்
தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தார் ஈரைந்தும்
போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
 
                   - கருவூர்த்தேவர் (9-12-11)

 

பொருள்: சிறந்த சோலைகளை உடைய கோடைத்திரைலோக்கிய சுந்தரனே! வேதமாகியதேனை உட்கொண்டு, அரியதமிழாகிய மாலைகள் நறுமணம் வீசுமாறு நான் இவ்வாறு, இருக்கின்ற நிலைபெற்ற காரணத்தால், கருவூர்த் தேவனாகிய அடியேன் பாடிய நிலை பெற்ற இத்தமிழ் மாலையிலுள்ள பாடல்கள் பத்தினையும் மனப்பாடம் செய்து காந்தாரப்பண்ணில் பாடுகின்றவர்கள் நிறைவுடையவர்கள் ஆவார்கள்.

12 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
               - மாணிக்கவாசகர்  (8-10-4)

 

 பொருள்: வண்டே! கண்ணப்பனது அன்பு போன்ற அன்பு என்னிடத் தில்லையாதலைக் கண்டும், என்மீதுள்ள பெருங் கருணையால் வாவென்று கூவியாட்கொண்ட சிவபெருமானிடம் சென்று ஊதுவாயாக.

11 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ
மண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்
குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் மிடர்
கூருதல் இல்லையன்றே.
 
                  - சுந்தரர் (7-22-10)

 

பொருள்: பல உயிர்கள் வாழ்கின்ற திருப்பழமண்ணிப்படிக்கரை   என்னும் தலத்தை ,  தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும் , நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லராகின்ற அத்தன்மையார்க்கும் , அவரைச் சார்ந்து உற்றார்க்கும் , அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை .

08 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மந்திர முள்ள தாக மறிகட லெழு நெய்யாக
இந்திரன் வேள்வித் தீயி லெழுந்ததோர் கொழுந்தின் வண்ணம்
சிந்திர மாகநோக்கித் தெருட்டுவார் தெருட்டவந்து
கந்திர முரலுஞ்சோலைக் கானலங் கெடிலத்தாரே.
 
              - திருநாவுக்கரசர் (4-28-5)

 

பொருள்: மந்தர மலையாகிய மந்திரத்தை உள்ளமைத்துக் கொண்டு கடலையே நெய்யாகக்கொண்டு இந்திரன் செய்த பாற்கடல் கடையும் வேள்வித் தீயின் கொழுந்தாக வெளிப்பட்ட விடத்தின் நீலநிறத்தைத் தம்மை நீலகண்டர் ஆக்கும் சித்திரத்திற்கு உரிய பொருளாகக் கருதித் தம்மால் அறிவுறுத்தப்படும் அடியவர்களுக்கு அறிவிப்பதற்காகப் பெருமான் இந்நிலவுலகிற்கு வந்து மேகங்கள் ஒலிக்கும் சோலைகளை உடைய நறுமணங் கமழும் கெடில நதிக்கரையினதாக அதிகை வீரட்டத்து உள்ளார் .

07 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இரைக்கும் புனல்செஞ் சடைவைத் தவெம்மான்றன்
புரைக்கும் பொழிற்பூம் புகலிந் நகர்தன்மேல்
உரைக்குந் தமிழ்ஞான சம்பந் தனொண்மாலை
வரைக்குந் தொழில்வல் லவர்நல் லவர்தாமே.
 
                     - திருஞானசம்பந்தர் (1-30-11)

 

பொருள்: இரைக்கும்  கங்கை நீரைத் தமது சிவந்த சடைமீது வைத்த எம் தலைவனாகிய சிவபிரானின்,  சோலைகளால் சூழப்பட்ட அழகிய புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.

06 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்டவர் இதுமுன்பு அண்ணல்
உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.
 
                      - எறிபத்தநாயனார் புராணம் (23)
 
பொருள்:  யானையைக் கண்ட எறிபத்தர், இவ்யானை முன்பு சிவபெருமான் உரித்த அந்த யானை போன்றதாகும்; ஆயினும் விண்ணவரும் மண்ணவரும் வந்து தடுப்பினும் மேற்சென்று எதிர்த்துக் குருதி சிதறுமாறு வெட்டிக் கொன்றுவிடுவேன் என்று ஒளி பொருந் திய மழுவினை வலமாகத் திரித்து வீசிக் கொண்டு, மேலெழுந்து அவ்யானை குலுங்குமாறு பாய்ந்தார்.

05 August 2014

மயிலை கபாலீஸ்வரர் கோயில் ஆடி மற்றும் பன்னிரு திருமுறை விழா நிகழ்வுகள்

மயிலை கபாலீஸ்வரர் கோயில் ஆடி மற்றும் பன்னிரு திருமுறை விழா நிகழ்வுகள்



 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர்
அரும்ப முகம்மலர
அஞ்செங் கரதலங் கூம்பஅட்
டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்
லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத்
தான்பெரு வானகமே.
 
              - சேரமான்  பெருமாள் நாயனார் (11-6-11)

 

பொருள்: மனம், வறட்சியால் வாடிய செடியாகாது, அன்பென்னும் நீரால் குளிர்ந்த செடியாகித் தளிர்க்க, அதினின்றும் தோன்றுகின்ற குருத்து அரும்புவதன் அறிகுறியாக அழகிய, சிவந்த கைகள் குவிந்து தோன்ற அக்கருத்தில் அன்பாகிய தேன் ததும்புவ தாகக் கண்களில் நீர் ததும்ப, அரும்பிய கருத்து மலர்வதாக முகம் மலர, மலர்ந்த கருத்துக்களை வெளிப்படத் தெரிவிக்கின்ற, தமது சொற்க ளாகிய மலர்களைத் தொடுத்த பாக்களாகிய மாலைகளை அணிவித்து, எட்டுறுப்புக்களாலும் அடிபணிய வல்லவர்க்கு என்றே நீண்ட சடையையுடையவனாகிய சிவபெருமான் சிறிதும் கர வில்லாமல் தனது பெரிய சிவலோகத்தை நன்றாகப் படைத்து வைத்தான்.

04 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
 
                     - திருமூலர் (10-4-14)

 

பொருள்: சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச் சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.