27 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே.
 
            - திருஞானசம்பந்தர் (1-37-9)

 

பொருள்: சிவபெருமானிடம் வரங்களைப்பெறுதலை எண்ணி மகிழ்வோடு புறப்பட்டு வரும் அடியவர்களே, அப்பெருமான் திருமுன் தலை தாழ்த்தி வணங்குங்கள்; எளிதில் நல்வரம் பெறலாம். பிரமனும் திருமாலும் அறியாத அப்பரமன் உறையும் ஊர் திருப்பனையூராகும்.

26 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பான்மையில் சமைத்துக் கொண்டு
படைக்கலம் வினைஞர் ஏந்தத்
தேனலர் கொன்றை யார்தம்
திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம்
ஆக்கிட அவர்க்கே பின்னும்
கானஊன் அமுத மாக்கும்
சிலையினைக் காப்புச் சேர்த்தார்.

            -கண்ணப்ப  நாயனார் புராணம் (32)

 

பொருள்: விழா எடுத்தற்குரிய முறையில் பணியாளர்கள் வில்லினை ஏந்த, தேன் பொருந்த அலரும் கொன்றையை அணிந்த சிவபெருமானுடைய சிவந்த பொன்மயமான மேருமலையானது முன்னர்ப் பாற்கடலில் மத்தாகக் கடைந்தபோது அவருக்கு நஞ்சை எடுத்து உண்ணும்படி கொடுத்ததற்குத் தீர்வாக, அப்பெருமானுக்குப் பின்னர், இம்மலையின்கண் ஊன் ஆகும் அமுதைக் கொடுக்க இப்பொழுது திண்ணனார் கையில் வில்லாயிற்று எனக் கூறுமாறு அமைந்த அவ் வில்லிற்குக் காப்புக்கட்டினர்.

25 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்

                - சேரமான் பெருமாள் நாயனார் (1,2)

பொருள்: மாலும், அயனும் தேடி அடைய முடியாதவனாய் நின்ற பெருமான், பிறக்காமல் தோன்றி, காணமல் கண்டு துறவாதே துறந்தவன்.  

24 February 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.
 
                       - திருமூலர் (10-7-5)

 

 பொருள்:பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்வது இல்லை.
 

23 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்
கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே.
                    
                     - கருவூர்த்தேவர் (9-17-10)

 

பொருள்:  மெய்யுணர்வு இல்லாத மக்கள் இருகண்களும் ஒருசேர மூடி உறங்கும் இருள் செறிந்த பெரிய நடுஇரவிலே, விழித்துக்கொண்டிருக்கும் ஒருவனுடைய கண்களில் மாத்திரம் சிவந்த சுடரின் வெளிச்சம் கலந்தாற்போல, இறைவனுடைய திருவருளில் கலந்து மெய்ம்மையை உணர்ந்த கருவூர்த்தேவர் வழங்கும் கரும்பு போன்ற இனிய தமிழ்மாலையைப் பெரிய சோலை களில் மருத யாழ் ஒலியோடு பாட, அதனைக் கேட்கவரும் நீலகண்ட னாகிய, பல அண்டங்களிலும் உள்ள தேவர்கள் எல்லோருக்கும் தலைவனான சிவபெருமான், உகந்தருளியுள்ள இடம் திருஇடை மருதூரே ஆகும்

20 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இணையார் திருவடிஎன்
தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
                   - மாணிக்கவாசகர் (8-13-1)

 

பொருள்: இரண்டாகிய அரிய திருவடியை, என் தலையின் மீது வைத்தவுடன், இதுவரையில் துணையென்று நினைத்திருந்த உறவினரெல்லாரையும், விட்டு நீங்கினேன். கரைகோலித் தடுக்கப் பட்ட நீர் சூழ்ந்த தில்லைநகர்க் கண்ணதாகிய, அம்பலத்தில் நடிக்கின்ற, நமதுபிறவிக் கடலுக்கு ஓர் மரக்கலம் போல்பவனாகிய சிவபெரு மானது பெருமையைப் புகழ்ந்து பாடி அல்லி மலர்களைப் பறிப்போம்.

19 February 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.
 
              - சுந்தரர் (7-28-5)

 

 பொருள்:கருமை பொருந்திய கண்டத்தையுடையவனே , யானையின் தோலைப் போர்த்தவனே , கையின்கண் பொருந்திநிற்கும் , படமெடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம்போல்பவனே , நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய் ; அங்ஙனம் புகுந்ததன்றி இதுகாறும் வெளிப் போந்தறியாய் ; ஆதலின் , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !

17 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கமழ்தரு சடையி னுள்ளாற் கடும்புன லரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத் தன்னடி பலரு மேத்த
மழுவது வலங்கை யேந்தி மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த விடைமரு திடங்கொண் டாரே.
 
                     - திருநாவுக்கரசர் (4-35-8)
 
பொருள்: பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை , பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் உமை பாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் இடமாக கொண்டார்  .

16 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-37-2)

 

பொருள்: எண்ணம்  ஒன்றி நினைந்த அடியார்களின் உள்ளத் துள்ளே இருந்து அவர்தம் வழிபாட்டை ஏற்று மகிழ்கின்ற சிவபெருமானது தலம், தேன் பொருந்திய மலர்களோடு உயர்ந்துள்ள சோலைகளில் வண்டுகள் பண்ணொன்றிய ஒலி செய்யும் பனையுரே ஆகும். 

13 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்ணலைக் கையில் ஏந்தற்
கருமையால் உரிமைப் பேரும்
திண்ணன்என் றியம்பும் என்னத்
திண்சிலை வேட ரார்த்தார்
புண்ணியப் பொருளா யுள்ள
பொருவில்சீர் உருவி னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள்
கலன்பல வணிந்தா ரன்றே.

               -கண்ணப்பநாயனார் புராணம்  (17)

 

பொருள்: தலைமைசான்ற அக்குழந்தையை நாகன் கையில் எடுத்து ஏந்துவதற்கு அருமையாக இருத்தலால், இக்குழந்தைக்கு உற்றபேரும் ``திண்ணன்`` என்று அழையுங்கள் என்னலும், வலிமை பொருந்திய வில்வேடர் யாவரும் பேரொலி செய்து மகிழ்ந்தார்கள். அதுபொழுது புண்ணியத்தின் பொருளாய் நின்ற தனக்கு நிகரில்லாத சிறப்பினையுடைய அக்குழந்தைக்கு, அங்குள்ள வேடர்கள் தங்கள் கண்ணிற்கு அழகு பொருந்தத் தங்களிடத்துள்ள பல அணிகலன் களையும் அணிவித்தார்கள்.

12 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தாழ்ந்து கிடந்த சடைமுடிச்
சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை
போல்அய் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல்
திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி
லாதிவ் விரிகடலே.
 
               - சேரமான் பெருமாள் நாயனார் (11-7-30)

 

 பொருள்: தாழ்ந்து தொங்குகின்ற சடைமுடியை உடைய, சங்கரன் திருவடிகளை வணங்காமையால் துன்பத்தில் ஆழ்ந்து கிடந்து வருந்துவாரது சுற்றம் போல வருந்துகின்ற என்பொருட்டு இரங்கி இந்த அகன்ற கடல் தன்னைச் சூழ்ந்து கிடக்கின்ற கரைமேல் அலைகளாகிய கையை அடித்து அடித்து, தரைமேல் வீழ்ந்து, வாய்விட்டு அலறிக் கொண்டு உறங்காமல் உள்ளது.

11 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.
 
                 - திருமூலர் (10-7-1)

 

பொருள்: நாள்தோறும், கிழக்கில் தோன்றும் ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்

10 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற்
படிவழி சென்றுசென் றேறிச்
சிந்தையுந் தானுங் கலந்ததோர் கலவி
தெரியினுந் தெரிவுறா வண்ணம்
எந்தையுந் தாயும் யானுமென் றிங்ஙன்
எண்ணில்பல் லூழிக ளுடனாய்
வந்தணு காது நுணுகியுள் கலந்தோன்
மருவிடந் திருவிடை மருதே.
 
                    - கருவூர்த்தேவர் (9-17-5)

 

பொருள்: உலகியல் கட்டுக்களையும், அவற்றிலிருந்து விடுதலை பெறுதலையும் ஆராய்கின்ற பொருள் பற்றிக் கூறுகின்ற தத்துவ சாத்திரங்களாகிய படிவழியில் பலகாலும் ஈடுபட்டுச் சென்றபின் சிவநெறி எய்தி என் சிந்தையும் தானும் கலந்த கலவி யானது ஆராய்ந்தாலும் விளங்காதபடி என் தந்தையேயாகியும், என் தாயேயாகியும், யானே ஆகியும், இவ்வாறு பல ஊழிக்காலங்கள் உடனாகி, வேறாய் நின்று பின்னர் வந்து ஒன்றாய்க் கலவாது பண்டே சித்துப் பொருளாகிய உயிரினும் நுண்ணியனாய் ஒன்றாய் இருந்து பின்னர் விளங்கித்தோன்றும் இடம் திருஇடைமருதூராகும்.

09 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருந்தவருக் காலின்கீழ்
அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது
எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான்
கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை
தெரியாகாண் சாழலோ.
 
                    - மாணிக்கவாசகர் (8-12-20)

 

பொருள்: சனகாதியர்க்கு ஆல மர நீழலிருந்து அறம் முதலியவற்றை அருள் செய்த வரலாறு எற்றுக்கு? என்று புத்தன் வினாவ, அறம் முதலியவற்றை இறைவன் அருள் செய்யாவிடின் அவர்கட்கு உலக இயற்கைகள் தெரியமாட்டா என்று அப்பெண் கூறினாள்.

06 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.
 
              -சுந்தரர்  (7-28-1)

 

பொருள்: திருநீறு  நிறைந்த திருமேனியை உடையவனே , புரியாகிய நூல் , ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற் பொருந்தி விளங்க , கூர்மை பொருந்திய மூவிலை  வேல்   நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லது வேறு யார் துணை !

05 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முந்தையார் முந்தி யுள்ளார் மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார் சிவநெறி யனைத்து மானார்
எந்தையா ரெம்பி ரானா ரிடைமரு திடங்கொண் டாரே.
 
                - திருநாவுக்கரசர் (4-35-2)

 

பொருள்:  அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய் , அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய் , தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய் , மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய் ,  தந்தையாராய், தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய் எம் ஈசன் இடைமருதை இடங்கொண்டவராவர் .

04 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே.
 
           - திருஞானசம்பந்தர் (1-36-10)

 

பொருள்: துவராடை தரித்த புத்தர், ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர் ஆகியவரின் மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய தேவர்களோடு வந்தணைந்து வழிபடும் தலம் திருவையாறாகும்.

03 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அந்நின்ற தொண்டர்
திருவுள்ளம் ஆரறிவார்
முன்னின்ற பாதகனும்
தன்கருத்தே முற்றுவித்தான்
இந்நின்ற தன்மை
யறிவார் அவர்க்கருள
மின்னின்ற செஞ்சடையார்
தாமே வெளிநின்றார்.
 
                 - ஏனாதி நாயனார் புராணம் (40)

 

பொருள்: அவ்வாறு நின்ற திருத்தொண்டரின் திரு வுள்ளத்தை அறிவர் யார் ? முன்னின்ற கொடியோனாகிய அதிசூரனும் தான் நினைத்தவாறே முடித்தனன். இத்தன்மையினை அறிவாராகிய இத்திருத்தொண்டருக்கு அருளும் பொருட்டு மின் போன்ற செஞ்சடையினையுடைய சிவபெருமானும் தாமே வெளிப் பட்டுத் தோன்றி நின்றருளினார்

02 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்க
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போல்ஒருவன் வந்து.
 
              -சேரமான் பெருமாள் நாயனார்  (11-7-11)

 

பொருள்: தேவர்கள் வணங்கித் தனது சந்நிதியை அடைகின்ற, நெருங்கிய கழல் அணிந்த திருவடியை உடையவனும், மூன்று கண்களை உடையவனும், நான்கு வேதங்களின் முதல்வனும் ஆகிய சிவபெருமான்தன் மைந்தனாகிய முருகன்போன்ற ஒருவன் நமது அழகிய புனத்திலே வந்து, பொழுது போய்விட்டாலும் தான் போகாது, யாவரும் இகழும்படி காத்து நிற்கின்றான்; ஓவியத்தில் எழுதப்பட்டது, போன்ற அழகுடைய கொடிபோலும் இடையை உடையவளே!