30 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

                     -திருநாவுக்கரசர்  (4-80-3)


பொருள்: தொடுத்த  மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு , எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ !

27 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கலிகெழுபாரிடை யூரெனவுளதாங் கழுமலம்விரும்பிய கோயில்கொண்டவர்மேல்
வலிகெழுமனமிக வைத்தவன்மறைசேர் வருங்கலைஞானசம் பந்தனதமிழின்
ஒலிகெழுமாலையென் றுரைசெய்தபத்து முண்மையினானினைந் தேத்தவல்லார்மேல்
மெலிகெழுதுயரடை யாவினைசிந்தும் விண்ணவராற்றலின் மிகப்பெறுவாரே.

                         -திருஞானசம்பந்தர்  (1-79-11)


பொருள்: ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப் போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவரிடம், உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும், வேதங்களிலும் கலைகளிலும் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன், இசையோடு பாடிய மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும், உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை, மெலிவைத்தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும், விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்.

25 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறந்தருதீ நெறிமாற
மணிகண்டர் வாய்மைநெறி
அறந்தருநா வுக்கரசும்
ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால்
நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித்
திறம்பாடுஞ் சீர்ப்பாடு.

             -திருநாவுக்கரசர் புராணம்  (11)


பொருள்: பாவத்தை விளைவிக்கும் தீயநெறியானது மாறுமாறு, கரியகழுத்தைக் கொண்ட சிவபெருமானின் மெய்ம்மை யான சிவநெறியை உலகிற்கு விளக்க வரும் திருநாவுக்கரசரும், ஆலாலசுந்தரரும் தோன்றியருளியது இந்நாடு என்றால், இப் பேருலகில் சிறந்த திருமுனைப்பாடி நாட்டின் திறத்தைப் பாடும் இயல், நம் அறிவளவில் அடங்குவதோ? அடங்காது.

23 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.

              -திருமூலர்  (10-2-24,2)


பொருள்:  கொல்லையில் நின்று ஆடும் கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.

19 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விண்ணிறந் தார்நிலம் விண்டவ
ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.

            -திருக்கோவையார்  (8-12,18) 


பொருள்: விண்ணைக்கடந்தவர் நிலத்தைப் பிளந்தவ ரென்று சொல்லப்படும் பெரியோரிருவருடைய கண்ணைக்கடந்தார்; தில்லை அம்பலத்தார் தில்லையம்பலத்தின் கண்ணார்; அவரது கழுக்குன்றின்கணின்று தண்ணிதாகிய நறிய தாது பரந்த சந்தனச் சோலையிடத்துப் பந்தாடுகின்றார் இறப்பப்பலர்; நினதருள் அவருள் யார்கண்ணதோ? கூறுவாயாக

18 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு வேந்தியொர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே

                -சுந்தரர்  (7-72-3)


பொருள்: நீறணிந்த மேனியை யுடையவனும் , சினங் காரண மாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும் , பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும் , நீரை அணிந்த , ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய , இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம் , திருவலம்புரம் ஆகும் 

17 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே.

                  -திருநாவுக்கரசர்  (4-79-2)


பொருள்: மனைவி , மக்களை பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில் ஈடுபடாது , தவம் என்பதனை உணராது , நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப் பாதுகாப்பதற்கே முயல்கின்றேன் .  என்ன செய்வதற்காகப் பிறந்தேன்  நான் ?

16 April 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர்
பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும் படர்சடையடிகளார் பதியதனயலே
வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு மறிகடற்றிரைகொணர்ந் தெற்றியகரைமேற்
கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

                 -திருஞானசம்பந்தர்  (1-79-2)


பொருள்: மேகம் நீல மலர் ஆகியன போன்ற அழகியமிடற்றை உடையவரும், கயிலைச் சிகரத்தில் உறைபவரும், உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும், முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும், அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி, பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண், இலவங்கம், சங்குகள் சுறா ஆகியனவற்றைக் கொணர்ந்து வீசும் கரைமேல் நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும். அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

13 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்.

                   -திருநாவுக்கரசு நாயனார் புராணம்  (1) 


பொருள்: திருநாவுக்கரசர் எனவும், சிவபெருமானின் திருத் தொண்டு வளர்வதற்குக் காரணமான நெறியில் நின்று உலகம் வாழும் பொருட்டு வரும் ஞானத்தவ முனிவரான வாகீசர் எனவும், வாய்மை விளங்குவதற்கு ஏதுவான பெருமையுடைய திருப்பெயரின் சிறப்பு களை, இப்பேருலகின்கண் எடுத்துக் கூறுதற்கு ஒரு நாவுக்கும் இய லாமையை உணராதவனாகிய எளியேன், போற்றத் துணிகின்றேன்.

12 April 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. 

           -திருமூலர்  (10-2-24,1)


பொருள்: பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.

11 April 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.

                  -மாணிக்கவாசகர்  (8-12,1)


பொருள்:  அந்தியின்கண் உண்டாகிய செவ்வானெ ழிலையுடைய அம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனது அழகிய பொன்னையுடைய வெற்பிடத்து;  பந்தியாகிய நிரையின்கட் செவ்வித்தேனோடும் பலாச்சுளையை;  கடுவன் மந்தியினது வாயில் அருந்தக்கொடுத்துப் பாதுகாக்குஞ் சிலம்பை யுடையாய்;  நீயே சென்றுமொழி அவள் மனநெகிழ விரைந்து இவ்வினிய வாய்மொழிகளை அம்மொய்த்த குழலையுடையாட்கு நீயே சென்று சொல்லுவாயாக

10 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே

                   -சுந்தரர்  (7-72-1)


பொருள்: எனக்கு இனியவனும் , தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும் , எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம் , பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள , ` திருவலம்புரம் ` என்னும் தலமே எனக்கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந் தேனாயினேன் .

09 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வெட்டன வுடைய னாகி வீரத்தான் மலையெ டுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய வாதியை யோதி நாளும்
எட்டனை யெட்ட மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

                -திருநாவுக்கரசர்  (4-78-10)


பொருள்: கடும் போக்கு உடையனாகி , தன் வீரத்தைக் காட்டக் கயிலை மலையைப் பெயர்க்கத் தொடங்கிய தீயவனாகிய இராவணனின் செருக்கை அடக்கி அவன் வாயினின்றும் சுவையாகச் சாம வேதகீதம் கேட்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி அவனை எள்ளளவும் அணுகமாட்டேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

06 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மடைச்சுரமறிவன வாளையுங்கயலு மருவியவயறனில் வருபுனற்காழிச்
சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல் சரிதைகள்பரவிநின் றுருகுசம்பந்தன்
புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற் புணர்மடநடையவர் புடையிடையார்ந்த
இடைச்சுரமேத்திய விசையொடுபாட லிவைசொலவல்லவர் பிணியிலர்தாமே.

                     - திருஞானசம்பந்தர் (1-78-11)


பொருள்: மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங் களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர்.

04 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்
ஈறி லாதார் தமக்கன்பு
தந்த அடியார் செய்தனவே
தவமா மன்றோ சாற்றுங்கால்.

             - சண்டேசுவர நாயனார் புராணம் (59) 


பொருள்: தம்பால் வந்து மிகவும் கொடிய செயலைச் செய்த தந்தையின் கால்களை, மழுவாயுதத்தால் வெட்டிய மறைச்சிறுவர், அவ்வுடலுடனேயே சிவபெருமானின் திருமைந்தர் ஆயினார். இந் நிலைமையை யாவரே அறிந்தார்? ஒருவரும் அறியார். இவ் வரலாற்றால் செய்யத் தக்கது ஒன்று உண்டு என்றால் அஃது, ஈறில்லாத சிவபெருமானிடத்து முழு அன்பினையும் செலுத்திய அடியவர்கள் செய்தனயாவும் தவமாகும் என்பதேயாம்.

03 April 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே. 

             -திருமூலர்  (10-2-23,2)


பொருள்: சிவனடியாரது உள்ளம் எவ்வாற்றாலேனும் நோகு மாயின். அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக நாடும், அதன் சிறப்புக்களும் அழிதலேயன்றி விண்ணுலக வேந்தன் ஆட்சி பீடத் துடன் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்தொழியும். இஃது எங்கள் நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.

02 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தேமென் கிளவிதன் பங்கத்
திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.

             -திருக்கோவையார்  (8-12,1) 


பொருள்: தேன்போலும் மெல்லிய மொழியையுடை யாடனது கூற்றையுடைய இறைவனுறையுந் தில்லையை யொப்பீர்; யான் கொணர்ந்த பூவையுடைய மெல்லிய தழையையும் அழகிய பூக்களையுங் கொள்கின்றிலீர்; உணர்விழந்த யான் றனிமைப்படச் செய்யத்தகாத பொறுத்தற்கரிய கொடுமைகளைச் செய்யத்தகு மென்று துணிந்து செய்து; நுங் கண்மலராகின்ற காமன் கணை கொண்டு அருளத்தக்காரை அலைத்தலையோ முடியக் கற்கப்பட்டது, நும்மால் அருளுமாறு கற்கப்பட்ட தில்லையோ!