31 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அப்போதுவந் துண்டீர்களுக்
கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டால்எமை
எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில்
என்றோடிஅக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி
சீபர்ப்பத மலையே

                -சுந்தரர்  (7-79-7)


பொருள்: தினைப்புனத்தைக் காக்கின்ற , கிண்ணம் போலும் , உயர்ந்து தோன்றும் , இளமையான தனங்களையுடைய குறமகள் , தினையை உண்ண வந்த கிளிகளைப் பார்த்து , ` முன்னே வந்து தினையை உண்ட உங்களுக்கு இரங்கி , உங்களை அதட்டாது அப்போது வாளா இருந்தேன் ; ஆயினும் , நீவிர் இடையறாது வந்து தினையை உண்டால் எங்களை , எங்கள் உறவினர் வெகுள மாட்டார் களோ ? ஆதலின் இப்போது உமக்குச் செய்யத் தக்க செயல் இதுதான் ` என்று சொல்லி , அவைகளைக் கவணால் எறிகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபெருமானது மலை .

29 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

               - திருநாவுக்கரசர் (4-88-2)


பொருள்: பழனத்து அரசே !  எல்லா  திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர் . நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர் . திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர் . இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ , அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு அருள் செய்வாயாக .

26 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரி லாடும் மடிகளே.

                 -திருஞானசம்பந்தர்  (1-87-2)

 

பொருள்: பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, என்புமாலை ஆகியவற்றை ஒளிமல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.

24 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அப்பெருங் கல்லும்அங்
கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில்
செறித்த பாசமும்
தப்பிய ததன்மிசை
இருந்த தாவில்சீர்
மெய்ப்பெருந் தொண்டனார்
விளங்கித் தோன்றினார்.

                    -திருநாவுக்கரசர் புராணம்  (128)


பொருள்: சொற்றுணை வேதியன்  என்ற பதிகம் பட ,அப்பெரிய கல்லும், அங்குத் திருநாவுக்கரசர் அதன்மீது வீற்றிருக்கத் தெப்பமாக மிதக்க, அவரது திருமேனியைப் பிணித்திருந்த கயிறும் அறுபட்டது. அக்கல்லாகிய தெப்பத்தின் மேல் வீற்றிருந்த கெடுதல் இல்லாத சிறப்பினையுடைய மெய்ப் பெரும் தொண்டரான நாவரசரும் விளங்கித் தோன்றினார்.

23 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

                   -திருமூலர்  (10-3-10,8)


பொருள்: தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.

22 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.

            -திருக்கோவையார் (8-23,6)


பொருள்:  புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி;  அயனையன்று சிரமரிந்த வனது பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு;  தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று;  மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி உயிர்கவர வெகுண்டு;  வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும்

19 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாவின்மிசை யரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே

            - சுந்தரர் (7-78-10)


பொருள்: தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும் , திரு ஞானசம்பந்தரும் , மற்றவர்களும்  , சிவனடியார்களுக்கு அடிய னாகி , அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன் , இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய , இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவ லோகத்தில் இருப்பவராவர் .

17 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அடுத்திருந் தாயரக் கன்முடி வாயொடு தோணெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

                     -திருநாவுக்கரசர்  (4-87-10)


பொருள்: பழனத்து அரசே ! இராவணன் கயிலையைப் பெயர்க்கத் தொடங்கும் வரையில் அருகிலேயே இருந்து அவன் செயற்பட்ட அளவில் அவனுடைய முடிகள் வாய் கண் தோள்கள் என்பன நெரிந்து சிதறுமாறு கால்விரலால் அழுத்தி அவன் செருக்கைக் கெடுத்தாய் . செருக்குற்று எழுந்தவருடைய வலிமையை அவர்களைச் சேர்ந்தவர்களுடைய வலிமையோடும் கெடுத்தாய் . புலித்தோலை ஆடையாக உடுத்துள்ளாய் . அத்தகைய நீ அடியேனையும் குறித்து மனத்துக் கொண்டு அருளுவாயாக .

16 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்ச மலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சு மடியார்கட் கில்லை யிடர்தானே.

                - திருஞானசம்பந்தர்  (1-86-10)


பொருள்: மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய், நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை. 

15 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தண்டமிழ் மாலைகள் பாடித்
தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச்
சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசை யோர்களுங் காண
இறைஞ்சி எழுந்தது வேழம்.

               -திருநாவுக்கரசர் புராணம்  (117)


பொருள்: தமிழ் மாலைகளைப் பாடித் தம் இறை வரையே சரணாகக் கொண்ட கருத்துடன் இருந்து விளங்கிய அன்பு பொருந்திய கொள்கையுடைய திருத்தொண்டரை,  வலமா கச் சுற்றி வந்து, எதிரில் தாழ்ந்து, எல்லாத் திக்குகளில் உள்ள வரும் காணும்படி அவ்யானை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்றது.

11 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை 


பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே. 

               -  திருமூலர்  (10-3-10,2)


பொருள்: சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.

09 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.

             -திருக்கோவையார் (8-22,2) 


பொருள்:  மிக்க விருப்புறுமவரை விண்ணோரினு மிகச் செய்து;பகைவர் மாய விதிர்க்கப்படுஞ் சூலவேலையுடையவனது தில்லையை யொக்குந் திருநுதால்!; பொருப்பைச்சேர்ந்த மயில்போல்வாய்;  தீயையுற்ற வெண்ணெயும் நீரையுற்றவுப்பும் போல; இவ்வாறுருகித் தனிமையுறாதொழி; அன்பர் போக்குப் பொய் அன்பர்போக்குப் பொய் என்றவாறு 

08 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வாழ்வாவது மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக்
கேதாரமெ னீரே

               - சுந்தரர் (7-78-1)

 

பொருள்: உலகீர் , பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின் , இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; அதன் பொருட்டு , நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள் ; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும் , வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

03 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நஞ்சும்அமு தாம்எங்கள்
நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார்
வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந்
திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த
பாலடிசில் மிசைந்திருந்தார்.

               -திருநாவுக்கரசர் புராணம்  (104)


பொருள்: சிறந்த சடையையுடைய சிவபெருமானுடைய சீர்களை உலகத்தில் விளக்கும் ஆற்றலுடைய நாவரசர், வஞ்சனை மிகுந்த மனமுடைய சமணர்களின் வஞ்சனையால் அமைக்கப்பட்டது என்பதை அறிந்தே, `எம் இறைவனின் அடியவர்க்கு நஞ்சும் அமுத மாகும்` என்ற உறுதிப்பாடு உடையவராய், கொடிய சமணர்களால் கொடுக்கப்பெற்ற நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டு யாதொரு குறை பாடும் இல்லாது இருந்தார்.

01 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

                  -திருமூலர்  (10-3-9,1)


 பொருள்: சமாதி என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏனை உறுப்புக்களில் வழுவாது நிற்றலாலே வாய்ப்பதாம். இச்சமாதி யேயன்றி அட்டமாசித்திகளும், இயமம் முதலிய அவ்வுறுப்புக்களால் விளையும். இத்துணைச் சிறப்புடைய இயமம் முதலியவற்றை முற்றிச் சமாதியில் நிலைபெற்றவர்க்கேயன்றோ யோகம் முற்றுப்பெறுவது!