28 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

               -சுந்தரர்  (7-65-5)


பொருள்:  தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும் , செல்வத்தை யுடைய , அழகிய திருநின்றி யூரில் உள்ள இறைவனே , இந்திரன் ஒருவன் , உன்னிடத்து வந்து உன்னை வழிபட , அதற்கு மகிழ்ந்து , அவனுக்கு , ` நீ , விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய தலைமையையும் , ` காலை , நண் பகல் , மாலை ` என்னும் மூன்று சந்திகளிலும் , இலிங்க உருவத்தை நிறுவி , கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு , அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற , அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து , அடியேன் , உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

27 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலும்
காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் நாகவீச் சரவ னாரே. 

                -திருநாவுக்கரசர்  (4-66-2)


பொருள்: திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.

26 July 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர் கண்டத்தர்
இடியகுரலா லிரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே.


                         -திருஞானசம்பந்தர்  (1-68-1)


பொருள்: இடி ஓசை  கேட்டு அஞ்சிய சிங்கங்கள், நிலைகெட்டு ஓடத்தொடங்கும் சாரலை உடைய கயிலைமலையில் வாழும் இறைவர், திருநீறு பூசிய திருமேனியை உடையவர். புலியின் தோலை உடுத்தவர். முப்புரிநூல் விளங்கும் மார்பில் மணம் கமழும் கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்தவர். விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர். விரைந்து செல்லும் விடைமீது ஏறி அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே தம் கொடியாகக் கொண்டவர்.

25 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அன்றிரவு கண்துயிலார்
புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிஅணை தருதன்மை
உறுகுலத்தோ டிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான்
ஏவலெனப் போக்கொழிவார்
நன்றுமெழுங் காதல்மிக
நாளைப்போ வேன்என்பார்.

                     -திருநாளைப்போவார்  நாயனார்  (21)


பொருள்:  இரவு முழுவதும் கண்துயிலாது இருந்தவர், விடிந்ததும்,தாம் புறப்படலாமென நினைவுற்றபொழுதுபெருமானின் திருமுன்பு சென்று ஒன்றி வழிபடும் பேறு இக்குலத்திற்குப்பொருந்து வதாயில்லை என்னும் இந்நினைவும் அப் பெருமானின் அருள்வழி யதே, என்று எண்ணியவர், தாம் அங்குச் செல்வதை விடுத்தார். ஆயினும், தில்லைப் பெருமன்றில் பெருமானைக்கண்டு வழிபடும் உணர்வு மேல் எழ, நாளைப் போவேன் என்பார்

21 July 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. 

                    -திருமூலர்  (10-2-13,1)


பொருள்: காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் என்னும் ஐம்பெரும் பூதங்களும் இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு அவிழ்த்து வெளிவிடுகின் றான் சிவபெருமான்.

20 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சொல்லிய லாதெழு தூமணி யோசை
சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி
தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த
பராபர மாகாதே
பண்டறி யாதப ராநுப வங்கள்
பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று
விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள்
இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை
எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள
எழுந்தரு ளப்பெறிலே. 

                   -மாணிக்கவாசகர்  (8-49-7)


பொருள்: சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான், எங்களை ஆளும்பொருட்டு எழுந்தருளப் பெற்றால் சொல்லுவதற்கு முடியாதபடி உண்டாகின்ற, தூய்மையான மணி ஓசை இன்பத்தைத் தருதல் ஆகாது போகுமோ? மிக விரைவாக, என் உள்ளத்தில் பொருந் திய சோதி இடைவிடாது வளர்தல் ஆகாது போகுமோ? பல வகையான மன அலைவு கெடும்படி வந்தருளின, பரம்பொருளினது பயன் உண்டாகாது, போகுமோ? முற்காலத்திலும் அறிந்திராத மேலான அனுபவங்கள் விரிந்து தோன்றுதலும் உண்டாகாது போகுமோ? வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடைய பெண் களது ஆசை போன்றதோர் ஆசை, இப்பொழுது முடிவு உண்டாகாது போகுமோ? தேவரும் அறியாத மேன்மையான பொருள் இந்தப் பொருள்தான் என்ற உணர்வு தோன்றாது போகுமோ? வரம்பு இல்லாதனவாகிய எண் குணங்களானவை என்னிடத்துப் பொருந்துதல் ஆகாது போகுமோ?

19 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திருவும் வண்மையுந் திண்டிற லரசுஞ்
சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி யடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே

                 -சுந்தரர் (7-65-1)


பொருள்: பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர் கொண்டுவந்த மணிகளை , சிறுமகாரது பல குழுக்கள் , விளையாட்டிற் சென்று எடுத்து , தெருக்களிலும் , திண்ணைகளிலும் , முற்றங்களிலும் குவிக்கின்ற , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , நீ , சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு , அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு , செல்வத்தையும் , கொடைத் தன்மையையும் , திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு , அடியேன் உனது மலர் போலும் திரு வடியைப் புகலிடமாக அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

18 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித் தூயவாய்க் கலச மாட்ட
உவப்பெருங் குருதி சோர வொருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.

                       -திருநாவுக்கரசர்  (4-65-8)


பொருள்:  பெரிய தோளினை உடைய திண்ணனார் , ஒரு கையில் வில்லும் , மறு கையில் இறைச்சிப் பாரமுந் தாங்கியிருந்தமையால் காளத்திப் பெருமானுக்கு முன்பு சூட்டப் பட்டிருந்த பூக்களைச் செந்நிறம் பொருந்திய தம் காற் செருப்பினால் நீக்கித் தன் தூய வாயாகிய கலசத்தில் மொண்டு வந்த நீரினால் அப் பெருமானுக்கு அபிடேகம் செய்து பூசிக்க , அதனை உவந்த பெருமான் தம் கண்ணில் உதிரம் ஒழுகச் செய்ய , ஓரம்பினால் தம் கண்ணைப் பெயர்த்துக் குருதி சோரும் கண்ணில் அப்பவே , திண்ணனாரை மிகப் பெரிய தெய்வமாகச் செய்துவிட்டார் சாய்க்காடு மேவிய பெருமான் .

17 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வீளைக்குரலும் விளிச்சங்கொலியும் விழவின் னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார்
ஈளைப்படுகி லிலையார்தெங்கிற் குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே.

                        -திருஞானசம்பந்தர்  (1-67-6)


பொருள்:  ஆற்றுக்கரையில்  வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும், வாழை மரத்தில் பழுத்த வாழைப்பழங்களும், பாளைகளையுடைய கமுகமரங்களில் பழுத்தபாக்குப் பழங்களும் விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும் சங்கொலியும், விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர். அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.

14 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சீரேறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும்
எனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க்
கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கஅருள்
புரிந்தருளிப் புலப்படுத்தார்.


                     - திருநாளைப்போவார்  நாயனார் (17)


பொருள்: திருப்புன்கூர் அடைந்த நந்தனார், தாம் கோயிலின் திருவாயிலின் முன்பு நின்று சீர்பெருகும் இசைபாடி, கண்ணால் நேர்பெறக் கண்டு கும்பிட வேண்டும் என நினைந்த வருக்கு, வேண்டியவர்க்கு வேண்டியவாறே அருள் கொடுப்பவராய, மேகம் தவழும் பெருமதில் சூழ்ந்த திருப்புன்கூரின்கண் எழுந்தருளி யிருக்கும் கண்ணுதற் கடவுள், தம் திருமுன் மறைத்திருந்த போர் ஏற்றைச் (நந்தியை) சிறிது விலகி இருக்குமாறு அருள் செய்து, அதனால் அவருக்குத் தாம் நேரில் காணுமாறு அருள் புரிந்தார்.

13 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே. 

                    -திருமூலர்  (10-2-12,9)


பொருள்: மண் ஓன்றே கலங்கள் (பாத்திரங்கள்) பலவற்றிலும் பொருந்தி நிற்கின்றது. அதுபோலச் சிவபெருமான் ஒருவனே உயிர் கள் அனைத்தினுள்ளும் நிற்பான். ஆயினும், கண் பிற பொருளைக் காணுமாயினும், தன்னையும், தன்னொடு பொருந்தியுள்ள உயிரையும் காணாததுபோல, உயிர்கள் பிறவற்றை அறியுமாயினும், தம்மையும், தம்மோடு உடனாய் நிற்கின்ற சிவனையும் அறிதல் இல்லை.

12 July 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மண்ணினில் மாயை மதித்து வகுத்த
மயக்கறு மாகாதே
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம்
வணங்குது மாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த
கலக்கறு மாகாதே
காதல்செ யும்அடி யார்மனம் இன்று
களித்திடு மாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த
பிணக்கறு மாகாதே
பேரறி யாத அநேக பவங்கள்
பிழைத்தன ஆகாதே
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை
எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன்
எழுந்தரு ளப்பெறிலே. 

                 -மாணிக்கவாசகர்  (8-49-5)


பொருள்: என்னை ஆளாக உடைய பெருமானும் அருளு கின்ற ஈசனுமாகிய இறைவன் எழுந்தருளப் பெற்றால் உலகினில் மாயா காரியங்களை விரும்பிச் செய்ததனால் உண்டாகிய மயக்க உணர்ச்சியறுதலும் ஆகாது போகுமோ? தேவரும் அறியா திருவடியை வழிபடுதல் ஆகாது போகுமோ? ஆணவ இருளில் அழுந்தி இருந்த  கலக்கமானது அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? அன்பு செய்கின்ற அடியவரது மனமானது இப்பொழுது களிப்புற்றிருத்தல் ஆகாது போகுமோ? பெண் அலி ஆண் என்றும் நிலம், நீர் என்றும், உண்டாகிய மாறுபாடு அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? பெயர் களை அறியாத பல பிறவிகளினின்றும் தப்புதல் முடியாது போகுமோ? எண்ணிலாத அற்புதச் செயல்கள் வந்து என்னை அடைதல், ஆகாது போகுமோ?

11 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து
நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
நாட லாம்புகழ் நாவலூ ராளி
நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
முத்தி யாவது பரகதிப் பயனே

                -சுந்தரர்  (7-64-7)


பொருள்: எல்லையில்லாத , நிலையற்ற பிறவியை வெறுத்து , அதனினின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தெளிவித்து , திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானது திருவடியிணையை நினைத்தற்கு ஆகும் , புகழையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினை யும் பாட வல்லவர் அடையும் இன்ப நிலையாவது , மிக மேலான நிலையாகிய முடிந்த பயனேயாம் .

10 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வடங்கெழு மலைமத் தாக வானவ ரசுர ரோடு
கடைந்திட வெழுந்த நஞ்சங் கண்டு பஃறேவ ரஞ்சி
அடைந்துநுஞ் சரண மென்ன வருள்பெரி துடைய ராகித்
தடங்கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவி னாரே.

                      -திருநாவுக்கரசர்  (4-65-2)


பொருள்: வாசுகியை கயிறாகக்கொண்டு   மந்தர மலையை மத்தாகக்கொண்டு தேவர்கள் அசுரரோடு பாற்கடலைக் கடைய , எழுந்த விடத்தைக் கண்டு பல தேவர்களும் அஞ்சிச் சிவ பெருமானை அடைந்து  அடைக்கலம் என்று வேண்டப் பேரருள் உடையவராய் கடல் நஞ்சினை உண்ட பிரான் திருச்சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளார் .

07 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.

                       -திருஞானசம்பந்தர்  (1-67-1)


பொருள்: நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவுபெற வருவார்.

06 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


போர்வைத்தோல் விசிவார்என்
றினையனவும் புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும்
யாழுக்கும் நிலைவகையில்
சேர்வுற்ற தந்திரியும்
தேவர்பிரான் அர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ
சனையும்இவை அளித்துள்ளார்.


                 -திருநாளைப்போவார் நாயனார்  (14)


பொருள்: போர்வைத்தோலும், இழுத்துக் கட்டும் வாரும், மற்றும் இவ்வாறான பொருள்களும், இசையை வழங்கும் சிறப்பு அமைந்த வீணைக்கும், யாழுக்கும் அவ்வவற்றிற்கேற்ற வகையில் சேர்வுற்ற நரம்புகளும், தேவர் பெருமானின் வழிபாட்டிற்கு ஆர்வத்தி னுடன் கோரோசனையும் ஆகிய இவற்றைக் கொடுத்து வந்தார்.

05 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே. 

              -திருமூலர்  (10-2-12,1)


 பொருள்:சிவன், ஆன்ம அறிவேயாயும், அவ்வறிவுக்கு அறிவாயும், அதனில் சிறிதும் பிரிவின்றியும் அதனோடு யாண்டும் உடனாயே நிற்பினும் அவ்வறிவு மல மறைப்பால் அவனது இருப்பை அறியமாட்டது.

04 July 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பந்த விகார குணங்கள் பறிந்து
மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த
பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள்
அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர்
அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை
சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி
திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர்
ஏகுவ தாகாதே
என்னுடை நாயக னாகிய ஈசன்
எதிர்ப்படு மாயிடிலே.

              -மாணிக்கவாசகர்  (8-49-3)


பொருள்: ஈசன் ஆகிய தலைவன் எதிரே தோன்று வனாயின் பாசத் தொடர்பினால் உண்டாகும்  குணங்கள் அழிவதும் ஆகாது போகுமோ? பாவனை செய்கின்ற மனத்தினில் ஊறுகின்ற மேலான அமுதம் ஆகாது போகுமோ? எல்லையில்லாத உலகப் பொருள்களும் நமது உள்ளத்தில் அகப்படுதல் ஆகாது போகுமோ? எல்லாவற்றிக்கும் முதலான பரஞ்சுடர் நெருங்கும்பழி ஆகாது போகுமோ? மிகச் சிவந்த வாயினையுடைய பெண்களால் வரும் துன்பங்களானவை ஒழிந்து போதல் ஆகாது போகுமோ? சேல் மீன் போன்ற கண்கள் அவனது திருமேனி அழகில் ஈடுபடுதல் ஆகாது போகுமோ? இந்திர சாலம் போன்ற மயக்குகின்ற பிறவித் துன்பம் ஒழிதல் ஆகாது போகுமோ?

03 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

               -சுந்தரர்  (7-64-7)


பொருள்: மனமே , தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது , தவத்தொழிலைச் செய்து , பயனில்லாத சொற்களைப் பேசி , பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே , மக்கள் , பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது ; ஆதலின் , அந்நிலை நின்னின் வேறாய் நிற்க , நீ , தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய , செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று , இவனே , தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக .