30 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணூலர் திரிபுரமெரிசெய்த செல்வர்
வாரணிவனமுலை மங்கையோர்பங்கர் மான்மறியேந்திய மைந்தர்
காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல் கண்ணுதல் விண்ணவரேத்தும்
பாரணிதிகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே.
 
                                -திருஞானசம்பந்தர்  (1-41-1)

 

பொருள்: ஒப்பற்ற  அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச்செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர் நெற்றிக்கண் உடையவர்  விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் ஆவார்.  

29 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

ஊனமுது கல்லையுடன்
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள்
மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு
தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது
தித்திக்கும் எனமொழிந்தார்.
 
                   -கண்ணப்ப நாயனார் புராணம்  (150)

 

பொருள்:  மாமிச அமுதை இறைவனின் திருமுன்னிலையில் வைத்து, எம் ஐயனே! இது முன்னை நாளில் எடுத்து வந்ததினும் நன்றாகும், பன்றியுடன் மான் கலைகள், காட்டுப்பசு ஆகிய இவை களின் நல்லுறுப்புகளின் இறைச்சியும் உள்ளது, அடியேனும் சுவை பார்த்தேன், அத்துடன் தேனும் இவற்றுடன் கலந்துள்ளது, தித்திக்கும், என மொழிந்தார்.

26 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

                        -சேரமான் பெருமாள் நாயனார்  (11-8-197)

25 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.
 
                        -திருமூலர்  (10-11-3)

 

பொருள்: செல்வத்தால்  ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.

24 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே.
 
                   -கண்டிராதித்தார்  (9-20-10)
 
பொருள்: சிறப்பான் மேம்பட்ட தில்லைநகரில் உள்ள செம் பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் சிவபெருமானைப்பற்றி மேகங்கள் பொருந்திய சோலைகளை உடைய உறையூர் மன்னனும், தஞ்சைமாநகரில் உள்ள அரசனும் ஆகிய கண்டராதித்தன் திருவருளோடு கலந்து தெவிட்டாத இனிய சொற்களால் பாடிய அரிய தமிழ்ப் பாமாலையைப் பொருளுணர்ந்து கற்றுப் பாட வல்லவர்கள், ஒருமுறை சென்றால் மீண்டும் அவ்விடத்தினின்றும் திரும்பி நில உலகிற்குப் பிறப்பெடுக்க வாராத வீட்டுலகில் பெருமையோடு பேரானந்தத்தை அடைவார்கள்.

23 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூத்தாரும் பொய்கைப்
புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம்.
 
                  -மாணிக்கவாசகர்  (8-15-1)

 

 பொருள்: மலர்கள் பூத்து இருக்கின்ற தடாகநீர் இதுதான் என்று எண்ணிக் கானலை முகக்கின்ற அறிவிலியினது குணம், எங்களுக்கு உண்டாகாமல் நீக்கினவனே! தில்லை அம்பலத்தில் நடனம் செய்கின்ற கூத்தனே! உனது செம்மையான திருவடியை அடையும்படிஎன்று பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

22 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன்
தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக்
கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே.
 
                            - சுந்தரர் (7-31-10)

 

பொருள்: வெள்ளி விடையை ஏறுகின்றவரும் , யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும் , இடைமருதையும் , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய் , தெளியத் தகுவாரது உள்ளங்கள் தெளிதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினைத் துன்பங்கள்  நீங்கும் , மெய்  குளிர்வார்கள் .

19 June 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

அறிவிலா வரக்க னோடி யருவரை யெடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு மூதறி வாள னோக்கி
நிறுவினான் சிறு விரலா னெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினா லருள்கள் செய்தான் றிருவையா றமர்ந்த தேனே.
 
                                  -திருநாவுக்கரசர்  (4-39-10)

 

பொருள்: இறைவனுடைய ஆற்றலைப் பற்றிய அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்ப்பதற்கு முழுமையாக முயன்ற செயலைக்கண்டு , உண்மையான ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன்போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன் கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன் இறைவனைப் பற்றிய அறிவோடு  பாட , அவனுக்கு அப்பெருமான் அருளைச் செய்தான் .

17 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கரியவனான்முகன் கைதொழுதேத்தக் காணலுஞ்சாரலு மாகா
எரியுருவாகியூ ரைய மிடுபலியுண்ணியென் றேத்தி
வரியரவல்குன் மடந்தையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயினதூவி விகிர்தனசேவடி சேர்வோம்.
 
                     -திருஞானசம்பந்தர்  (1-40-9)

 

பொருள்: மாலவனும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம்.

15 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மேவநேர் வரஅஞ்சா
வேடுவரே இதுசெய்தார்
தேவதே வேசனே
திருமுன்பே இதுசெய்து
போவதே இவ்வண்ணம்
புகுதநீர் திருவுள்ளம்
ஆவதே எனப்பதறி
அழுதுவிழுந் தலமந்தார்.
 
                  -கண்ணப்பநாயனார்  (137)

 

பொருள்: நேர் வருவதற்கு அஞ்சாத வேடுவரே இதனைச் செய்தாராதல் வேண்டும். தேவாதி தேவனே! ஈசனே! உம் திருமுன்பிலும் வேடுவர் இவ்வருவருப்பைச் செய்து போவதோ? இக்கொடுமை நிகழ்வதும் பெருமானின் திருவுள்ளம் ஆவதோ? என்று பதறி அழுது விழுந்து துன்புற்றார்.

12 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் ஒத்து
வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய

                      - சேரமான்  பெருமாள்  நாயனார் (11-8-181,182)

11 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.
 
                     -திருமூலர்  (10-11-1)

 

பொருள்:  நல்ல  மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன்  இல்லத்துள் இருக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்றது ,  தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் தோட்டத்து  ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.

10 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மானைப் புரையும் மடமென் னோக்கி
மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
அம்புலி சூடும்அரன்
றேனைப் பாலைத் தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
கூடுவ தென்றுகொலோ.
 
            -கண்டராதித்தர்  (9-20-4)

 

பொருள்: மானின் பார்வையை ஒத்த பார்வையை உடைய ளாய் மடப்பண்பினை உடைய பார்வதியோடு, ஆனைந்து  அபிடேகம் செய்யப்படும் தலையின் மீது ஒரு பிறையைச் சூடும் சிவபெருமானாய்த் தேன் போலவும், பால் போலவும் இனியனாய்த் தில்லைத் திருத்தலத்தில் விளங்குகின்ற செம்பொன்மயமான அம்பலத் தில் உள்ள தலைவனாய், ஞானக்கொழுந்தாய் உள்ள எம்பெருமானை அடியேன் கூடுவது  என்று ?

08 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற.
 
               -மாணிக்கவாசகர்  (8-14-20)

 

பொருள்: இருடிகள்  அழிந்து போகாமல், ஆகாயத்தில் இறைவன் காவல் இருக்கின்றான் என்றும், ஆகாயத் துக்கு அப்பாலுள்ளவர்க்கும் அவனே காவல் என்றும் உந்தீபறப் பாயாக!

05 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சுற்று மூர்சுழி யல்திருச் சோபுரந் தொண்டர்
ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப்
பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே.
 
               -சுந்தரர்  (7-31-2)

 

பொருள்: அடி யார்கள் சூழும் ஊராகிய சுழியல், சோபுரம், ஒற்றியூர் , ஊறல்     ,  பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு , இடைமருது என்னும் இவ்வூர்களை இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும் பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது இடமாகும். 

03 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே.
 
                          -திருநாவுக்கரசர்  (4-39-2)

 

பொருள்: மயிற்பீலியைக் கையில் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி ,  ஆடை இல்லாமல் இருந்த என்னை  அறிவுகெட்ட சமணர்கள் என் பயனை அனுபவித்தார்கள் ? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தருளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது .

02 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொடியுடைமார்பினர் போர்விடையேறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடையூர்திரிந் தையங் கொண்டு பலபலகூறி
வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றானடி காண்போம்.
 
                      -திருஞானசம்பந்தர்  (1-40-1)

 

பொருள்: திருநீற்றுப்பொடி   அணிந்த மார்பினராய், விடை மீது ஏறி, பூதகணங்கள் புடைசூழ்ந்து வர, கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறிப்பலியேற்று, அழகிய வாள் போன்ற நெடிய கண்களையுடைய உமையொரு பாகராகிய சிவபிரானார் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அருச்சித்து அக்கறைமிடற்றார் திருவடிகளைக் காண்போம்.

01 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இளைத்தனர் நாய னார்என்
றீண்டச்சென் றெய்தி வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு
முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி
வாயில்மஞ் சனநீர் தன்னை
விளைத்தஅன் புமிழ்வார் போல
விமலனார் முடிமேல் விட்டார்.
 
              -கண்ணப்பநாயனார்  (123)
பொருள்: நாயனார் பசியால் இளைத்துவிட்டார் என்று அவர் அருகே சென்று, மலையில் முளைத்து எழுந்த சுடர்க் கொழுந்தாய முதல்வரைக் கண்டு, அவர்தம் முடிமீதிருந்த பூக்களைக் காலில் அணிந்த அழகிய செருப்பால் அகற்றி, தம் வாயில் உள்ள நீரினைத் தம் அன்பினை உமிழ்வார்போல வினையின் நீங்கி விளங்கி நிற்கும். பெருமானின் திருமுடிமேல் உமிழ்ந்து விட்டார்.