31 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவளர் சிறப்பின் மிக்க
திருத்தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின்
மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு
பேறளித் திமையோ ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும்
பொற்பொது அதனுட் புக்கார்.
 
       - சேக்கிழார் (12-4-34)

 

பொருள்: வீடுபேற்றினை அடைதற்குக் காரணமான சிறப்பு மிக்க இயற்பகை நாயனாருக்கும், தெய்வக் கற்பினையுடைய அவர் மனைவியாருக்கும்  அருளில் திளைத்து வாழ்தற்குரிய உயர்ந்த வீடு பேற்றினைக் கொடுத்து, இவ்வருட்டிறத்தினைத் தேவர்களும் எண்ணி ஏத்துமாறு உமையம் மையாரோடு ஆனேற்றில் எழுந்தருளி வந்தவராய சிவபெருமான், நிலை பெற்ற அழகிய தில்லைப் பொதுவிற்கு எழுந்தருளினார்.

30 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.

         - காரைகாலம்மையார் (11-4-5)

பொருள்: உலகம் முழுவதையும் ஆக்கி அழிப்பவனும், உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவனும் சிவனே.

29 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
 
         - திருமூலர் (10-1-5)

 

பொருள்:  சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். நந்தி என்னும் பெயர் உடையான். என்னால் வணங்கப்படுகின்றவன்,  அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை

28 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இணங்கிலா ஈசன் நேசத்
திருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
மணவடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண் வாய்
பேசாதப் பேய்க ளோடே.
          - திருமாளிகைத்தேவர் (9-4-1)

பொருள்: தனக்கு ஒப்பு  இல்லாத சிவபெருமானிடத்தில் அன்போடு நிலைத்திருக்கும் மனத்தை உடைய அடியேனைப் பொறுத்த வகையில், பல திருவிழாக்களைக் கொண்ட சிறப்பினை உடைய தில்லையில் உகந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய கூட்டத்தைப் உடைய  அடியார்களுடைய வள்ளன்மைக் குணங்களைப் புகழ்ந்து கூறாத, பெருமை இல்லாத வாயை உடைய, ஒன்பான் ஓட்டைகளை உடைய உடம்பைச் சுமக்கும், செத்தாரில் வைத்து எண்ணப் படுபவர்களை அடியேனுடைய கண்கள் காணமாட்டா. உலகத்தார் உண்டு என்பதனை இல்லை என்னும் அப்பேய்களோடு என்னுடைய  வாய் பேசாது .

25 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நெடுந்தகை நீஎன்னை ஆட்கொள்ள யான்ஐம்
புலன்கள்கொண்டு
விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர
வார்வெருவ
அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங்
கைக்கரசே
கடுந்தகை யேன்உண்ணுந் தெண்ணீர் அமுதப்
பெருங்கடலே.
 
         - மாணிக்கவாசகர் (8-6-12)

 

பொருள்: பகைவர்கள்  அஞ்சும்படி கொல்லும் தன்மையுடைய வேற்போரில் வல்லவனாகிய திருவுத்தரகோச மங்கைக்குத் அரசனே,  கொடிய தன்மையுடையேன் பருகுதற்குரிய பெரிய அமுதக் கடலே! பெருந்தன்மையனே! நீ, என்னை அடிமை கொள்ளவும், நான் ஐம்புலன்களின் ஆசை கொண்டு, அதனால் உன்னை விடும் தன்மையனாயினேன்; அத்தகைய என்னை விட்டுவிடுவாயோ?

24 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்டத் தண்டத்தின் அப்புறத்
தாடும் அமுதன்ஊர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை
தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்
பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக்
கைநாட்டுக் குறுக்கையே.
           - சுந்தரர் (7-12-2)

 

பொருள்: இந்த அண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள் , தண்டந்தோட்டம் , தண்டங்குறை , தண்டலை , ஆலங்காடு , கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை , கடற்கரை , கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல் , குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை ஆகும் .

23 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்றுதன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலையெந்தை பெருமானுகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித்தரக்க னிதயம்பிளந்த கொடுமை
அடல்வலி யாழியாழி யவனுக்களித்த வவனாநமக்கொர் சரணே.
              - திருநாவுக்கரசர் (1-14-10)

 

பொருள்: தாமரைப் பூக்கள் ஆயிரத்தில் ஒன்று குறைய , வழிபாடு நிறைவுசெய்ய  தன் கண் ஒன்றை ஈந்து  அதனால் அருச்சித்து வழிபாட்டை நிறைவு செய்த திருமாலை, எம் தந்தையாகிய பெருமான் மகிழ்ந்து , தன் ஒளிமிக்க சேவடியால் வட்டமாகச் சக்கரத்தை உண்டாக்கி அதனைச் சுழலச் செய்து , சலந்தரனுடைய மார்பைப் பிளந்த கொடுமை மிக்க வலிமை உடைய சக்கரத்தைப் பாற்கடலையுடைய திருமாலுக்கு அளித்தான் . அவனே எமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

22 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி யாடத்தவ மாமே.
                - திருஞானசம்பந்தர் (1-16-11)

             

 

பொருள்: தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியாக கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்த, தண்மையான நீரைக்கொணர்ந்துதரும் காவிரித்தென்கரையில் விளங்கும் திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில்(ஆலந்துறைக் கோயிலில்) உறையும் இறைவனை, மணம் நிறைந்து கமழும் காழிப்பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப்பரவசமாய் ஆடத் தவம் (எண்ணியது )கைகூடும்.

11 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இன்று நீரெனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீ ருரைத்தது
ஒன்றை நான்செயு மத்தனை யல்லால்
உரிமை வேறுள தோவெனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச்
சென்று மாதவன் சேவடி பணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.

             - சேக்கிழார் (12-4-9)

 

பொருள்: இன்று  நீர் அடியேனுக்கு அருளியது இவ் வாறாயின், என்னுடைய உயிர்க்குத் ஒருத்துணையாகிய முதல்வரே! நீங்கள்  கூறிய கட்டளை ஒன்றை நான் செயதலேயன்றி, அடியேனுக்கு வேறு உரிமை உண்டோ?`` என்று கூறித் தம் பெரு மைக்குரிய கணவனாரை வணங்க, இயற்பகையாரும் தாழ்ந்து அவரை வணங்கி நிற்ப, அங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமா னாகிய மறையவரிடம் சென்று, அவர் திருவடிகளை வணங்கித் திருமகளினும் சிறந்த பெருமையினையுடைய அவ்வம்மையார் திகைப்புடன் நின்றார்.

10 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

            - காரைகாலம்மையார் (11-4-3)

09 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
 
               - திருமூலர் (10-1-4)

 

பொருள்: நெருப்பினும் வெம்மை உடையன்;  நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது  தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையவன்,  நீண்ட சடையை உடையவனாகிய நம் சிவபெருமான்.

08 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேறாக உள்ளத் துவகைவிளைத்
தவனிச் சிவலோக வேத வென்றி
மாறாத மூவா யிரவரையும்
எனையும் மகிழ்ந்தாள வல்லாய் என்னும்
ஆறார் சிகர மகேந்திரத்துன்
அடியார் பிழைபொறுப்பாய் அமுதோர்
கூறாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

              - திருமாளிகைத்தேவர் (9-3-12)

பொருள்:  உருவெளித் தோற்றத்தில் கண்டு மற்றவர்களினும் வேறுபட்ட வகையில் சிறப்பாக என் உள்ளத்திலே மகிழ்ச்சியை உண்டாக்கி,  மறைகள்  ஓதுதலால் எய்தும் சிறப்பு உடைய தில்லை மூவாயிரவர் அந்தணரோடு அடியேனையும் மகிழ்ச்சியாக ஆட்கொள்ள வல்ல வனே! ஆறுகள் தோன்றும்  மகேந்திர மலையில் இருந்து, உன் அடியவர்களின் பிழைகளைப் பொறுத்து அருளுகின்ற வனே! பெண்ணமுதாகிய பார்வதியை உன் திருமேனியின் ஒரு பாக மாக உடையவனே! குணக்குன்றே குலாத்தில்லைக் கூத்தனே 

07 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை வா மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்
பொலிபவனே.
 
              - மாணிக்கவாசகர் (8-6-9)
பொருள்: மூன்று உலகங்களுக்கும், ஒப் பற்ற தலைவனே ! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் அரசனே ! போர்க்குரிய நுனியோடு கூடிய மூன்று இலை வடிவின தாகிய சூலத்தை உடையவனே ! இருபுறமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் உள்ளே  அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னை விட்டு நீங்கின என்னை, தலைவிரி கோலம் உடைய சடையோனே! விட்டுவிடுவாயோ?

04 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாவுறை வான்றனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.
 
               - சுந்தரர் (7-11-10)

 

பொருள்: மிகஅழகினால் பொலிகின்ற, திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில், மிகவிருப்பம்  கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனை, நம்பியாரூரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் இந்நிலவுலகில் பாடுபவர், தம் பாவத்தை அறுப்பவராவர்

03 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த்
திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே.
 
                 - திருநாவுக்கரசர் (4-14-1)

 

பொருள்: மேரு மலையைச் சுற்றிக் கயிறாகக் கொண்ட பாம்பினை விடுத்து  தேவர்கள்  ஓடி அஞ்சும்படியாகத் திருமால் திருமேனியை ஒழித்தற்பொருட்டும் , விண்ணைச்சுடும் பொருட்டும் எழுந்த  அந்நஞ்சு எங்கும் பரவ , "பெருமானே ! இவ் விடத்துன்பம் நீங்குதற்கு அருளிச்செய்வாயாக "  என்று எல்லோரும் வேண்டவும் அருளினால் , அப்பெரிய விடத்தை , மற்றவர்களைத் தாக்காதவாறு உண்ட சிவபெருமானே எல்லா அண்டங்களுக்கும் அரசனாவான் .

02 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்றான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்றிற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
 
                 - திருஞானசம்பந்தர் (1-16-1)
 

 

பொருள்: பாலிருந்து  திரண்டு  வரும் வெண்ணெய்த் போல்பவரும்,  பிரமன்  போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில், காலனது வலிமை முழுவதையும் அழித்தவராக   விளங்கும் ஆலந்துறைக் கோயிலில் உள்ள இறைவனை வழிபடுபவர்களை வினைகள் அடையா.