30 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

                        -திருஞானசம்பந்தர் (1-56-11)


பொருள் : அடியவர்கள் நிறைந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம் திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடுவோமாக .

29 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எண்ணியநூற் பெருவண்ணம்
இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம்
மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியலும்
தூக்குநடை முதற்கதியில்
பண்ணமைய எழுமோசை
எம்மருங்கும் பரப்பினார்.

                     -ஆனாயநாயனார்  (27) 


பொருள்: இசைநூல்களில் அளவுபடுத்திய பெருவண்ணம்,- இடைவண்ணம், வனப்பு வண்ணம் எனும் இசைக்குரிய வண்ணங் களின் வகை எல்லாவற்றையும் சேர விளக்கிடும் பெரிய இனிய நாதத்தில் அமைந்த தாளமும், இசையும், தூக்கும், நடை முதலான கதிகளுடன், பண் அமைந்திடும்படி வரும் ஓசையை எப்பக்கங்களிலும் பரவச் செய்தார்.

28 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

                     -திருமூலர்  (10-27-7) 


பொருள்: தடுமாற்றத்திற்கும், அறியாமைக்கும் ஏதுவாகிய மது , வாய்மை முதலிய நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். அதனால் அதை உண்பவர் நாணம் இன்றித் தெருவில் திரிகின்ற பொதுமகளிர் இன்பத்தையே பெற்று, தாம் தம் இல்லாளொடு முயங்கிப் பெறும் இன்பத்தைத் தரும் அறிவைத் தலைப்படமாட்டார். அவர்க்கு என்றும் நீங்காத, இடையீடில்லாத இன்பம் உண்டாகுமோ!

25 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மாலயன் வானவர் கோனும் வந்து
வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்
ஞாலமதனிடை வந்தி ழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாட நீடு
குலாவு மிடவை மடநல் லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறி வார்எம் பிரானா வாரே. 

                    -மாணிக்கவாசகர்  (8-43-2)


பொருள்: மாலும் பிரமனும் இந்திரனும் வந்து வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த ஆண்டவன் உலகத்தின் கண்ணே வந்து தோன்றி நல்ல வழியினைக் காட்டி நன்மை விளங்குகின்ற அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்கள் நெடிது விளங்குகின்ற திருவிடை மருதூரில் இளம் பெண் ஒருத்திக்கு, ஒழுக்கம் விளங்கும்படி கருணைபுரிந்த தன்மையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

24 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

                     -சுந்தரர்  (7-41-8)


பொருள்: காட்டில் உள்ள கொன்றை மலர் , மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே , மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே , உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே , திருக்கச்சூரில் உள்ளவனே , ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , கீழ்மையுடையேனும் , அறிவில்லாதேனும் ஆகிய யான் , உடம்பை வளர்க்கும் செயலில் நின்று , உன்னை நினையாது விட்டேன் .

23 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி யிமையவ ரிறைஞ்ச நின்றார்
ஆய்வதற் கரிய ராகி யங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவர் திருப்புக லூர னாரே. 

                    - திருநாவுக்கரசர் (4-54-8) 


பொருள்: நீராய்த், தீயாய், நிலனாய், வானமாய், ஒளிப்பொருள்களாய்த் தேவர்கள் வழிபட நிற்பவராய், ஆராய்ந்தறிவதற்கு அரியராய்ப் பலப்பல இடங்களில் கூத்து நிகழ்த்தும் தேவதேவர் திருப்புகலூர்ப் பெருமானாவார்.

22 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணு முடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

               - திருஞனசம்பந்தர் (1-56-5)


பொருள்: திருமேனியின் ஒருபாதியாய்ப் பெண்ணைக் கொண்டுள்ளவரும், நாகத்தை அணிகலனாகப் பூண்டவரும் ஆகிய, திருப்பாற்றுறை இறைவர், வானகத்தே தோயும் பிறைமதியை முடியிற்சூடி மகிழ்ந்து வந்து எனது உடலைப் பொன்னிறமான பசலை பூக்கச் செய்தவராவார்.

21 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சேவடியில் தொடுதோலும்
செங்கையினில் வெண்கோலும்
மேவுமிசை வேய்ங்குழலும்
மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்லாயர்
கன்றுடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார்
நிரைகாக்கப் புறம்போந்தார்.

                 -ஆனாய நாயனார் (18)


பொருள்: திருவடிகளிற் செருப்பாக தோலும், சிவந்த அழகுடைய கைகளிலே வெண்மை நிறமான கோலும், விளங்கிடும் இசையுடைய புல்லாங்குழலும் மிகு விளக்கம் செய்ய, அவரிடத்து ஏவல் புரிகின்ற வலிமையுடைய இடையர்களும், கன்றினை உடைய பசுக் கூட்டமும் சூழ்ந்திட, பூக்கள் மலர்கின்ற மாலையணிந்த கோவலனாராய ஆனாயர், பசுக்களின் நிரைகளை மேய்த்துக் காவல் கொள்ளும்படி வெளியே வந்தருளினார்

18 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. 

                 -திருமூலர்  (10-27-1)


பொருள்: பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக் கழு நீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மைய வாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.

17 November 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


முத்த னைமுதற் சோதியை முக்கண்
அப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோக னைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின் நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 

                    -மாணிக்கவாசகர்  (8-42-10)


பொருள்:  பாசங்களில் நீங்கியவனும் ஒளிப் பொருள்களுக்கெல்லாம் மூல ஒளியாய் உள்ளவனும் மூன்று கண்களையுடைய தந்தையும் காரணங்களுக்கெல்லாம் முன்னேயுள்ள காரணமானவனும் ஞான மயமானவனும் சிவபுரத்தவனும் ஆகிய இறைவன் திருப்பெயர்களைப் பரவித் திரிகின்ற அன்பர்களே! நீங்கள் இங்கு வாருங்கள். அவனை உங்களது பந்தங்கள் நீங்கும் பொருட்டு வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால் உள்ளத்தில் நிறைந்த சிவந்த அவனது திருவடியின் கீழே நமது தலை நிலைபெற்று விளங்குதல் திண்ணம்.

15 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

              -சுந்தரர்  (7-41-4)


பொருள்: இடப வாகனத்தையும் , இடபக்கொடியையும் , சடை முடியையும் உடையவனே , திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே , எங்கும் , அழகியவாயில்களையும் , நிறைந்த மணிமண்டபங்களையும் , அழிவில்லாத மாடங்களையும் கொண்டு , சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும் , நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் , தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற , வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள , ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெரு மானே , இஃது உன்கருணை இருந்தவாறேயோ !

14 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மையரி மதர்த்த வொண்கண் மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே யடைக்கும்போ தாவி யார்தாம்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.


                            -திருநாவுக்கரசர்  (4-54-2)  


பொருள்:மை தீட்டி ஒளிபொருந்திய பெண்களின் பார்வையாகிய வலையில் அகப்பட்டுக் கையிலே நெருப்பையும் சூலத்தையும் ஏந்தும் கடவுளாகிய உம்மைத் தியானிக்க இயலாதேனான் கோழை திரண்டு சாய்ந்து கழுத்தின் உட்புறத்தை அடைக்கும்போது என் உயிர் என்ன பாடுபடுமோ அறியேன் திருப்புகலூர் உள்ளவனே .

10 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யாரா ராதி முதல்வரே.

                 -திருஞானசம்பந்தர்  (1-56-1)


பொருள்: மக்கள் நாள்தோறும் போற்றும், ஆத்தி மலர் அணிந்த திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர்மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம் சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.

09 November 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும்
காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.


              -ஆனாய நாயனார்  (12)


பொருள்: பசுக் கூட்டங்கள் இவ்வண்ணமே பெருகிடப் பேணிக் காத்து, இடையர் ஏவல் புரிந்திட, ஆயர்குலத்தைப் பேணி வரும் காவலர் பெருமானாய ஆனாயர், சிவபெருமான் திருவடி களில் பெருவிருப்புற்றுக் குழலில் இசை பொருந்த வாசித்து வரும் செயலை மேற்கொண்டார்.

07 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

                     - திருமூலர்  (9-26-3) 


பொருள்: தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்கு பவன் சிவபெருமானே. அதனால் அயன், அரி, அரன் என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே ஓதுபவர் உண்மையாக நடுவு நிற்பவராவர்.

04 November 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
தாம்மெம் பிரான்என் றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்
தாண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
பல்லாண்டு கூறுதுமே. 

                -சேந்தனார்  (9-29-13)


பொருள்: தந்தை, தாய், சுற்றம் முதலிய எல்லாப் பொருள்களும் எமக்கு அமுதம் போன்று இனிக்கும் சிவபெருமானே என்று சிந்திக்கவும் , சிவபெருமானுடைய சிறப்புடைய அடியவர்களின் திருவடிகளை வழிபடும் நாய்போல இழிந்தவனாகிய சேந்தன், அழிவில்லாத ஆனந்தத்தை வழங்கும் சிறந்த தேன் போலவந்து அடிமையாகக் கொண்டு அரிய உயிரின்மேல் நிற்கும் கட்டு நீங்குமாறு அருள் செய்தபெருமானே என்று வாழ்த்தும் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

03 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சித்த மேபுகுந் தெம்மை யாட்கொண்டு
தீவி னைகெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்க ழற்கணே
பன்ம லர்கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவு லகுக்கும்
அப்பு றத்தெமை வைத்திடு
மத்தன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 

                   -மாணிக்கவாசகர்  (8-42-6)

 

பொருள்: சித்தத்திலே புகுந்து எம்மை அடிமையாகக் கொண்டருளி, தீயவாகிய வினைகளை அழித்து உய்வதற்குரிய அன்பினைக் கொடுத்துத் தனது அழகிய திருவடியின் கண்ணே பல வகையான மலர்களைப் பறித்து இடுதலும், விடுதலையைக் கொடுத்து இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பால் எம்மைப் பேரின்பத்தில் வைக்கின்ற, ஊமத்தம்பூவை அணிகின்ற இறைவனது சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று பொலிவுபெற்று விளங்கும்.

02 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை யறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் மில்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

            -சுந்தரர்  (7-41-2)


பொருள்: ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே , திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே , நீ , அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி , கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க , பிச்சைக் கென்று , ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால் , உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம் பெருமானே.

01 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி
ஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ
ஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர
ஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.

                       -திருநாவுக்கரசர்  (4-53-10)


பொருள்: ஆயிரம் நதிகள் வந்து கலக்கும் கடலில் தோன்றிய அமுதினைத் தேவர் நுகருமாறு வழங்கி , அசுரர் பலர் வாழும் அழகிய மதில்கள் மூன்றையும் வேவச் செய்து ஆயிரம் தோள்களையும் சுழற்றி ஆடிய களைப்புத் தீருமாறு தமக்குத் தொண்டு புரிய அடியவர் பலரைக் உடையவர்  ஆரூரனாகிய பெருமான் .