29 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

                                           -திருநாவுக்கரசர்  (4-49-7)


பொருள்: காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும் , நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த , காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து , தூயவாயினில் நீரைக்கொணடு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து , அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார் .

28 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேன் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணமென் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் றன்னை யொல்கவுதைத் தருளி
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.

                     -திருஞானசம்பந்தர்  (1-51-5)


பொருள்: காலனை அழியுமாறு உதைத் தருளி, எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெறவைத்து மகிழ்தற்குக் காரணம் என்?

25 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பொடிமூடு தழலென்னத்
திருமேனி தனிற்பொலிந்த
படிநீடு திருநீற்றின்
பரப்பணிந்த பான்மையராய்க்
கொடிநீடு மறுகணைந்து
தம்முடைய குளிர்கமலத்
தடிநீடும் மனத்தன்பர்
தம்மனையி னகம்புகுந்தார்.

                      -மனக்கஞ்சாற   நாயனார்  (25) 

பொழிப்புரை :

சாம்பற்பொடியால் மூடப்பெற்ற நெருப்பைப் போல, திருநீற்றின் ஒளியமைந்த திருமேனியையுடையராய்க் கொடி கள் நெடுகிலும் நாட்டப் பெற்ற கஞ்சாறூர் வீதியினூடாக வந்து, தம்முடைய குளிர்ந்த தாமரை போலும் திருவடிகளையே நீளநினையும் மனமுடைய அன்பராம் மானக்கஞ்சாறரது திருமனையின் உள்ளே புகுந்தார்.

22 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாடல் எண் : 6

தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

                   -திருமூலர்  (10-21-5)


பொருள்:  தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாத வாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான்.

21 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆருயிர் காவல்இங் கருமை யாலே
அந்தணர் மதலைநின் னடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரே எங்கள் தில்லை வாணா
சேயிழை யார்க்கினி வாழ்வரிதே. 

                           -புருடோத்தநம்பி அடிகள்  (9-26-7) 


பொருள்: இவ்வுலகில் தன்னுடைய அரிய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள இயலாமையாலே அந்தணர் மகனாகிய மார்க்கண்டேயன் உன் திருவடிக்கண் வணங்க, கூரிய முனையினை உடைய வேலாகிய படைக்கலனை ஏந்திய கூற்றுவன் அழியுமாறு உன் கழல் ஒலிக்கும் திருவடி ஒன்றினைச் செயற்படுத்த நீ போரிட்டனை என்றால் தேவர்களில், குறைவில்லாதவர்கள் யாவர்? அவரவர் நுகரும் துயரங்களைப் போக்குதற்கு ஒருப்பட்டு நிற்கின்ற சிறந்த உயிர்போல்பவனே! எங்கள் தில்லையம்பதியில் வாழ்கின்றவனே! நீ காவாதொழியின் சேயிழையார் ஆகிய மகளிருக்கு இனி உயிர் வாழ்தல் அரிது.

17 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
ளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே. 

                     - மாணிக்கவாசகர் (8-21-1)


பொருள்: பொற்சபையில் ஆடுகின்ற, எம் ஈறில்லா முதல்வனே! எம்மை ஆளாகவுடைய உமையம்மை, சொரூப நிலையில் உன்னிடையே அடங்கித் தோன்றுவாள்; உடையவளாகிய உமையம்மையினிடத்தே, தடத்த நிலையில் நீ அடங்கித் தோன்றுவாய்; அடியேன் இடையே நீங்கள் இருவீரும் இருப்பது உண்மையானால், என் எண்ணம் நிறைவேறும்படி எனக்கு முன்னே நின்று, அடியேனாகிய யான், உனது அடியார் நடுவில் இருக்கின்ற திருவருளைச் செய்வாயாக.

16 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாற்றானத் தொருவனை நானாய பரனை
நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்
தலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்
தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

                                   -சுந்தரர்  (7-38-4)


பொருள்: மும்மூர்த்திகட்கு மேலே உள்ளவனும்  , என்னில் வேறறக் கலந்து நிற்கும் முதல்வனும் , திருநள்ளாற்றில் உள்ள சிறந்தவனும் , வெள்ளாற்றில் உள்ள அறநெறியாகியவனும் , ` காற்று , தீ , கடல் ` என்னும் பொருள்களாய் உள்ளவனும் , கயிலாயத்தின் உச்சியில் இருப்பவனும் , வேகமான ` கங்கையாறு ` என்னும் வெள்ள நீரைத் தாங்கியவனும் , பிறையைச் சூடினவனும் , பெரியோனும் , என் தந்தைக்கும் தலைவனும் , யாவராலும் அறிதற்கு அரிய , சிவந்த கண்களையுடைய இடபவாகனனும் , அலையெறிகின்ற கெடிலநதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்ட வந்த சிறிதுபோதினும் , யான் அறியாது இகழ்ந்தேன் !!!

14 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆதியிற் பிரம னார்தா மர்ச்சித்தா ரடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவ ருணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ்சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.

                                  -திருநாவுக்கரசர்  (4-49-1)


பொருள்: ஆதிப்பிரமர் வண்டுகள் மலர்களைக் கோதி ஒலிக்கும் சோலைகளால் சூழப்பட்ட குறுக்கைவீரட்டனார் திருவடிக்கீழ் அர்ச்சனை செய்தார் . வேதம் ஓதிய நாவினை உடைய பிரமனார் தம்மை வழிபாட்டால் உணருந்தன்மையைச் சிவபெருமான் உணர்ந்தவராவர் . அப்பெருமான் சூரியன் முதலிய ஒளிப்பொருள்களுக்கு ஒளிதருபவராய் ஆரேனும் அமர்ந்திருந்து சொல்லும் நிலையைக் கடந்த பெருமையுடையவர் .

13 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவிரிந் திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கியதென் னைகொலாம்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தனலுள் ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரமே யவனே.

                                         -திருஞானசம்பந்தர்  (1-51-2)


பொருள்: வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?.

09 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சென்றவருங் கஞ்சாறர்
மணமிசைந்த படிசெப்பக்
குன்றனைய புயத்தேயர்
கோனாரும் மிகவிரும்பி
நின்றநிலை மையினிரண்டு
திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல்வினை மங்கலநாள்
மதிநூல்வல் லவர்வகுத்தார்.

                       -மானற்கஞ்சாற நாயனார்  (18)


பொருள்: திரும்ப சென்ற அவர்களும், ஏயர்கோன் கலிக்காமனாரிடம் சென்று, மானக்கஞ்சாறர் திருமணத்திற்கு இசைவு கொண்டமையைக் கூற, மலைபோன்ற வலிய தோள்களையுடைய ஏயர்கோன் கலிக்காமரும் மிகவும் விரும்பி நின்ற நிலைமையில், இருதிறத்தார்க்கும் ஏற்பதொரு திருமண நாளை மிக்க மதிநுட்ப முடைய வல்லுநர்கள் வகுத்தார்கள்.

07 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே (10-21-1)

06 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அம்பலத் தருநட மாடவேயும்
யாதுகொல் விளைவதென் றஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே
ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைப் பூதஞ் சூழ
வானவர் கணங்களை மாற்றி யாங்கே
என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே.

                            -புருடோதநம்பி  அடிகள்  (9-26-3) 


பொருள்: நீ பொன்னம்பலத்திலே அரிய கூத்தினை ஆடிக் கொண்டிருந்தாலும், கொடிய பழிச்செயல்களைச் செய்யும் தேவர்கள் முன்னொரு காலத்தில் உன்னை நஞ்சினை உண்பித்தார்களே. அதனால் உனக்கு என்றாவது என்ன தீங்கு நேரக்கூடுமோ என்று அஞ்சி நெஞ்சில் நிம்மதியில்லாமல் இருக்கின்றேன். தேவர்கள் கூட்டங்களை நீக்கி வலிமையுடையனவாய்ப் பலவாய் உள்ள படை யாம் தன்மையை உடைய பூதங்கள் உன்னைச்சூழ எங்கள் வீதி வழியாக என்னுடைய மிக்க பசலை நோய்தீரும் வண்ணம் எழுந்தருளுவாயாக.

03 June 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 

                            -மாணிக்கவாசகர்  (8-20-10)


பொருள்:  திருமால் , பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருப்பள்ளி எழுவாயாக.