28 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இமையோர் நாயகனே இறை
வாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கரு
மாமுகில் போன்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உரு
வேதிருக் காளத்தியுள்
அமைவே யுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.
 
                - சுந்தரர் (7-26-2)

 

பொருள்: தேவர்களுக்கு  நாயகனே , கடவுளே , என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே , பொறுமை நிறைந்த அருளையுடையவனே , கரிய பெரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவனே உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய அவ்வடிவத்தை உடையவனே , திருக்காளத்தியுள் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே கிடையாது 

27 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.
 
                      - திருநாவுக்கரசர் (4-32-10)

 

பொருள்: சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக , அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டுநோக்கி , மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்தவர் திருப்பயற்றூரனார் இறைவர் ஆவர். 

26 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.
 
                        - திருஞானசம்பந்தர் (1-34-2)

 

பொருள்: அலையோடு  உடைய  கங்கையை முடியில்  சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப்பதியை பூக்களைக் கொண்டு நின்று தூவி இன்றே வழிபாடு செய்யுங்கள். 

25 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தோள்கொண்ட வல்லாண்மைச்
சுற்றத் தொடுந்துணையாம்
கோள்கொண்ட போர்மள்ளர்
கூட்டத் தொடும்சென்று
வாள்கொண்ட தாயம்
வலியாரே கொள்வதென
மூள்கின்ற செற்றத்தால்
முன்கடையில் நின்றழைத்தான்.
 
                      - ஏனாதி  நாயனார்  புரணாம் (9)

 

 பொருள்: தோளின் வலிய ஆண்மை கொண்ட சுற்றத் தாருடனே, தனக்குத் துணைவலியாகக் கொள்ளப்பட்ட போர் வீரர் களின் கூட்டத்தோடு சென்று, ஏனாதிநாதரின் வீட்டின் முன்னே நின்று, வாள் பயிற்றும் தொழில் உரிமையை நம்மில் வலியவராய் உள்ளவரே கொள்ளத் தக்கவர், என மிகவும் மூண்டு எழும் சினத்தால் போருக்கு அழைத்தான்.

24 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.
 
                     - சேரமான் பெருமாள்  நாயனார் (11-6-60)

 

பொருள் : உமையவளை விரும்பிக் கூடிய தன் திருமேனியில் அவளை இடப்பாகத்தில் உடையவனைத் திருவையாற்றுத் தலத்தில் சென்று, இவன் பாடியன நான்கு வேதங்கள், வெகுண்டு கொன்றது கூற்றுவனை; எங்கும் செல்வனவாகிய கோட்டைகளை எரித்துப் பூசிக்கொண்ட சாம்பலே இவனுக்கு நல்ல சந்தனம்; ஆகலின் இவன் எங்கள் சிவபெருமானே` என அடையாளம் கண்டு,  செந்நிறம்  இவன் தலையிலே உள்ள சடைகளில்  உள்ளது என்று  வணங்குங்கள்.

21 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
 
                     - திருமூலர் (10-5-12)

 

பொருள்:  உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்பவன்  தொண்ணூற்றாறு தத்துவங்கள் உடையவன் . அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர அவ்வினை  நீங்கும்.

20 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அனலமே புனலே அனிலமே புவனி
அம்பரா அம்பரத் தளிக்கும்
கனகமே வெள்ளிக் குன்றமே என்றன்
களைகணே களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
சைவனே சாட்டியக் குடியார்க்
கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே.
 
                    - கருவூர்தேவேர் (9-15-6)

 

பொருள்: மனிதர்களுக்கு  இனிய பழமாய் நீக்கமற நிறைந்து எழுநிலை விமானத்தின்கீழ்க் கருவறையில் உள்ள பெருமானே! பஞ்சபூத வடிவானவனே! விண்ணில் கொடுக்கப் படுகின்ற பொன்னுலகமே! வெள்ளி மலையே! அடியேன் பற்றுக் கோடே! உன்னைத்தவிர வேறு பற்றுக்கோடில்லாத அடியேனுடைய உள்ளத்தையே இருப்பிடமாகக்கொண்டு அருளும் மங்கலமான வடிவினனே! அத்தகைய நீ சாட்டியக்குடியில் வந்து உறையும் காரணத்தைக் கூறுவாயாக.

19 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புத்தன் புரந்தராதியர்
அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை
மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை
அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                       - மாணிக்கவாசகர் (8-11-16)
 
பொருள்: புதுமையானவனும், இந்திராதியர் வணங்கும் படியாகிய பித்தனும், திருப்பெருந்துறையை உடையவனும், எமது பிறவியை ஒழித்தருளின அத்தனும், தில்லையம்பலத்தை உடையவனு மாகிய சிவபெருமானது அருவுருவமாகிய திருவடிகள் என் மனத்தில் தங்கியிருக்கும் விதத்தைப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டு வோம்.

18 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறையா ருஞ்சடையெம் பெரு
மானரு ளாயென்று
முறையால் வந்தமரர் வணங்
கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்
நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளி
தாஞ்சிவ லோகமதே.
 
                  - சுந்தரர்  (7-25-10)

 

பொருள்: தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை , அந்தணர் தலைவனும் , வயல் களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன் , ` பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய் ` என்று வேண்டிப்பாடிய , இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும்

17 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.
 
                  - திருநாவுக்கரசர் (4-32-2)

 

பொருள்:  உமை ஒரு பாகனார் பல ஊழிகளையும் படைத்த பெருமானாராய் ,  மேரு   மலையை வில்லாகக் கொண்டு , பாம்பை அதற்கு நாணாகக் கட்டி , உலகங்களில் பலரையும் சென்று பற்றி வருத்திய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு , வெகுண்டு சிவந்த கண்களையுடையவர் திருப்பயற்றூரனார் ஆவர். 

14 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
 
                      - திருஞானசம்பந்தர் (1-33-11)

 

பொருள்: அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும்.

13 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாளின் படைபயிற்றி
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால்
நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும்
காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
 
                 - ஏனாதி நாயனார் புரணாம் (4)

 

பொருள்: வாட்படை பயிற்றும் தொழிலில் வந்த பொருள் வருவாய் அனைத்தையும், பெருமை பொருந்திய திருமுடியையும் திருவடியையும் காண இயலாத மால் அயன் ஆகிய இருவரையும் தொண்டாளும் சிவபெருமானின் அடியவர்களுக்கு, நாளும் தம் உள்ளத்து எழும் பேரன்பினால் பொருந்தி, கொடை மிகுதியால் கொடுத்துவரும் கடப்பாடுடையவர்.

12 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.
 
                     - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-50)

 

பொருள்: ஈசன்  தன் திருமேனியில் உமையை இடப்பாகத்தில் உடையவனைத் திருவையாற்றுத் தலத்தில் சென்று, `இவன் பாடியன நான்கு வேதங்கள், வெகுண்டு கொன்றது கூற்றுவனை; எங்கும் செல்வனவாகிய கோட்டைகளை எரித்துப் பூசிக்கொண்ட சாம்பலே இவனுக்கு நல்ல சந்தனம்; ஆகலின் இவன் எங்கள் சிவபெருமானே என்று  வணங்குங்கள்.

11 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.
 
                           - திருமூலர் (10-5-7)

 

பொருள்:  நம்பி(சிறந்த ஆடவன்) தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத் திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று,  கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.

10 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம்
பட்டவர்த் தனம்எரு தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை
மலைமகள் மகிழ்பெருந் தேவி
சாந்தமும் திருநீ றருமறை கீதம்
சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ்
இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
 
                 - கருவூர்த்தேவர் (9-15-2)

 

பொருள்: சாட்டியக்குடி ஈசனுக்கு  அன்பு உடைய இதயமே ஈசன் கோயில். அக்கோயிற்கண் அமைந்த எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் அப்பெருமானுக்குப் பாம்புகளே அணியும் மாலைகள். உண்ணும் பாத்திரம் மண்டையோடு. அவர் செலுத்தும் எருதே பெருமையை உடைய யானை வாகனம். அடியார்களின் இடையறாது ஒழுகும் கண்ணீரை உடைய கண்களே அவர் குளிக்கும் இடம். பார்வதியே அவர் மகிழ்கின்ற பெரிய தேவி. திருநீறே அவர் அணியும் சந்தனம். அவர்பாடும் பாடல் சிறந்த வேதங்களே. சடையே அவர் கிரீடம்.

07 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத்
தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட்
கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ.

               - மாணிக்கவாசகர் (8-11-10)

 

பொருள்: கனவிலும் காண்பதற்கு அரிதாகிய திருவடியையுடைய இறைவன் உமாதேவியாரோடும் எழுந்தருளி நனவின் கண்ணே என்னை வலிந்து ஆட்கொண்ட விதத்தை மனத் தால் சிந்தித்து கண்களில் நீர் மல்க  தெள்ளேணம் கொட்டுவோம்.

06 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்செய்த மேனியினீர் புலித்
தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்
தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பர
வையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடி
யேன்இட் டளங்கெடவே.
 
                  - சுந்தரர் (7-25-1)

 

பொருள்: பொன் போலும் மேனியை உடையவரே , புலி தோலை அரையில் உடுத்தவரே ,  மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு

05 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சேலினே ரனையகண்ணார் திறம்விட்டுச் சிவனுக்கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய்யோடு பலபல வாட்டியென்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
 
                          - திருநாவுக்கரசர்  (4-31-9)

 

பொருள்: சேல்மீன் போன்ற கண்களை உடைய மகளிரிடம் ஈடுபடும் செயலை விடுத்துச் சிவபெருமானுக்கு அன்பனாய் இருந்து பஞ்சகவ்வியம் முதலியவற்றால் அபிடேகித்து உலகமயக்கத்தைப் போக்கிச் சிவ வழிபாட்டில் நிலை பெற்ற மார்க்கண்டேயனுக்காகக் கூற்றுவனை உதைத்தவர் கடவூர் வீரட்டனார் ஆவர். 

04 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன்
கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை
அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே.
 
                - திருஞானசம்பந்தர் (1-33-2)

 

பொருள்: சடைமுடி உடைய  சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர், வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார்.

03 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேழக் கரும்பினொடு
மென்கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி
தானோங்குந் தன்மையவாய்
வாழக் குடிதழைத்து
மன்னியஅப் பொற்பதியில்
ஈழக் குலச்சான்றார்
ஏனாதி நாதனார்.
 
                      -ஏனாதி நாயனார் புராணம் (2)

 

பொருள்: வேழக் கரும்புகளோடு மெல்லிய கரும்புகளும் குளிர்ந்த வயல்களிடத்துத் தம் வளர்ச்சியில் தாழும்படி, கதிர்களை யுடைய செந்நெற்பயிர்கள் உயரும் தன்மை உடையவாய், அவற்றால் வாழ்வுபெறுகின்ற குடிமக்கள் ஓங்கி நிலைபெற்றிருக்கின்ற அவ் வழகிய எயினனூரில் வாழ்பவர் ஏனாதிநாதர் ஆவர்.