31 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்
கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ.
 
                      -மாணிக்கவாசகர் (8-16-1)

 

பொருள்: பவளம் கால்களாகவும், முத்து வடம் கயிறு ஆகவும் உடைய, அழகுகான  பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி இனிமையாய் இருந்து, திருமால் அறியாத அன்றலர்ந்த தாமரை போலும் திருவடியை நாய் போன்ற அடியேனுக்கு உறைவிடமாக தந்தருளிய திருவுத்தர கோச மங்கையில் எழுந்தருளியிருக்கிற தெவிட்டாத அமுதம் போன்ற வனது அருளாகிய இரண்டு திருவடியைப் புகழ்ந்து பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

30 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே.
 
                    -சுந்தரர் (7-32-10)

 

பொருள்: உலகில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தெற்கு திசையில்  , அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர் , சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களேயாவர் .

29 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி யெல்லிநின் றாடு வானை
அட்டகா மலர்கள் கொண்டே யானஞ்சு மாட்ட வாடிச்
சிட்டரா யருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.
 
                              -திருநாவுக்கரசர்  (4-41-2)

 

பொருள்: பந்தம் உடையோராய் காலத்தைக் கழித்தல் கூடாது . தம் எண் கைகளையும் வீசியவராய் இரவில் ஆடுபவராய் உள்ளார் சோற்றுத் துறையரனார் . சோலைகளிலிருந்து கிட்டும் எட்டுப்பூக்களையும் நீங்கள் அர்ப்பணித்துப் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகிக்க அவ்வபிடேகத்தை ஏற்று சிட்டராய் உள்ள அப்பெருமான் உங்களுக்கு அருள்கள் செய்வார்

 

28 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூவரு மாகி யிருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு தண்மதிண் மூன்றுமெ ரித்த
தேவர்கள் தேவ ரெம்பெரு மானார் தீதில்பெ ருந்துறை யாரே.
 
                                -திருஞானசம்பந்தர்  (1-42-2)

 

பொருள்: அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த தேவர் குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார் ஆவார். 

27 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங்
குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர்
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.
 
                 -கண்ணப்பநாயனார் புரணாம்  (165)

 

பொருள்: வந்தவர் இரத்தம் வருதலைக் கண்டார், மயங்கி னார்; வாயில் கொண்ட நல்ல மஞ்சன நீர் சிந்திடவும், கைகளில் இருந்த வில்லும் இறைச்சியும் சிதறி விழவும், கொத்தாக மலர்ந்த பூசனைக் குரிய மலர்கள் கொண்டையினின்றும் விழவும், பசிய தழை களாலாய மாலை சூடிய மார்புடைய திண்ணனார் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்

23 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடை ரானாலும் சீசீ இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணாதவர்

                    - நக்கீரதேவ நாயனார் (11-9-10)

22 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.
 
                      -திருமூலர்  (10-12-6)

 

 பொருள்: உயிர்களை  கொல்லுதல், பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல் என்னும் இவை ஐந்தும்,  மாபாதகம் எனப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.

21 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என்
றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான்
ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எனையுடையாள்
உரையாடாள்
நசையானேன் றிருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

                    - வேன்னாடு அடிகள் (9-21-3)

 

பொருள்: குளத்தின் அருகிலே பள்ளத்தில் உள்ள சிறுமரத்துக்கு அக்குளத்தின் நீர் கசிந்து பாயாதோ என்று சொல்லப்படும் பழ மொழிக்கு ஏற்ப அவன் வரும் திசைகளைப் பார்த்து மனம் வருந்திச் `சிவபெருமானே! அடியேனுக்கு அருள் செய்ய வாரா திருத்தல் முறையோ!` என்று முறையிட்டாலும், அந்த எம்பெருமான் என்பக்கம் வர உள்ளம் கொள்வானல்லன். அடியேனை அடிமையாக உடைய உமாதேவியும் எம்பெருமானை அடியேன் கண்முன் வருமாறு பரிந்துரை கூறுகின்றாள் அல்லள். திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பான், அவனைக்காண ஆசைப்படும் அடியேன் என்ன  செய்வேன்?

17 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உரைமாண்ட உள்ளொளி
உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோணோக்க மாடாமோ.
 
                      -மாணிக்கவாசகர்  (8-15-14)

 

பொருள்: சொற்கள் தம் ஆற்றல் அடங்குதற்குக் காரணமான உள்ளொளியாகிய உத்தமனாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் மனத்தில் புகுதலும் கரையற்ற ஆசையாகிய பெரிய கடலைத் தாண்டுதலும் தமக்கு உணவு அற்ற இந்திரியங்களாகிய பறவைகள் அஞ்சி ஓட, நமது தன் முனைப்புக் கெட்ட விதத்தைப் பாடி தோணோக்கம் ஆடுவோம்.

16 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே.
 
                              -சுந்தரர்  (7-32-5)

 

பொருள்: மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே , கங்கை என்பவளும் உனது திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறிடம் இல்லை ; இங்ஙனமாக , கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகாளோடும் கூடி , பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளையுடைய கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டது  என்னே 

15 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலையலா லிருக்கை யில்லை மதித்திடா வரக்கன் றன்னைத்
தலையலா னெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னு மையனை யாற னார்க்கே.
 
                -திருநாவுக்கரசர்  (4-40-10)

 

பொருள்:  கயிலை மலையைத் தவிர வேறு சிறப்பான இருப்பிடம் இல்லாதவரும்  தம்மை மதியாது கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலையைத் தவிர வேற்றவருடைய தலையை அவர் மலைக்கீழ் வருத்தி நெரித்தலை அறியாதவர் அவர் . நிலைபேறில்லாத அசுரர்களின் மும்மதில்களும் அழிய நெருப்பைப் பரப்பியதனைத் தவிர அவர் வேற்றுச் செயல் எதுவும் செய்யாதவர் அலைகளை உடைய காவிரி நிலையாக ஓடும் ஐயாற்றில் வாழ் பெருமான்  ஆவர். 

14 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 

பார்மலிந்தோங்கிப் பருமதில்சூழ்ந்த பாம்புரநன்னக ராரைக்
கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக் கழுமலமுதுபதிக் கவுணி
நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச் சிவனடி நண்ணுவர்தாமே.
 
                                            - திருஞானசம்பந்தர்  (1-41-11)

 

பொருள்: பாரில   புகழ் நிறைந்து ஓங்கியதும்பெரிய மதில்களால் சூழப் பெற்றதுமான திருப்பாம்புர நன்னகர் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும் வயல்கள் சூழப்பெற்றதும், மாட வீடுகளை உடையதுமான, கழுமலம் என்னும் பழம் பதியில் கவுணியர் கோத்திரத்தில், அன்பிற் சிறந்தவனாய்ப் புகழால் ஓங்கி விளங்கும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்

13 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்றிரவு கனவின்கண்
அருள்முனிவர் தம்பாலே
மின்திகழுஞ் சடைமவுலி
வேதியர்தா மெழுந்தருளி
வன்திறல்வே டுவன்என்று
மற்றவனை நீநினையேல்
நன்றவன்தன் செயல்தன்னை
நாமுரைப்பக் கேள்என்று.

                   -கண்ணப்பதேவநாயனார்  (156)

 

பொருள்: அன்று இரவு, அரிய அம்முனிவரிடத்து, திகழும் சடைமுடியையுடைய இறைவன் கனவில் எழுந்தருளி, வலிமை பொருந்திய வேடுவன் இது செய்தவன் என அவனை நீ எண்ணாதே! நலம் மிக்க அவன் தன் செயலை நான் கூறக் கேட்பாயாக என மொழிந்தருளிப் பின்னரும்.

09 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.
 
               - நக்கீரதேவனயனர் (11-9-1)

 

பொருள:  சிவனுக்குச் செய்யும் திருப்பணிகளுள் திருவிளக்கேற்றும் பணி சிறப்புடைத்து. எனினும் புற இருளை நீக்கும் விளக்கை ஏற்றுதலிலும் அகஇருளை நீக்கும் இவ்விளக்கை ஏற்றியது மிகச் சிறந்த பணியாதலையறிக.

08 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
 
                      - திருமந்திரம் (10-12-1)

 

பொருள்: கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவரு மாயினும், குலைமாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்குபயப்பதாம். அதேபோல்  உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந் நகை காட்டி, அன்புடையராய்த் தோன்று கின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன் னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.

07 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே
ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங்
கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும்
எனதுபணி
நச்சாய்காண் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.
 
                    -வேன்னாடடிகள்  (9-21-1)

 

பொருள்:தில்லையில் திருக்கூத்து நிகழ்த்தும் எம் பெருமானே! அடிமைகளை விரும்புபவர்கள், அவ்வடிமைகள் இழிவான செயல்களைச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வர். கசப்புச் சுவையை உடையவாயிருப்பினும் வாழைக்கச்சல் களையும், வேப்பங்கொழுந்தினையும் கறி சமைத்தற்குப் பயன்படுத்து வார்கள். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு எந்தப்பற்றுக்கோடும் இல்லை என்பதனை நீ அறிந்தும் என்னுடைய தொண்டினை விரும்பா திருப்பதன் காரணம் புலப்படவில்லை.

03 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நிலம்நீர் நெருப்புயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ
டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகே ழெனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா
தோணோக்க மாடாமோ.
 
                        -மாணிக்கவாசகர்  (8-15-5)

 

பொருள்:  நிலம், நீர்,  தீயும், வாயுவும், பெரிய ஆகாயமும், சந்திரனும் சூரியனும், அறிவுருவாய ஆன்மாவும் என்னும் எட்டு வகைப் பொருள்களாய் அவற்றோடு கலந்து இருப்பவனாய் ஏழுலகங்களும் திக்குகள் பத்து ஆனாலும்  ஒன்றான  இறைவனை  , பல பொருள்களாக நின்ற வகையைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்

02 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே.
 
                 -சுந்தரர்  (7-32-1)

 

 பொருள் கடற்காற்றுக் கடுமையை  வந்து வீச , இக் கடற்கரையின்மேல் , உமக்கு , யார் துணையாய் இருக்க இருக்கின்றீர் ? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன ; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ கோடிக்குழகரே !!!!

01 July 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

ஆலலா லிருக்கை யில்லை யருந்தவ முனிவர்க் கன்று
நூலலா னொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலா லமுத மில்லை யையனை யாற னார்க்கே.
 
                        -திருநாவுக்கரசர்  (4-40-2)

 

பொருள்:  கல்லால மரத்தைத் தவிர வேற்றிடம் எம்பிரானுக்கு  அமைவதில்லை .  தவத்தையுடைய   முனிவர்களுக்கு அப்பிரானார் நுண்பொருளாய்வு செய்து வேதாகமப் பொருள்களைத் தவிர வேற்றுப் பொருள்களை உபதேசிப்பதில்லை . திருமாலும் பிரமனும் கூடித் தம் மலர்போன்ற திருவடிகளை வணங்க அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கித் தாம் உட்கொண்ட கடல் விடத்தைத் தவிர உணவு வேறு இல்லை  எம்பிரான் ஐயன் ஐயாறனார்க்குக்