27 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.
 
                    -திருமூலர்  (10-15-1)

 

பொருள்: அந்தணர் என்பவர்கள் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லன வும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அந்தணர்கள். 

23 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள்
பூசுரர் பலர்போற்ற
எரிய தாடும்எம் ஈசனைக் காதலித்
தினைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன்
மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன
தடியிணை பணிவாரே.
 
               -திருவாலியமுதனார்  (9-23-10)

 

பொருள்: அழகிய மதில்களால் சூழப்பட்ட தில்லைநகரிலே, அந்தணர்கள் பலரும் துதிக்குமாறு, எரியைக் கையில் சுமந்து கூத்து நிகழ்த்தும் எம்பெருமானை ஆசைப்பட்டு அவன் அருள் முழுமை யாகக் கிட்டாமையால் வருந்தும் தலைவிகூறும் மொழிகளாக, மலையைப் போன்ற பெரிய மதில்களைஉடைய திருமயிலாடுதுறை என்ற ஊருக்குத்தலைவனான வேதங்களில் வல்ல திரு ஆலிஅமுதன் முன்நின்று போற்றிய இப்பத்துப்பாடல்களையும் கற்றுவல்லவர் சிவபெருமானுடைய திருவடிகளின் கீழ்ச் சிவலோகத்தில் அவனைப் பணிந்து கொண்டு வாழ்வார்கள்.

22 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும்.
 
                    -மாணிக்கவாசகர்  (8-17-10)

 

பொருள்: கொன்றையும்  பிறையும் வில்வத்தோடு ஊமத்தமும் பொருந்திய சடையை உடையவர் என்று நின் மகள் சொல்லுவாள், மேலும், தாயே! சடையில் பொருந்திய ஊமத்த மலர் இப்பொழுது எனக்குப் பெரும்பித்தை உண்டுபண்ணின வாறு என்னே? என்று சொல்லுவாள்.

20 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தைய லாருக்கொர் காம னேசால
நலவ ழகுடை ஐயனே
கையு லாவிய வேல னேயென்று
கழறி னுங்கொடுப் பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
 
                    -சுந்தரர்  (7-34-10)

 

பொருள்: புலவர்காள் ,  பெண்கள்ளுள் காமன் போலத் தோன்றுபவனே , ஆடவர் யாவரினும் மிக இனிய அழகுடைய வியத்தகு தோற்றத்தை யுடையவனே , முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே ` என்று உறுதியாகச் சொல்லிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , பெரிய பொய்கைகளிலும் , சிறிய குளங்கள் உள்ள  திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரருலகத்திற்குத் தலைவராய் , அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை

19 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக்
கூறியல் பாகம் வைத்தார் கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை யிலங்குமேற் றளிய னாரே.
 
                         -திருநாவுக்கரசர்  (4-43-9)

 

பொருள்: தனக்கு நிகரிலாதபடி  ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார் விளங்குகிறார் .

15 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி
ஆறதுசூடி யாடரவாட்டி யைவிரற் கோவணவாடை
பாறருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
ஏறதுவேறிய ரேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.
 
                         -திருஞானசம்பந்தர்  (1-44-6)

 

பொருள்: திருநீற்றை முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் வைத்து கொண்டு, கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?

14 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மருவிய திருவின் மிக்க
வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின்
அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப்
பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த
சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
 
               -குங்குலிகலய நாயனார்  (5)

 

 பொருள்: திருவின் சிறப்பினால் மிக்க வளமு டைய அத்திருப்பதியில் வாழ்பவராகிய அரிய மறை வழி நிற்கும் கலயனார் என்னும் பெயருடைய அந்தணர், கங்கையை அணிந்த சிவபெருமான் திருவடிகளைப் பேணி நாள்தொறும் வணங்குபவர்; அன்பு கூர்ந்த சிந்தையர்; ஒழுக்கத்தில் மிக்கவர்.

13 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் முளைசூடி வற்றாவாம்
கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்

12 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.
 
                       -திருமூலர்  (10-14-10)

 

பொருள்: வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.

07 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
பிப்பது வழக்காமோ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடை
சேர்த்திஅச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
ஒண்ணுதல் வைத்தோனே.
 
                  -திருவாலியமுதனார்  (9-23-4)

 

பொருள்: அருள் செய்து பொன்னம்பலத்தில் கூத்துநிகழ்த்தும் கூத்தப்பிரானே! அழகிய தில்லை நகரை ஆள்பவனே!  அடியேனுடைய அழகிய முலைகளைப் பசலைநிறம் பாயச் செய்வது நீதியான செயலாகுமா? நீர் திரண்டு ஓடிவரும், நீண்ட மணிகளை அடித்துவரும் கங்கையைத் திருச்சடையில் வைத்துக்கொண்டு அச் செயலைப் பொறுத்துக்கொண்ட பெருங்கற்பினளாகிய பார்வதிக்கு உன்உடம்பில் ஒருபாகத்தை வழங்கி, பெரிய அழகிய தீயினை நெற்றியில் வைத்தவனே. 

06 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும்.
 
                       -மாணிக்கவாசகர் (8-17-4)

 

பொருள்: ஆபரணமாகிய ஆடும் பாம்பும், உடை யாகிய புலித்தோலும், பூசப்பட்டதாகிய திருநீறும் அமைந்த ஓர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே? என்று நின் மகள் சொல்வாள்; மேலும், தாயே! வேடம் இருந்த விதத்தை நோக்கி நோக்கி, என் மனம் வாடுகின்றது என்றதுமே 

05 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
 
                  - சுந்தரர் (7-34-1)

 

பொருள்: புலவர்களே  , சிவபிரான் , தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும் , ஆடையும் , பிறவும் தந்து புரப்பான் ; அதனால் , புகழும் மிகும் ; துன்பங் கெடுதலும் உண்டாம் , இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவ லோகத்தை ஆளுதற்கு  , ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக இல்லை ; ஆதலின் , தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து , தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி , அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நிற்பினும் , அங்ஙனம் சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப் பாடுதலை அறவே விடுத்து , அவனது திருப்புகலூரைப் பாடுமின்கள் .

01 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் றந்தை யிலங்குமேற் றளிய னாரே.
 
                     -திருநாவுக்கரசர்  (4-43-2)

 

பொருள்:  திருமாலைத் தம் மேனியில் மகிழ்ந்து ஏற்றவராய் , எவர்க்கும் மூத்தவராகவும் இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய் , ஆன்மாக்களுக்குத் தலைவராய் , பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய், கடம்பனுடைய தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் கோயிலிலுள்ளார்.