30 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே

                       -சுந்தரர்  (7-68-10)


பொருள்: நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநள்ளாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானை , திருநாவலூரில் தோன்றியவனும் , ` சிங்கடி ` என்பவளுக்கும் ` வனப்பகை ` என்ப வளுக்கும் தந்தையும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் , ` இப் பெருமானை மறந்து நான் நினைப்பது வேறு யாது ` என்று சொல்லி , அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லவர்க்கு , இறந்து போதலும் , பிறந்து வருதலும் இல்லையாக , பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள் .

29 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்
செறிவுடை யங்க மாலை சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

                            -திருநாவுக்கரசர்  (4-72-3)


பொருள்: ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் மாதொரு பாகராய் , தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும் தோற்றத்தை நீக்கி , அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய் , செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய் , அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன் .

28 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உரவன்புலியி னுரிதோலாடை யுடைமேற் படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்த னுகிர்தன்னாற்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம் பதியாக
இரவும்பகலு மிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

                     -திருஞானசம்பந்தர் (1-74-2)


பொருள்: மிக வலிமையுடையவனும், புலியிலினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர்செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான்.

27 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வானிறைந்த புனல்மழைபோய்
மலர்மழையாய் இடமருங்கு
தேனிறைந்த மலரிதழித்
திருமுடியார் பொருவிடையின்
மேனிறைந்த துணைவியொடும்
வெளிநின்றார் மெய்த்தொண்டர்
தானிறைந்த அன்புருகக்
கைதொழுது தனிநின்றார்.


              -திருக்குறிப்புத்தொண்ட நாயனார்  (126)


பொருள்: வானில் நிறைந்த நீராய மழை போய், மலராய மழை பொழிந்திடத், திருக்குறிப்புத் தொண்டரின் அருகில், தேன் நிறைந்த மலர்க் கொன்றையை அணிந்த திருமுடியையுடைய பெரு மான், ஆனேற்றின்மீது அருள் நிறைந்த உமையம்மையாருடன் வெளிப்பட்டு முன் நின்றார். மெய்ம்மை தவறாத திருக்குறிப்புத் தொண்டர், தாமும் கண்ணால் கண்டு, உள்ளம் நிறைந்த அன்பு உருக்கிட அம்மையப்பரைக் கைதொழுது கொண்டு தனியே நின்றார்.

23 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.

               -திருமூலர்  (10-2-16,4)


பொருள்: விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமே யன்றி நில்லா; வருவன வருமே யன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.

22 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


என்னறி வால்வந்த தன்றிது
முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே.

                  -மாணிக்கவாசகர் - திருக்கோவையார்  (8,3-1)


பொருள்: இது முன்னும் என்னறிவால் வந்தது அன்று இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு கூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வந்தர வந்தது முயன்றால் மன் நெறி தந்தது தெய்வம் இன்னும் இருந்தன்று; இன்னுஞ் சிறிது முயன்றான் மன்னிய நெறியாகிய இவ்வொழுக்கத்தைத் தந்ததாகிய தெய்வம் இன்னும் இருந்தது; அது முடிக்கும், அதனான்; நெஞ்சே நெஞ்சமே; வருந்தல் வருந்தாதொழி; மின் எறி செஞ்சடைக் கூத்தப் பிரான் வியன் தில்லை முந்நீர் மின்னை வெல்கின்ற சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடற்றிரை; பொன் எறி வார் துறைவாய் மின்தோய் பொழிலிடத்துச் சென்றும் பொன்னைக் கொணர்ந்து எறிகின்ற நெடிய துறையிடத்து மின்னையுடைய முகிலைத்தோயும் பொழிற்கட் செல்லுதும்

21 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள்
இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

               - சுந்தரர் (7-68-9)


பொருள்: இலங்கை கோன்  கயிலாய மலையைப் பெயர்க்க , அது போழ்து மலையரையன் மகளாகிய உமை அஞ்சுதலும் , அவனது விளங்குகின்ற பெரிய முடி யணிந்த தலைகள் ஒருபதையும் , தோள்கள் இருபதையும் நெரித்து , பின்னர் அவன் செருக்கொழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு , வலக்கையிற் பிடிக்கும் வாளினையும் ` இராவணன் ` என்ற பெயரை யும் , அவனுக்கு அளித்த வள்ளலும் , குழவிப் பருவத்தையுடைய சிறந்த சந்திரன் , சடைமேல் தங்கி நன்மையுடன் வாழ்கின்ற ஒளி யுருவினனும் திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

20 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தெற்றினர் புரங்கண் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.

                   -திருநாவுக்கரசர்  (4-71-8)


பொருள்: அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய் , வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர். மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார் .

17 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர் மேயானைப்
பழுதின்ஞான சம்பந்தன்சொற் பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின்
றழுதுநக்கு மன்புசெய்வார் அல்ல லறுப்பாரே.

                  -திருஞானசம்பந்தர்  (1-73-11)


பொருள்: பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர்மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

16 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குறித்தபொழு தேயொலித்துக்
கொடுப்பதற்குக் கொடுபோந்து
வெறித்தடநீர்த் துறையின்கண்
மாசெறிந்து மிகப்புழுக்கிப்
பிறித்தொலிக்கப் புகுமளவில்
பெரும்பகல்போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திருவருளால்
மழையெழுந்து பொழிந்திடுமால்.


                      -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (121) 


பொருள்: அடியவருக்குத் தாம் கூறியவாறு குறித்த அக் காலத்தில் கொடுப்பதற்காக, நறுமணமுடய மலர்கள் நிறைந்த குளத்தின் கண்ணுள்ள நீர்த்துறைக்குச் சென்று, அக்கந்தையைத் தோய்த்து அழுக்கினை நீக்குதற்காகப் பின்னர் உவர்மண் சேர்த்து மிகவும் புழுங்கும்படி வெள்ளாவியில் வைத்து வேறாக எடுத்து அதனைத் தோய்த்திடத் தொடங்கிய அளவில், நண்பகல் கழிந்து, பிற்பகலாய மாலைவேளை அணுகும் காலமுமாயிட, அக்காலத்தே மான் ஏந்திய கையையுடைய இறைவனின் திருவருளால் மழை பொழிந்திடலாயிற்று.

15 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

                   -திருமூலர்  (10-2-16,2)


பொருள்: உலகத்தில் உணர்வுடையார் சிலரே உயிர்கள் அனைத்தையும் ஒவ்வொரு கால எல்லையில் கூற்றுவன் கொண்டு போதலை மனத்துட் கொண்டார்கள். பின்னும் தன்னை உட்கொண் டவரது உயிரைத் தான் தன்னுட்கொள்ளும் குணம் உடையவனும், நன்னெறியாகிய ஞானநெறியில் சென்றவர்மாட்டு அருள்மீக் கூர்கின்றவனும் ஆகிய சிவபெருமானை அந்நன்னெறியிலே சென்று உணர்ந்தார்கள். அவர் மேன்மக்களாதலன்றியும், `தேவர்` எனவும் போற்றப்படுதற்கு உரியராவர்.

14 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காம்பிணை யாற்களி மாமயி
லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றுமென் சிந்தனைக்கே.

                       -மாணிக்கவாசகர்  (8-2,20) 


பொருள்:காம்பு இணையால் வேயிணையானும்; களிமா மயிலால் களிப்பையுடைய கரிய மயிலானும் கதிர் மா மணி யால் ஒளியையுடைய பெரிய நீலமணியானும்; வாம் பிணையால் வாவும் பிணையானும்; வல்லி ஒல்குதலால் வல்லி நுடங்குதலானும்; கயிலைப் பயில் புனமும் என் சிந்தனைக்குத் தேம்பிணை வார் குழலாள் எனத் தோன்றும் கயிலைக்கணுண்டாகிய அவள் பயிலும் புனமும் இன்புறுத்துதலால் என்மனத்திற்குத் தேம்பிணையை யுடைய நெடிய குழலையுடையாளென்றே தோன்றா நின்றது

13 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மங்கை பங்கனை மாசிலா மணியை
வான நாடனை ஏனமோ டன்னம்
எங்கும் நாடியுங் காண்பரி யானை
ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

                                   -சுந்தரர் (7-68-5)


பொருள்: மங்கை ஒருத்தியது பங்கை உடையவனும் , இயல் பாகவே மாசில்லாது விளங்கும் மணிபோல்பவனும் , வானமாகிய நாட்டை உடையவனும் , பன்றியும் அன்னமும் எவ்விடத்துத் தேடியும் காணுதல் அரியவனும் , எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலை வனும் , ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு நிறைந்து நிற்கின்ற அந்தணர்கள் தனது திருவடியைப் போற்றுகின்ற நம் தலை வனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் . வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

09 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகி லுய்யலா நெஞ்சி னீரே.

                                -திருநாவுக்கரசர்  (4-71-1)


பொருள்: மனைவி, பெற்றோர்  மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் சொந்தங்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து நெஞ்சே நீ தப்பி உய்யலாம் .

08 November 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றை யெழிலாரப்
போந்தமென்சொ லின்பம்பயந்த மைந்தரவர் போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே.

                   -திருஞானசம்பந்தர்  (1-73-2)


பொருள்: பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு, பாம்பு, கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர், காந்தள் செடிகள் பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர்  ஆவார்.

07 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எய்துமவர் குறிப்பறிந்தே
இன்மொழிகள் பலமொழிந்து
செய்தவத்தீர் திருமேனி
இளைத்திருந்த தென்னென்று
கைதொழுது கந்தையினைத்
தந்தருளும் கழுவஎன
மைதிகழ்கண் டங்கரந்த
மாதவத்தோர் அருள்செய்வார்.


                 -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (118)


பொருள்: தம் முன்பு வந்தருளும் அவ்வடியாரின் குறிப் பினைத் திருக்குறிப்புத்தொண்டர் அறிந்து, அவரை நோக்கி, இனியன வாகப் பலமுகமன் மொழிந்து, செப்பமுடன் நற்றவத்தினைப் புரிந் தருளும் தவச்சீலரே! உம் திருமேனி வாட்ட முற்றிருப்பதேனோ? என்று கூறிக் கைதொழுது, `உமது கந்தையாய ஆடையைத் தந்தரு ளுக! நான் அதைத் தோய்த்து அழுக்கு நீக்கித் தருவேன்` என்று கேட் டருளலும், அது பொழுது கருமை திகழும் கழுத்தை மறைத்து வந்த அத்தவமுனிவரும், திருக்குறிப்புத்தொண்டரை நோக்கி, இவ்வாறு அருள் செய்வாராய்.

06 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே. 

                          -திருமூலர்  (10-2-15,8)


பொருள்: ஐவகை மலங்களையும் முற்றக் கெடுத்துச் சிவமானவரே முடிந்த பயனைப் பெற்ற வல்லுநர். அதனால், அவமே பரமுத்தியாகிய சிவசாயுச்சத்தைப் பெற்று என்றும் இன்புறுவர். இனி வியப்பைத் தருவனவாகிய தத்துவங்களின் இயல்பை ஆராய்ச்சியால் உணர்கின்றவர் பாசஞான பசுஞானங்களின் நீங்கினாராயினும், அதன் பின்னர் அவற்றைத் தெளிய உணருங்காலத்தே பதிஞானம் எய்தி வீடுபெறுவர்.

02 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நின்னுடை நீர்மையும் நீயு
மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

                    -திருக்கோவையார்  (8-2,10) 


பொருள்:நின்னுடை நீர்மையும் இவ்வாறு நின் னுடைய வியல்பாகிய குணமும் இவ்வாறாயிற்று; நீயும் இவ்வாறு ஒருகாலத்துங் கலங்காத நீயும் இத்தன்மையையாயினாய் நினைத் தெருட்டும் என்னுடைய நீர்மையிது என் என்பதே; இனி நின்னைத் தெளிவிக்கும் என்னுடையவியல்பு யாதென்று சொல்வதோ! அது கிட க்க; சிலம்பா சிலம்பா; நின்னை இன்னே செய்த ஈர்ங் கொடிக்கு நின்னை யித்தன்மையையாகச் செய்த இனியகொடிக்கு; தில்லை ஏர் கொள் முக்கண் மன்னுடை மால்வரையோ மலரோ விசும்போ இடம் என் இயல் யாது தில்லைக்கணுளனாகிய அழகு பொருந்திய மூன்று கண்ணையுடைய மன்னனது பெரிய கயிலை மலையோ தாமரைப் பூவோ வானோ இடம் யாது? இயல் யாது? கூறுவாயாக

01 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


                       -சுந்தரர் (7-68-2)


பொருள்: வேதத்தின் இசையை விரும்புபவனும் ,  மனம் உருகித் துதிப்பவர்களது வினைத்தொடர்பை அறுப்பவனும் , பால் முதலிய ஆனைந்தினை ஆடவல்லவனும் , ஒலிக் கின்ற கடலும் , மலையும் , உலகும் ஆகியவற்றை ஏழேழாக உடைய தலைவனும் , ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும் , முல்லை நிலத் திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும் , திருநள்ளாற்றில் எழுந் தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .