31 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை யஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான் வலியை மாள
வுலப்பிலா விரலா லூன்றி யொறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையு ளானே.

                         -திருநாவுக்கரசர்  (4-57-10)


பொருள்: கயிலைமலைக்கு நேராக இராவணன் சென்று சேரப் பார்வதி அஞ்சத் தன் தலைக்கு மேலே கைகளாலே அம் மலையைப் பெயர்க்கத் தாங்கிய அவன் வலிமை அழியுமாறு என்றும் அழிவில்லாத தன் கால்விரலால் ஊன்றி அவனைத் தண்டித்து , அலைகளை உடைய சடையில் கங்கையைச் சூடும் ஆவடுதுறைப் பெருமான் பின் அவனுக்கு அருள் செய்தான் .

30 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைக டோறு மறையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

                               -திருஞானசம்பந்தர்  (1-59-1)


பொருள்:  ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள்தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானுக்கு உடைய கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.

27 January 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற்
போது போக்கும்
வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட
வாய்மை வேத
நன்மைத் திருநீற் றுயர்நன்னெறி
தாங்கு மேன்மைத்
தன்மைப் புவிமன் னரைச்சார்வதென்
றென்று சார்வார்.

                      - மூர்த்தி  நாயனார்  (18)


பொருள்: கீழான செயல் செய்வதில் வல்லமையுடைய சமணருடன் கூடித், தனது பொழுதினைப் போக்குகின்ற வன்மையான கொடும் பாதகன் மாய்ந்திட, மெய்யான நான்மறைகளில் கூறப்பட்ட நன்மையுடைய திருநீற்றின் நன்னெறியைத் தாங்கும் மேன்மையாய தன்மையுடைய ஆளும் அரசரை இப்பாண்டி நாடு என்று பெறவுள் ளதோ? என்ற எண்ணமுடையராய்

25 January 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.

                    -திருமூலர்  (10-2-3,6)


பொருள்: தேவர் பலரும் பற்பல காலங்களில் பற்பல துன்பங்களை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டு அத்துன்பம் நீங்குதல் வேண்டி அப்பெருமானை அவன் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்லி மலர்தூவிப் போற்றிசெய்து வழிபட, சிவபெருமான் அவர்களை அத்துன்பங்களினின்றும் நீங்கச் செய்தான்.

24 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

                          -மாணிக்கவாசகர்   (8-45-3) 


 பொருள்: தமக்கு  சுற்றமும்  அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர் களே! நீங்கள், நாம் யார்? எம்முடையது எது ? பாசம் என்பது என்ன ? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து இவை நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவனையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எமையாள் வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

23 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே.

                                -சுந்தரர்  (7-43-1)


பொருள்: நெஞ்சுருகி வணங்குகின்ற  அடியவர், நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்; நாளை வாய்க்கும் என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்துவிட்டால், அதன்பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்து விடுமோ? புகழையுடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே விரைந்து அருள்புரியீர்.

20 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே.

                      -திருவாவுக்கரசர்  (4-57-1)


பொருள்: மணியே ! மரகத மணிக் குவியலே! அடியேனுடைய உள்ளத்திற் புகுந்து உன்னை நினைக்கும் நிலையை இன்று தந்துள்ளவனே! யான் உயிர் நீக்கும் போது வந்து அடியேனுக்குத் துணையாக நின்று அஞ்சாதே என்று ஆவடுதுறையில் உள்ள  பெருமானே நீ எனக்கு அருள் செய்யவேண்டும் .

19 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே.

                      -திருஞானசம்பந்தர்   (1-58-8)


பொருள்: கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவ னாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை

18 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வந்துற்ற பெரும்படை மண்புதை
யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை
மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்னாணை
செலுத்து மாற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி
காவல் கொண்டான்.

               -மூர்த்தி நாயனார்  (12)


பொருள்: இவ்வாறு வந்துற்ற பெரும்படையை நிலம் தெரியாதவாறு நெருங்க அணியாகப் பரப்பி, சந்தனச் சோலைகள் நிரம்பிய பொதிய மலையையுடைய தமிழ்நாட்டினை ஆண்டுவந்த பாண்டிய அரசனின் வீரம் சிந்திடுமாறு, போரில் அவனை வென்று, பின்னர்ப் பாண்டிய நாட்டில் தனது ஆணையைச் செலுத்தும் வகையில் மணம் நிறைந்த சோலை சூழும் மதுரை மாநகரைத் தான் ஆட்சி கொண்டான்.

17 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.

                           -திருமூலர்  (10-2-3,1) 


பொருள்: உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது, சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன் என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். யாவரும்  அறியும்படி இந்நிலவுலகில் அன்புடன் வழிபாடு  செய்தாள்.

12 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பூவார் சென்னி மன்னனெம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.

                    -மாணிக்கவாசகர்  (8-45-1)


பொருள்: மலர் நிறைந்த முடியையுடைய அரசனாகிய பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியவர்களாகிய நம்மை, இடை யறாமல் உள்ளத்தில் கலந்து உணர்வுருவாய் உருக்குகின்ற பெருகிய கருணையினால், ஐயோ என்று இரங்கியருளப்பட்டு அன்பு உருவாய் ஆட்பட்டவர், நிலையில்லாத வாழ்க்கையை விட்டு நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடையக் காலம் வந்துவிட்டது. போவோம். வந்து முற்படுங்கள்.

11 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்
உழுவார்க்கரி யவ்விடை யேறிஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்
முழவாரொலி பாடலொ டாடலறா
முதுகாடரங் காநட மாடவல்லாய்
விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

                        -சுந்தரர்  (7-42-6)


பொருள்: தொழுகிறவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே , அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய் , நின்றவனே , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே , உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே , பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே ,  மத்தளஒலியும் , பாட்டும் , குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே , விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்ச மாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

10 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார் நடுவுடை யார்க ணிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார் திரிபுர மெரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும் ஆவடு துறைய னாரே.

                          -திருநாவுக்கரசர்  (4-56-8)


பொருள்: மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடுதுறைப் பெருமான் , முற்பட்டுத்தேவர்கள் வந்து முறைப்படி வணங்கித் துதிக்க , சிவபாதங்களைத் தம் நெஞ்சில் நடுதலாகிய செம்மையுள்ள நந்தி மாகாளர் என்பவர்களைத் தவிரத் தம்மை வழிபடாது வீணானவரான அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவராவர்

09 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.

                      -திருஞானசம்பந்தர்  (1-58-2)


பொருள்: தாழ்ந்த சடைமுடியை  உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய, திருக்கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.

06 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அப்பொற் பதிவாழ் வணிகர்குலத்
தான்ற தொன்மைச்
செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம்
செய்ய வந்தார்
எப்பற் றினையும்அறுத் தேறுகைத்
தேறு வார்தாள்
மெய்ப்பற் றெனப்பற்றி விடாத
விருப்பின் மிக்கார்.

                       -மூர்த்தி நாயனார்  (8)


பொருள்: அத்தகைய நகரத்தில் வாழும் வணிகர்களது குலத்தில், மிகவும் சிறந்ததென நெடுங்காலமாகச் செப்பத் தகுந்த சீருடைய குடியிலுள்ளோர், செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவர் ஒருவர். அவர் உலகியல் இன்பமாய எவ்விதப் பற்றி னையும் முற்றும் அறுத்து, ஆனேற்றின்மீது எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானின் திருவடிகளையே உண்மையான பற்று எனப் பற்றிக் கொண்டு அதனை விடாத விருப்பில் மிகுந்தவர்.

04 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.

                          -திருமூலர்  (10-2-2,8) 


பொருள்: சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.

03 January 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


காணும தொழிந்தேன் நின்திருப் பாதங்
கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. 

                    -மாணிக்கவாசகர்  (8-44-5)


பொருள்: உன் திருவடியைப் பிரிந்திருத்தலால் காண்பதை ஒழிந்தேன். கண்கள் களிப்பு மிகும்படி பார்த்துப் போற்றுவது ஒழிந்தேன். வாயால் துதிப்பதையும் விட்டேன். உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பும் என்னுடைய அற்பத் தன்மையால் தோன்றுதல் இல்லேனாயினேன். இவற்றால் பிறகு கெட்டேன். அதனால் நீ இனிமேல் என் முன் வந்தாலும் பார்ப்பதற்கும் நாணுவேன் 

02 January 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

                          -சுந்தரர்  (7-42-4)


பொருள்: பண்போலும் மொழியினையுடைய உமையை ஒருபாகத்தில் உடையவனே , யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே , இன்பத்தைத் தரும் அரிய அகிலையும் , நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , மண்பொருந்திய மத்தளமும் , குழலும் ஒலிக்க , மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல் , வானத்தில் பொருந்திய சந்திரன் தவழ்கின்ற திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வை.