31 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.
 
           - திருமூலர் (10-1-24)

 

பொருள்: திருமாலும்  சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை.  இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.

30 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்
கண்முக கரசர ணத்தோன்
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
படர்சடை மின்னுபொன் முடியோன்
வேயிருந் தோளி உமைமண வாளன்
விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
போற்றுவார் புரந்தரா திகளே

         - சேந்தனார் (9-5-8)

 

29 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து
நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை
யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின்
மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப்
பரம்பரனே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-34)

 

பொருள்: நிறைய  மலர்களையுடைய கயிலையில் வாழ் கின்ற பரம்பரனே ! உன் திருவுளக் கருத்திற்கு  நடப்பதில் மகிழ்ச்சியின்றி நின்று என் குறிப்பின்படி செய்து, உன் குறிப்பினை அறிவதில் விரைகின்ற என்னை விட்டு விடுவாயோ? வாழைப் பழத்தைப் போல என்னை மனம் குழையச் செய்து, மணம் நிறைந்து இனிதாய் இருக்கின்ற ஓர் இனிமையில் மற்றோர் இனிமை கலந்தது போன்று நீ எதிர்ப்படுவது எக்காலம்?

28 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே யமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
இறைஇறை திருவருள் காட்டார்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.
 
                 - சுந்தரர் (7-14-2)

 

பொருள்:  என்னைப் பெற்ற தாயைத்,  தந்தையைத் துணையென்று நினைந்திலேன்,   என்னை ஆண்ட தலைவனே துணை  என்று நினைத்தேன் . இவ்வாறு ஒருவன் உளன்  என்று , தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் , அன்னங்கள் மிக்கு வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திரு வுள்ளத்தடைத்து , சிறிது திருவருளைப் புலப்படுத்திலர் . இவர் தம் அடியவர்க்கு , மறுமை நலம் ஒன்றையே அளித்தலல்லது , இம்மை நலத்தை அருளுவதில்லையாயினும் . இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை.

27 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே.

              - திருநாவுக்கரசர் (4-18-1)

பொருள்: இப்பாடல் விடம் தீர்க்கும் திருப்பதிகம் ஆகும். சிவபெருமானுடைய  உள்ளத்தைப்போல உயர்ந்த கயிலை மலையும், அவர் சூடும் உயர்ந்த பிறையும் அவர் பிச்சை எடுக்குமாறு கையில் ஏந்திய மண்டையோடும், அவர் இவரும் காளையும் எண்ணிக்கையில் ஒன்று ஒன்றே ஆகும்.

23 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.
 
                 - திருஞானசம்பந்தர் (1-20-11)

 

பொருள்: சினத்தோடு  வந்த யானையை உரித்துப்போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை, மிக்க செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர் வாழும் சிவபுரநகரின் (சீர்காழி) மன்னனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள், கலைமகள், வெற்றி மகள், அவர்க்கு இனமான புகழ்மகள் ஆகியோர் தம்பால் பொருந்த, இவ்வுலகில் இனிதாக வாழ்வர்.

22 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்.
 
            - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (5) 

 

பொருள்:  மெய்ப்பொருள் நாயனார்  தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான்.

மாடம்பாக்கம் திருவிழா - தேர்

மாடம்பா க்கம் திருவிழா - தேர்








 

21 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்.

             - காரைகாலம்மையார் (11-4-29)

பொருள்: இவரது வெண்பொடி பூசிய  பேய் கோலத்தைக் கண்டு இகழ்பவர் எல்லாம், புறக்கோலத்தை மட்டுமே கண்டு, உண்மையை உணராதவரா வர்.

20 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.
 
            - திருமூலர் (10-1-22)

 

பொருள்: எல்லோருக்கும்  இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் கிடைக்கும்.

17 May 2013

மாடம்பக்கம் சித்திரை பெருவிழா காட்சி (17/5/2013)

தேனுகாம்பாள் உடன்னுறை தேனுபுரிச்வரர் அதிகார நந்தி சேவை (காலை 9 மணி)








 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
வருந்திநான் மறப்பனோ இனியே.
 
            - (9-5-7)

 

பொருள்: கங்கை போன்ற தூயநீரைஉடைய அரிசில் ஆற்றங் கரையில் இருபக்கங்களிலும் பூக்கள் மணம் கமழும் சோலை களைக் கொண்டதாய்க் வயல்வளம் உடையதாய்ச் சந்திரனைத் தொடும் படியான மிகஉயர்ந்த மேல்மாடிகள் நிறைந்த திருவீழிமிழலையில் உகந்தருளியிருக்கும், சிறந்த செல்வமாகத் தானாகவே தோன்றிய குண பூரணனாய், தன் பேரொளியே வடிவெடுத்தாற் போன்ற உமையொரு பாகனாய் உள்ள என் கிட்டுதற்கரிய அமுதத்தை, இனிமேல் மறந்து வருந்துவேனோ?

16 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி
அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத்
தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு
தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்குங்
கறைக்கண்டனே.
      
           - மாணிக்கவாசகர் (8-6-32)

 

பொருள்:  அடியார்களுக்கு இல்லாமல்  ஏனை யோர்க்குப் பற்றுதற்கு அருமையானவனே! ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே! சுடும் தீயாகிய ஒரு பூதமும் நிலைகலங்க, கடலின் கண்  உண்டாகிய நஞ்சை அமுதாக்கிய நீலகண்டப் பெருமானே! விடுதற்கு அருமையானவனே! வலி பொருந்திய யானையைப் போன்ற ஐம்புல ஆசைக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னை விட்டு விடுவாயோ?

15 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.
 
              - சுந்தரர் (7-14-1)

 

பொருள்: என்  தலையையும் , நாவையும் , நெஞ்சத்தையும் , இத் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானார்க்கே உரியன ஆக்கினேன் ; திருவடித் தொண்டினையும் அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன் ; இவற்றை யானே சொல்லின் , பொய்போல்வதாகும் . இந் நிலையில் , இவர் படம் விரித்த பாம்பினைக் கட்டிக்கொண்டு ஒரு கோவணத்தோடு இருந்து , பித்தரோடே ஒத்து , சிறிதும் திருவுளம் இரங்கிலராயினும் , எம்மைப் காக்கும்  தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை.

14 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவ ராரூ ரரநெறி யாரே.
 
                - திருநாவுக்கரசர் (4-17-10)

 

பொருள்: ஆரூர் எம்பெருமானார்  பொன்போன்ற சிவந்த சடையை உடையவர் . அவர் அவருடைய திருவடி நிழலிலே இனிய அருளைச் சூடி வழிபடுதலை வெறுக்காது இரவும் பகலும் அரசர்களும் கின்னரர் என்ற தேவகணத்தாரும் வானவர்களும் தொழும் தன்மையை உடையவர்.

13 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அயனொடு மெழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழ னிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதின் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.
 
              - திருஞானசம்பந்தர் (1-20-9)

 

பொருள்: நான்முகனும் நாராயணனும்  அளவிடமுடியாது அஞ்சி நிற்க, ஒரு சோதிப்பிழம்பாய்த் தோன்ற அவ்விருவரும் முறையாக சயசய எனப்போற்றித் துதிசெய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான் உறையும் பதி, வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும்.

10 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.
 
       - மெய்ப்பொருள் நாயனார் புராணம் (3)

 

பொருள்: உமையம்மையாரை ஒரு பாகத்தில் வைத்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயில்கள் அனைத்தினும் நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் குறையாது நடத்தி, ஏழிசையோடு கூடிய பாடல்களும், ஆடல்களும் சிறப்பாக ஓங்க அவற்றைப் பாதுகாத்து வாழ்கின்றவர். தம் தலைவராகிய சிவபெரு மானின் அடியவர் திருவடிகளையன்றி வேறொரு சார்பும்  இல்லாதவர்.

09 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.
 
             - காரைகாலம்மையார் (11-4-25)
 
பொருள்:  சிவபெருமான், எங்கும் சென்று பிச்சை யேற்பதையும், இரவிலே சுடுகாட்டில் ஆடுவதையும், இவை இவர் செய்யும் காரியமா ? என்று சிறிதும் எண்ணிப் பாராமலே செய்தற்குரிய காரணத்தை நாம் இங்கேயிருந்து கொண்டு என்ன என்று சொல்ல முடியும்? முடியாது. ஆகவே, நாம் அவனை நேரிற் காணமுடிந்த பொழுது அவனிடமே, `இவை எதற்கு` என்ற கேட்டுத் தெரிவோம். அது வரையில் சும்மா இருப்போம்

08 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
 
              - திருமூலர் (10-1-21)

 

பொருள்: சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாதவன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

07 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இத்தெய்வ நெறிநன் றென்றிருள் மாயப்
பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
புராணசிந் தாமணி வைத்த
மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
அறிவரோ அறிவுடை யோரே.
 
               - (9-5-5)

 

பொருள்: இத்தெய்வத்தை வழிபடும் வழி நல்வழி என்று உட்கொண்டு அஞ்ஞானமும் வஞ்சனையும் கூடிய பிறவிப் பிணி யிலிருந்து தாமே தம்மைக் காத்து கொள்ள இயலாத பொய் நெறியை  போன்று விரைவில் அழியும், நிலைபேறில்லாத தெய்வங்களைப் பரம் பொருளாகக் கருதி வழிபடும் வழியிலே அடியேன் ஈடுபடாத வகையில் அருள்புரிந்த, வேண்டியவர்க்கு வேண்டியன நல்கும் சிந்தாமணியாய், ஆதிபுராதனனாய் உள்ள சிவபெருமான் அமைத்து வைத்த உண்மையான தெய்வநெறியில் வாழும் அந்தணர்களின் திருவீழிமிழலையில், தேவருலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த செழுமையான கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவ பெருமானை விடுத்து, அறிவுடையார்கள் பயனில்லாத பிறபொருள்களைப் பொருளாக நினைப்பாரோ?

 

06 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற்
றச்சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின்
மின்னுகொன்றை
அலங்கலந் தாமரை மேனிஅப் பாஒப்
பிலாதவனே
மலங்களைந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு
மத்துறவே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-29)

 

பொருள்: பொன் போன்ற கொன்றை மாலை அணிந்த, செந்தாமரை மலர் போன்ற திருமேனியை உடைய அப்பனே! ஒப்பற்றவனே! என் சுற்றத் தொடர்பை அறுத்தவனே! என்னைக் குற்றத்தினின்றும் நீக்கியவனே! வெற்றி வில்லாகிய மேருவையுடைய எந்தையே! கடைகின்ற மத்துப் பொருந்தினவுடன் சுழல்கின்ற தயிர்போல, ஐந்து மலங்களாலும் அலைவுற்று வருந்துகின்ற என்னை விட்டு விடுவாயோ

03 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செய்யார்கம லம்மலர்
நாவலூர் மன்னன்
கையால்தொழு தேத்தப்
படுந்துறை யூர்மேல்
பொய்யாத்தமிழ் ஊரன்
உரைத்தன வல்லார்
மெய்யேபெறு வார்கள்
தவநெறி தானே.
 
            - சுந்தரர் (7-13-11)

 

பொருள்:  தாமரை மலர் சூழந்த திரு நாவலூருக்குத் தலைவனும் , மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன் , யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர் .

02 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணம்
தற்றவர் தம்வினை யானவெ லாமற
அற்றவ ராரூ ரரநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.
 
             - திருநாவுக்கரசர் (4-17-5)

 

பொருள்: பிரம்மகபாலத்தில்  பிச்சைவாங்கி உண்பவரும் , சுருண்ட கோவணத்தை இறுக்கிக் கட்டியவரும் , இயல்பாகவே வினையின் நீங்கியவருமாய் உள்ள எம்பெருமானாருடைய ஆரூர் அரநெறிக் கோயிலைத் தம் வினைகளாயின எல்லாம் நீங்குமாறு கையால் தொழும் வாய்ப்புப் பெற்றவர் , ஞான ஒளி பெற்றவராவர் .