31 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாதம்பர மன்னவர் சூழ்ந்து
பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை இவ்வுல
காண்டு தொண்டின்
பேதம்புரி யாஅருட் பேரர
சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணினர்
அண்ண லாரே.

               -மூர்த்திய நாயனார்  (48) 


பொருள்: தம்முடைய திருவடிகளை வேற்று நாட்டு அரசர் களும் பணிந்து போற்றிட, இவ்வுலகினைத் துயரம் பற்றாத வகையில் நன்னெறியில் ஆண்டு, திருத்தொண்டினின்றும் மாறிலாத வகையில் அருளரசாகவும் இருந்து, பின்னர்த் தலைவரான சிவபெருமானின் சேவடிகளை அடைந்தனர்.

30 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. 

                  -திருமூலர்  (10-2-7,1)


பொருள்: எலும்புகள் மற்றும் தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வ னாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.

29 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 

                 -மாணிக்கவாசகர்  (8-47-3)


பொருள்: திருப்பெருந்துறை இறைவன் தன் வேலை என் மனத்துக் கோத்தான்; இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைதொழுது உய்யும் வகையின் நிலையையும் அறிந்திலேன்.

28 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேயன தோளி மலைம
களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட
னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள்
அல்ல லறுக்கினும்
பேயனே பித்தனே என்ப
ரால்எம் பிரானையே.

              -சுந்தரர்  (7-44-5)


பொருள்: மூங்கில் போன்ற  தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற , வஞ்சனை இல்லாத , பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை , தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும் , அவனைச் சிலர் ` அவன் பேயோடாடுபவன் ; பித்துக் கொண்டவன் ` என்று இகழ்வர்

27 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப் பெருவேளூர் பேணி னானை
மெத்தநே யவனை நாளும் விரும்புமா றறிகி லேனே.

                    -திருநாவுக்கரசர்  (4-60-7)


பொருள்: ஞானிகளாய் வந்து தம் திருவடிகளை வணங்குபவர்களுக்கு முத்தியை வழங்குபவராய் , ஞானமூர்த்தியாகிய முதல்வராய் , எல்லா உலகமும் தாமேயாகிய பித்தராய் , மற்றவர் யாவரும் தம்மைத் துதிக்குமாறு பெருவேளூரை விரும்பிய மிக்க அன்புடைய பெருமானை நாளும் விரும்பி அறியாதேன் நான் .

24 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலுநற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.

                    -திருஞானசம்பந்தர்  (1-62-5)


பொருள்: வஞ்சகமான மனத்தைத் திருத்தி ஐம்பொறிகளை ஒடுக்கி நாள்தோறும் நல்ல பூசையை இயற்றி, நஞ்சினை அமுதாக உண்டருளிய நம்பியே என நினையும் சிவபக்தனும், அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கி மகிழ்ந்தவன், கொஞ்சும் கிளிகள் வானவெளியில் பறக்கும் திருக்கோளிலியில் விளங்கும் எம்பெருமான் ஆவான்.

23 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வையம் முறைசெய் குவனாகில்
வயங்கு நீறே
செய்யும் அபிடே கமுமாக
செழுங்க லன்கள்
ஐயன் அடையா ளமுமாக
அணிந்து தாங்கும்
மொய்புன் சடைமா முடியேமுடி
யாவ தென்றார்.

                -மூர்த்தி நாயனார்  (41)


பொருள்: நான்  அரசு செய்யவேண்டும்  எனில், பெருமானின் திருமேனியில் விளங்கும் திருநீறே எனக்குச் செய்யும் திருமுழுக்கு  ஆகவும், சிவபெருமானின் அடையாள மாய உருத்திராக்கமாலையே எனக்குச் சிறந்த அணிகலன்கள் ஆகவும், இறைவனின் சிறப்புடைய திருச்சடைமுடியே அணியும் திருவுடைய முடியாகவும், அமையத் தக்கன` என்றார்.

22 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே. 

                  -திருமூலர்  (10,2,6-4)


பொருள்: தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.

21 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 

               -மாணிக்கவாசகர்  (8-47-1)


பொருள்: திருப்பெருந்துறையை உடையவனாகிய இறை வனை அடையாது இருந்தேன்; என் மனத்தில் கொடிய வினை ஒழிய உடல் உருகிப் பொய்யும் பொடியாகாதுள்ளது. இதற்கு நான் என் செய்வேன்?.

20 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முடிப்பது கங்கையுந் திங்களுஞ்
செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ
ழக்கணை நூறினார்
கடிப்பதும் ஏறுமென் றஞ்சு
வன்திருக் கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லை
யோஎம் பிரானுக்கே.

               -சுந்தரர்  (7-44-1)


பொருள்: சிவபெருமான்  சூடுவது கங்கையையும் சந்திரனையும் , அழித்தது மூன்று மதில்களை , அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார் . தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு . அது கடித்தவுடன் , நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன் ; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ !

17 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்கு வேனே.

                      -திருநாவுக்கரசர்  (4-60-1)


பொருள்: வேதம் ஓதுபவரை  , தம்மை மறவாதார் மனத்தில் உள்ளவராய் , நீலகண்டராய் , ஒளிவீசும் நெருப்பில் கூத்து நிகழ்த்துபவராய் , பிறையை அணிந்த சடையினராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை நறுமண மலர்களைத் தூவி நாள்தோறும் நான் வணங்குவேன் .

16 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.

                 -திருஞானசம்பந்தர்  (1-62-1)


பொருள்:  மனமே! வாழும் நாள் போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவரது  திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

15 March 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.

               - மூர்த்தி  நாயனார்  (39)


பொருள்: மங்கலச் செயல் புரியும் மாந்தர்களை , நோக்கி, சிந்தையில் சிவமே நிலவுகின்ற திருவுடைய அரசர் பெருமானாய மூர்த்தியார், `இதற்குமுன் இங்கு இருந்த சமணக் கொள்கை மறைந்து, எவற்றிற்கும் முதற் பொருளாய சிவபெருமானை அடைதற்குரிய சைவம் ஓங்குவதாயின், இவ்வுலகை ஏற்றுத் தாங்கி இவ்வினிய அரசினை ஆள்வேன்,` என்றார்.

14 March 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே. 

                   -திருமூலர்  (10-2-6,1)


பொருள்: திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன் என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.

13 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொண்டர்காள் தூசிசெல்லீர்
பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்டிறல் யோகிகளே
பேரணி உந்தீர்கள்
திண்டிறல் சித்தர்களே
கடைக்கூழை சென்மின்கள்
அண்டர்நா டாள்வோம்நாம்
அல்லற்படை வாராமே. 

             -மாணிக்கவாசகர்  (8-46-2)


பொருள்: தொண்டர்களே! நீங்கள் முன்னணியாய்ச் செல்லுங்கள்! பத்தர்களே! நீங்கள் சூழ்ந்து செல்லுங்கள்! யோகிகளே! நீங்கள் பெரிய அணியைச் செலுத்துங்கள்! சித்தர்களே, நீங்கள், பின்னணியாய்ச் செல்லுங்கள்! இப்படிச் செய்வீர்களாயின் நாம் தேவர் உலகத்தை ஆளலாம்.

10 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
பித்தனொப் பான்அடித் தொண்ட னூரன் பிதற்றிவை
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
எத்தவத் தோர்களும் ஏத்து வார்க்கிட ரில்லையே.

                           -சுந்தரர் (7-43-10)


பொருள்: முத்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஓடுகின்ற திருமுதுகுன்றத்து இறைவரை, அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள, பித்துக்கொண்டவன் போன்ற நம்பியாரூரன் பிதற்றிய இப்பாடல்களை, தத்துவஞானிகளாயினும், பிறழாத உள்ளத்தை உடைய அன்பர்களாயினும், எத்தகைய தவத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்கு, துன்பம் இல்லையாகும்.

09 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஊக்கினான் மலையை யோடி யுணர்விலா வரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினா னஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினா ரமுத மாக வவளிவ ணல்லூ ராரே.

                          -திருநாவுக்கரசர்  (4-59-10)


பொருள்: ஓடிச் சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அறிவில்லாத இராவணனைக் கால்விரலால் அழுத்திப் பத்துத் தலைகளும் நொறுங்கச் செய்து அவன் அஞ்சுமாறு அவனுடைய நோன்பின் பயன்களுங் கெட நோக்கிய பெருமான் பின் அவனை அழுத்தியதால் ஏற்பட்ட துயரைப் போக்கி அமுதம் போல் உதவி அவனை அழியாமற் காத்தார் அவளிவணல்லூரார் .

08 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.

                      -திருஞானசம்பந்தர்  (1-61-11)


பொருள்:  குவளை மலர் கண்போல மலர்ந்து விளங்குவதும், மணம் கமழும் சோலைகளிலுள்ள தேனின் மணம் வீசுவதுமான, வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் கரைகளோடு கூடி நீர் நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்து இறைவர் மீது பாடிய வேதப்பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர்.

07 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேழத் தரசங்கண் விரைந்து
நடந்து சென்று
வாழ்வுற் றுலகஞ்செய் தவத்தினின்
வள்ள லாரைச்
சூழ்பொற் சுடர்மாமணி மாநிலந்
தோய முன்பு
தாழ்வுற் றெடுத்துப் பிடர்மீது
தரித்த தன்றே.

              - மூர்த்திய நாயனார் (34) 


பொருள்: பட்டத்து யானை, அவ் விடத்திற்கு விரைந்து சென்று, வாழ்வு கொண்ட இவ்வுலகம் செய் திட்ட தவத்தின் பெரும் பேறாகவுள்ள அம்மூர்த்தியாரைத், தனது முகத்தில் சூழ இடப்பெற்ற மணிகள் பதித்த நெற்றிப்பட்டம், இப்பெரு நிலத்தில் தோயுமாறு வணங்கி, தனது துதிக்கையால், அவரை எடுத்துத் தனது பிடரி மீது வைத்துக் கொண்டது.

06 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

                   -திருமூலர்  (10-2-5,5)


பொருள்: சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையைப் பலவாற்றானும் விளக்கியருளியபொழுது, வேதங்கள் அவனை நல்ல இசைகளால் துதித்தன. அப்பால் அப்பெருமான்  பிரமன் முன்னே செல்ல, அவன், `மகனே` என விளித்து இகழ்ந்ததனால் உண்டாகிய குற்றத்தை உடையவனாயினமை பற்றி அவன் மேற் சென்று கிள்ளிக்கொண்ட அவனது ஐந்து தலைகளில் தன்னை இகழ்ந்த நடுத்தலையில் ஏனைத் தேவரும் அவனைப் போலத் தன்னைப் பழித்துக் குற்றத்திற்கு ஆளாகாதவாறு அவரிடத்தெல்லாம் உஞ்ச விருத்தியை (பிச்சை ஏற்றலை) மேற்கொண்டான்.

02 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே.

                       -திருநாவுக்கரசர்  (8-59-2)


பொருள்: இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்த செயல் பெரிய குற்றமாயிற்று . ஆதலால் அச் செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நன்மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்டினாராக , ` நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் ` என்று விரும்பி நோக்கி , இராமபிரான் அம்பினால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமானாவார் .

01 March 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.

                       -திருஞானசம்பந்தர்  (1-61-3)


பொருள்: இவ்விறைவன் வரந்தை, சோபுரம் ஆகிய தலங்களில் எழுந்தருளியிருப்பவன். வேதாகமங்களை அருளிச்செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற் கிண்கிணி அணிந்தவன். கையில் உடுக்கை ஒன்றை ஏந்தியவன். சிவந்த சடைமுடிமீது கரந்தை சூடியவன். திருவெண்ணீறு அணிந்தவன். அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்