26 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே.
 
                - திருமூலர் (10-6-1)

 

பொருள்: நல்ல அரச னாயினும், யானை தேர் முதலிய படைகளையும் செல்வத்தையும் பகையரசர் கொள்ள அவை அவர்பாற் செல்வதற்கு முன்னே வாழ்நாள் உள்ளபொழுதே சிவபெருமானை அடைவானாயின் துன்பம் இல னாவன். இல்லையேல், அவற்றை அவர் கொண்ட பின்னர் துன்பக் கடலில் வீழ்ந்து கரைகாணமாட்டாது அலறுவான். 

24 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாழிஅம் போதத் தருகுபாய் விடயம்
வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசல ராதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழு மாளிகை மகளிர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.
 
             - கருவூர்த்தேவர் (9-16-4)

 

பொருள்: வடவாற்று நீரில் பரவிய பொருள்கள் சார்ந்துள்ள சுற்றிடத்தில் வரிசையாக விளங்கும் தோற்றமாகிய பச்சிலையோடு கூடிய மலர் முதலியவற்றின் உருவத்தைப் பொருந்திய வட்டம் தஞ்சை நகரைச் சுற்றிலும் பச்சிலையும், பூவும் ஓவியமாகத் தீட்டப்பட்ட பளிங்குச் சுவர் அமைக்கப்பட்டது போலத் தோற்ற மளிக்கவும், கரிய அகில் புகைமணம் வீசும் மாளிகைகளில் உள்ள மகளிர் இராக் காலத்தில் தம்விரல்களால் மீட்டும் யாழ்ஒலி எம் பெருமான் உகப்பிற்காகவே ஒலிக்கின்றது.

23 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தக்கனையும் எச்சனையுந்
தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
றருளினன்காண் சாழலோ.

                  - மாணிக்கவாசகர் (8-12-5)

 பொருள்: தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, தேவர்களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்து, யாகத்தினை நடத்தியவனாகிய தக்கனுக்கு ஆட்டின் தலையை அருள் செய்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

22 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காரூ ரும்பொழில்சூழ் கண
நாதனெங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி
நாவலா ரூரன்சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்பு
வார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறு
வார்பிழைப் பொன்றிலரே.
 
                 - சுந்தரர் (7-26-10)

 

பொருள்:  சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானாகிய தெவிட்டாத இனிய அமுதம் போல்வானை , அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ் மிக்க இச்செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினையாய் உள்ளன யாவும் நீங்கப்பெற்று , சிவலோகத்தை அடைவார்கள் ; குற்றம் இல்லது ஒழிவர் .

19 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை யென்றுங் கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலு மாமறைக் காட னாரே.
 
                        - திருநாவுக்கரசர் (4-33-9)

 

பொருள்: எல்லா உலகங்களையும் உடையவரயை  நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை மாமறைக் காடனார் அடியோடு தீர்ப்பார். 

18 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-35-2)
 
பொருள்: மலரால் அலங்கரிக்கப்பட்ட சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும், தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம்  ஒரு நெஞ்சம் ஆகா! 

17 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இம்முனைய வெம்போரில்
இருபடையின் வாள்வீரர்
வெம்முனையின் வீடியபின்
வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர்
பின்னாகத் தாமுன்பு
தெம்முனையில் ஏனாதி
நாதர் செயிர்த்தெழுந்தார்.
 
                - ஏனாதி நாயனார் புராணம் (25)

 

பொருள்: இவ்வாறு நிகழ்ந்த கொடிய போரில் இருசாரார் பக்கத்தும், வீரம் மிக்க மறவர்கள் கொடும் போர் செய்து பலர் இறந்தனர். இறவாது எஞ்சி நின்ற தம் படைவீரர்கள் பின்வர, தாம் முன்பு சென்று போர் செய்வாராகிய ஏனாதிநாதர் சினந்து எழுந்தனர்

16 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி
வியன்பிறையைக்
கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது
குறிக்கொண்மினே.
 
                        - சேரமான்பெருமாள்  நாயனார் (11-6-78)

 

பொருள்: வஞ்சனைக்கு இடம் அளிக்கா மல் இருந்து , உண்மையாக அடிமைப்படத் தெரிந்தவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, மேலானவனாகிய சிவ பெருமான் தனது நீண்ட முடியின்மேல் பெருவெள்ளப் பரப்பின் நுரையிலே சூடிய வெள்ளிய பிறையைக் கொள்ளுதற்குச் சூழ்கின்ற பாம்பு ஒன்று இருத்தலைக் கருத்துட் கொள்ளுங்கள்

15 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
 
                         - திருமூலர் (10-5-25)

 

பொருள்: இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவது தான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணினாலும்  அதனால் உண்டாவது ஒன்றும் இல்லை. 

12 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ
அங்ஙனே யழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் டிங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.
 
                      - கருவூர்த்தேவர் (9-16-1)

 

பொருள்: கோட்டை, பலவாக அழகு பொருந்திய பொருட் கூட்டத்தால் எடுப்பிக்கப்பட்ட நெடுநிலையாகிய எழுநிலை மாடங் கள் ஆகியவை, வெள்ளிய சந்திரன் பெரிய மலைப்பகுதியிலே தவழ்வதுபோல வெள்ளித்தகடுகள் மதிலிலுள்ள மேடைகளில் பதிக்கப்பட்டுக் காட்சி வழங்கும் மதில்களால் சூழப்பட்ட தஞ்சை யிலுள்ள இராசராசேச்சரம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானுக்கு, உலகங்களெல்லாம் தொழுமாறு வந்து தோன்றுகின்ற நூறாயிரகோடி பரிதிகளின் ஒளியினை உடைய சூரியன் உளதாயின் அதன் அளவாகிய ஒளியினை உடைய திருவுடம்பு வியக்கத்தக்கவகையில் பேரழகினதாக உள்ளது.

11 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ.
 
                       - மாணிக்கவாசகர் (8-12-1)

 

பொருள்: பூசுவது வெண்ணீறு; அணிவது பாம்பு; பேசுவது வேதம்; உங்கள் தெய்வத்தின் தன்மையிருந்தபடி என்னேடி? என்று புத்தன் வினாவ, பூசுவது, பூண்பது, பேசுவது என்னும் இவற்றைக் கொண்டு உனக்காகுங் காரியம் ஒன்றுமில்லை; அந்த பரமசிவன் எல்லா உயிர்களுக்கும் தக்க பயன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

10 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செஞ்சே லன்னகண்ணார் திறத்
தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நல
மொன்றறி யாமையினால்
துஞ்சேன் நானொருகாற் றொழு
தேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.
 
                     - சுந்தரர் (7-26-5)

 

பொருள்:  சிவந்த சேல்போலும் கண்களையுடைய மாதர் கூற்றிலே கிடந்து , மிகக்கதறி வருந்தினேன் ; அதனிடையே ஓரொருகால் , நான் மடிந்திராது உன்னை வணங்கினேன் ; எவ்வாறாயினும் அச்சமின்றி , உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலைச் செய்தலே இலன், திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

09 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேயன நாட ராகித் தேவர்க டேவர் போலும்
பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலு மாமறைக் காட னாரே.
 
                   - திருநாவுக்கரசர் (4-33-2)

 

பொருள்: தேவத்தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழிபட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.

08 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நலமா கியஞா னசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வா னடைவாரே.
 
               - திருஞானசம்பந்தர்  (1-34-11)

 

பொருள்: நன்மையை நல்குவதும் கலங்களை உடைய கடலால் சூழப்பெற்றதுமான சீகாழிப் பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின் பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்.

05 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வந்தழைத்த மாற்றான்
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.
 
             - ஏனாதி  நாயனார்  புராணம் (13)

 

பொருள்: தன்னிடத்தில் வந்து போருக்கு அழைத்தவ னாகிய அதிசூரன், வலிமை மிகுந்த ஆண் புலி என நிற்கும் ஏனாதி நாதர் முன்நின்று, நாம் இருவரும், வாள் வித்தை பயிற்றுவித்துவரும் தொழில் உரிமையை நிலைநாட்ட, இந்த வெளியிடத்து அணிவகுத்து நிற்கும் நம் இருவரது படைகளும் தம்முள் பொர, இவர்களில் வெற்றி கொள்வார் யாவரோ, அவரே அத்தொழில் உரிமைக்கு உரியவன் என்றான். 

04 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெரியா
ஏறுமின் வானத் திருமின்
விருந்தாய் இமையவர்க்கே.
 
                     - சேரமான் பெருமாள் நாயனார் (11-6-70)
 
பொருள்: நீங்கள்  நும்செயல்களை விடுத்து  சிவனைத் துதியுங்கள்; அவனுக்கு அணுக்கராய் நின்று சிறிய பணி விடைகளைச் செய்யுங்கள்.
 அவனை  கண்டு கண்கள் குளிர்ச்சியடையுங்கள்; மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள்; சிவனே முதல்வன் என்று  அவனைத் தெளியுங்கள்; எவரிடத்தும் பகைமை கொள்ளுதலைத் தடுங்கள்; ஆசையை அடக்குங்கள்; துன்பத்தினின்றும் நீங்குங்கள்; இவைகளையே வழியாகப் பற்றி வானுலகில் ஏறுங்கள்; ஏறியவராய் அங்கு வானத்தவர்க்கு எய்தற் கரிய விருந்தினராய் அங்கு அவர் உபசரிக்க வீற்றிருங்கள்.

03 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
 
               - திருமூலர் (10-5-20)

 

பொருள்: கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்

02 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை
இருந்தவன் திருவடி மலர்மேற்
காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன்
கழறுசொன் மாலைஈ ரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே
வளரொளி விளங்குவா னுலகே.
 
                     - கருவூர்த்தேவர் (9-15-10)

 

பொருள்: வயல்களையும்,  சோலைகளையும், குளங்களையும், தோட்டங்களையும் உடைய சாட்டியக்குடியிலுள்ளார் ஈட்டிய செல்வமாய் எழுநிலை விமானத்தின் கீழ் இருக்கும் பெருமானுடைய திருவடி மலர்கள் தொடர்பாக மெய்ப்பொருளைக் காட்டும் கலைகளைப் பயின்ற கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களையும் பொருந்திய மனத்தை உடைய சான்றோருக்கு வளர்கின்ற ஒளி விளங்கும் சிவ லோகம் உளதாவதாம்.

01 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

குலம்பாடிக் கொக்கிற
கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட
வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                    - மாணிக்கவாசகர் (8-11-20)

 

பொருள்: இறைவனது மேன்மையையும் குதிரைச் சேவகனாய் வந்த சிறப்பையும் உமாதேவியினது நன்மையையும் பாடி, இறைவன் நஞ்சுண்ட செய்தியைப் பாடி, தில்லையம்பலத்தில் நடிக்கின்ற திருவடிச்சிலம்பினது வெற்றியைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.