04 February 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 

                    -திருமூலர்  (10-19-2)


பொருள்: உண்ணப்புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத் தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.

03 February 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


நேசமு டையவர்கள் நெஞ்சு
ளேயிடங் கொண்டிருந்த
காய்சின மால்விடையூர் கண்
ணுதலைக் காமருசீர்த்
தேச மிகுபுகழோர் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தீசனை எவ்வுயிர்க்கும் எம்
இறைவன்என் றேத்துவனே.

                         -திருவாலிய அமுதனார்  (9-25-9)


பொருள்:  நேசமுடைய அடியவர்களின் உள்ளத்துள்ளே தன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு தங்கு பவனாய், பகைவர்களைத் துன்புறுத்தும்  காளையை வாகனமாக இவர்கின்ற, நெற்றிக் கண்ணுடையவனாய், விரும்பத்தக்க சிறப்பினை உடைய உலகத்தில் மிகுகின்ற புகழை உடையவர்கள் வாழும் தில்லைமாநகரில் சிற்றம்பலத்தில் வீற்றிருக் கும், மற்றவரை அடக்கியாளும் பெருமானை எல்லா உயிர்களுக்கும் தெய்வமாயவன் என்று புகழ்ந்து கூறும்நான் அவன் அருள்பெறுவது என்றோ?

02 February 2016

தினம் ஒரு திருமுறை


 தினம்  ஒரு திருமுறை


சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்
கோதிலா ஏறாம் கொடி. 

                       - மாணிக்கவாசகர் (8-19-10)


பொருள்: சோலையில் வாழ்கின்ற பச்சைக் கிளியே! தூய்மையான நீர் சூழ்ந்த திருப்பெருந்துறை மன்னனது கொடியாவது, பகைவர் மிகவும் திடுக்கிட்டு அஞ்சும்படி மேலே விளங்கி, அழகைக் காட்டுகின்ற குற்றமில்லாத இடபமேயாகும். அழகு விளங்கும் அக்கொடியினைக் கூறுவாயாக



01 February 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரை
மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர்
வேண்டிக் காதல் மொழிந்தசொல்
மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன்
றொண்டன் வாய்மொழி பாடல்பத்
துன்னி இன்னிசை பாடு வார்உமை
கேள்வன் சேவடி சேர்வரே.

                      -சுந்தரர்  (7-36-11)


பொருள்: அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள , காட்டில் வாழும் அழகராகிய இறைவரை , தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையினையுடைய மங்கையர் பலர் காதலித்து அக் காதலை வெளிப்படுத்திய சொற்களை யுடைய , நிலைபெற்ற பழைய புகழினையுடைய திருநாவலூரில் தோன்றினவனாகிய வன்றொண்டனது வாய்மொழியான இப் பாடல்கள் பத்தினையும் , மனத்தில் புகக்கொண்டு , இனிய இசையாற் பாடுபவர் , உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது செவ்விய திரு வடியை அடைவர் .