02 November 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நின்னுடை நீர்மையும் நீயு
மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

                    -திருக்கோவையார்  (8-2,10) 


பொருள்:நின்னுடை நீர்மையும் இவ்வாறு நின் னுடைய வியல்பாகிய குணமும் இவ்வாறாயிற்று; நீயும் இவ்வாறு ஒருகாலத்துங் கலங்காத நீயும் இத்தன்மையையாயினாய் நினைத் தெருட்டும் என்னுடைய நீர்மையிது என் என்பதே; இனி நின்னைத் தெளிவிக்கும் என்னுடையவியல்பு யாதென்று சொல்வதோ! அது கிட க்க; சிலம்பா சிலம்பா; நின்னை இன்னே செய்த ஈர்ங் கொடிக்கு நின்னை யித்தன்மையையாகச் செய்த இனியகொடிக்கு; தில்லை ஏர் கொள் முக்கண் மன்னுடை மால்வரையோ மலரோ விசும்போ இடம் என் இயல் யாது தில்லைக்கணுளனாகிய அழகு பொருந்திய மூன்று கண்ணையுடைய மன்னனது பெரிய கயிலை மலையோ தாமரைப் பூவோ வானோ இடம் யாது? இயல் யாது? கூறுவாயாக

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...