25 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின்
மழைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும் பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
             - திருமாளிகைத்தேவர் (9-8-1)

 

பொருள்: கட்டாக  விரிந்த தலைகளையும் அத்தலைகளின் மேல்  சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...