12 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூமொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் லிவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே.
 
                   - சேந்தனார் (9-7-11)

 

பொருள்: அறியாமையாகிய மயக்கம் நிலவப்பெற்ற மனமே! தூய்மையான சொற்களையே பேசும் தேவர்களின் தலை வனும் செழுமையாகத் திரண்ட சோதி வடிவினனும் ஆகிய சுவாமி எனப்படும் முருகனைப்பற்றிச் செப்புறை என்ற ஊரினைச் சார்ந்த சேந்தன் ஆகிய அடியேன் வளமையாகத் திரண்ட வாயினை உடைய தலைவியின் தாய்மார் கூறும் சொற்களாகச் சொல்லிய இச்சொற்களால் செழுந்தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற உதிக்கின்ற ஞாயிறு போன்ற ஒளியை உடைய முருகப் பெருமானைப் புகழ்பவர்கள், புகழக் கேட்பவர்களுடைய துன்பங்களும் கெடும். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...