25 September 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு
நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய்த ரும்படி வேண்டின வெல்லாம்
வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை
எய்த ஆகம விதியெலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.

                   -திருகுறிப்புத்தொண்டர் நாயனார்  (60)


பொருள்: உயிர்கள் யாவையும் ஈன்றவரான உமையம் மையார், தாம் கொய்த பல மலர்களும், கம்பையாற்றில் எடுத்த நீராட்டு நீரும், ஒளிநிலவும் திருமேனிப் பூச்சாகும் சந்தனமும், நெய்விட் டேற்றிய செழுமைமிக்க சுடருடைய விளக்குகளும், நறுமணப் புகைகளும் ஆகிய இவையாவும் நிறைவுடைய சிந்தையில்,நீளப் பெருகிய அன்பினால், அங்கு உண்மையான வழிபாட்டிற்கு வேண்டிய பொருள் எல்லாவற்றையும் எம்பெருமாட்டியார் வேண்டியபோது அவரிடம் எடுத்துத் தோழியர் கொடுத்திட, அது மெய்ம்மையான வழி பாடாக விளங்கிட, ஆகமத்தில் சொல்லியவாறு எம்பிராற்குப் பூசனை செய்துவந்தார்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...