12 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.
 
       - மாணிக்கவாசகர் (8-7-4)

 

பொருள்: ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடையவர்கள்  எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளான வனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...