09 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர்
அண்டமாம் சிறுமைகொண் டடியேன்
உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள்மூன் றெரித்த
கண்டனே நீல கண்டனே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
 
                -கருவூர்த்தேவர்  (9-13-6)

 

பொருள்: அண்டங்கள் எல்லாம் தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணு அளவின என்று கூறுமாறு மிகப்பெரிய வடிவினனாகவும், தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணுவே ஓர் அண்டத்தை ஒத்த பேருருவினது என்று சொல்லுமாறு சிறுமையிற் சிறிய வடிவினனாக வும் உள்ள தன்மையைக் கொண்டு, அடியேன் நுகரும் பிராரத்தவினை உன்னைச் சேர்ந்ததாக ஆகுமாறு அடியேனுடைய உள்ளத்தினுள் கலந்து விளங்கும் மேம்பட்ட ஒளி வடிவினனே! வாசுகி என்ற பாம் பினையே நாணாகக் கொண்டு பெரிய மேருமலை ஆகிய வில்லாலே பகைவர்களின் மும்மதில்களையும் எரித்த வீரனே! நீல கண்டனே! கங்கைகொண்ட சோளேச்சரத்தானே!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...