04 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.

                             - சுந்தரர் (7-16-1)

பொருள்:  குரும்பை போன்ற  தனங்களையும், பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து, அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது   என்று வினவின், பேரரும்புகளின் அருகே சென்று, சுரும்பு   என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட, ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட, அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில், கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே ஆகும். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...