21 June 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆருயிர் காவல்இங் கருமை யாலே
அந்தணர் மதலைநின் னடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரே எங்கள் தில்லை வாணா
சேயிழை யார்க்கினி வாழ்வரிதே. 

                           -புருடோத்தநம்பி அடிகள்  (9-26-7) 


பொருள்: இவ்வுலகில் தன்னுடைய அரிய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள இயலாமையாலே அந்தணர் மகனாகிய மார்க்கண்டேயன் உன் திருவடிக்கண் வணங்க, கூரிய முனையினை உடைய வேலாகிய படைக்கலனை ஏந்திய கூற்றுவன் அழியுமாறு உன் கழல் ஒலிக்கும் திருவடி ஒன்றினைச் செயற்படுத்த நீ போரிட்டனை என்றால் தேவர்களில், குறைவில்லாதவர்கள் யாவர்? அவரவர் நுகரும் துயரங்களைப் போக்குதற்கு ஒருப்பட்டு நிற்கின்ற சிறந்த உயிர்போல்பவனே! எங்கள் தில்லையம்பதியில் வாழ்கின்றவனே! நீ காவாதொழியின் சேயிழையார் ஆகிய மகளிருக்கு இனி உயிர் வாழ்தல் அரிது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...