31 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்.
                - சேக்கிழார் (12-4-3)

 

பொருள்: கங்கையாற்றை  தாங்கிய சிவபெருமானுக்கு மெய் யடிமை செய்தற்குக் உரியவராகவும்  , உள்ளத்தில் அருள் நிறைந்தவராகவும்  , திருநீற்றினை அணிந்ததாயும் உள்ள திருவுடம் பினையுடைய அடியவர்கள், தம் திருவுள்ளத்தில் உளங்கொள்ளும் செயல்களையெல்லாம் அவர் திருவுள்ளம் நிறையுமாறு ஆற்றி, மாறு படுதல் இல்லாத ஒழுக்க நெறியில் நிலைபெற்று விளங்கும் இல்லறத்தை நடத்துகின்ற இன்பத்தால் வந்த பெரும்பேறெல்லாம் அவ்வடியவர்கள் அதனை விரும்பிச் செய்து வருகின்ற காலத்தில்.

28 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

                 - காரைக்காலம்மையார் (11-4-2)

பொருள்: அன்பை அறுத்துவிடதவருக்கு, எம் ஈசன்  இடர்களைகளைபவராகவும் ,  இறங்குபவராகவும், செல்லும் நெறி காட்டுவிப்பவராகவும்,   ஒளி வடிவில் அருள்பவராகவும் உள்ளார். 

27 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
                            - திருமூலர் (10-1-3)

 

பொருள்: அயன், அரி, உருத்திரன்  என்ற  ஏனை மூவரையும்  படைக்குமாற்றால் உள்ள  மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்;  தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்: தன்னை, "அப்பா / அம்மா " என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் அம்மையாயும் இருக்கின்றான்.பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய எம் சிவபெருமானேயாகும். 

26 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

திருநீ றிடாஉருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீ ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

                 - திருமாளிகைத்தேவர் (9-3-10)
 
பொருள்: திருநீற்றை நீரில் குழைத்து நெற்றியில் அணிந்து, திருநீறு அணியாத உருவத்தைத் தீண்டேன் என்று சொல்லிப் நீலகண்டனாகிய சிவபெருமானுடைய பண்பு செயல் இவை பற்றிய செய்திகளை  சொல்லிக் கொண்டு தெருவிலே திரிகிறாள். பருவமழையால் பெருகு கின்ற நீர் இழியும் அருவிகளை உடைய மகேந்திரமாகிய மலையில் ஆகமப்பொருளை உமாதேவியாருக்கு உபதேசிக்கும் குருவே! குணக்குன்றே! என்று குலாத்தில்லை அம்பலக் கூத்தனுடைய நினைப்பிலே, சிவபெருமானுடைய உருவெளித் தோற்றத்தைக் கண்டு அழைக்கிறாள்.

24 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று
பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே.
 
              - மாணிக்கவாசகர் (8-6-7)

 

பொருள்: மிடற்றில் நஞ்சுண்டதால் கருமையையுடையவனே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! செம்மேனி உடையவனே  ! மங்கலப் பொருளானவனே! சிறியேனது பிறவியை துன்பத்தை நீக்குபவனே,  பொய்யவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி,  என் சிறுமையை மறைத்த உண்மைப் பொருளே! என்னை விட்டுவிடுவாயோ?

21 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையொர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ!
 
           - சுந்தரர் (7-11-1)

 

பொருள்: திருமால், பிரமன் ஆகிய கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும்,  உமையம்மையை தமது திருமேனியில் ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும்  இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்ற  தலம் இதுவே !

20 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணானாய் மணியானாய் கருத்தானா யருத்தானாய்
எண்ணானா யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
 
                   - திருநாவுக்கரசர் (4-13-7)

 

பொருள்: கண்ணாகவும் மணியாகவும் ,  கருத்தாகவும், எண்ணாகவும் , எழுத்தாகவும் , எழுத்தின் இயல்பாகவும் ,  விண்ணாகவும்  , வானத்தில் இயங்கிய முக் கோட்டைகளை  அழித்த மறையவனாகவும்  , அடியேனுக்கு நெருங்கியவனாகவும் உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

19 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தலமல்கிய புனற்காழியுட் டமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
                           - திருஞானசம்பந்தர் (1-15-11)

 

பொருள்: தண்ணீர்  சூழ்ந்த சிறந்தக் காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நிலத்தில் புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய  பயன்கள் பலவற்றைத்தரும் பாடல்களாகிய இவற்றைக் பலகாலும் பாடவல்லவர் சிவகதியைச் சேர்வர்.

18 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
 
           - சேக்கிழார் (12-3-42)

 

பொருள்: சிற்றம்பலத்தில்  ஆனந்தக் கூத்தாடி, அடியவர்களின் இல்லங்கள் தோறும் எழுந்தருளியவரும் , தேவர்கட்குத் தலைவரும் ஆன சிவபெருமானும், ஐவகை புலன்களை  வென்றதனால் சிறப்படைந்தவர்களே! நம்மிடத்தில்  அன்போடு இருவரும் எந்நாளும் இவ்விளமை நீங்காமல் இருந்து வாழ்வீர்களாக என்று அருளி மறைந்தார். 

17 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

         - காரைக்காலம்மையார் (11-4-1)

பொருள்: நன்கு மொழிப்பயின்று, தெளிந்து உன் திருப்பாதமே சேர்ந்தேன். அழகு மிகுந்த கருமையான கண்டத்தை உடைய பெருமானே என்று என்னுடய
இடர் தீரும்? 

14 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
 
               - திருமூலர் (10-1-2)

 

பொருள்: சிவபெருமானைத் தவிர அமரர்  பிறர் இல்லை, அவனை உணராது செய்யும் தவம்  பயன்தருவதில்லை,  அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடத்தமுடியாது,. அவனது அருளின்றி முத்திக்கு பெறுவதற்கு வழி இல்லை.

13 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வண்டார் குழல்உமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
கடிநா யுடன்கை வளைந்தாய் என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலை பல்ப சுங்கண்
கொண்டாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
        - திருமாளிகைத்தேவர் (9-3-6)

பொருள்: வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய உமாதேவியாரின் முன்பு, மகேந்திரமலைச்சரிவில் பன்றியின் பின்னே,  வில்லை ஏந்தி வேடர் களும், விரைந்து செல்லும் வேட்டைநாய்களும் உடன்வரப் வளைத்துக் கொண்டு அம்பு எய்தவனே! பிரமன், தக்கன், வேள்வித் தலைவன் இவர் களுடைய தலைகளையும், பூஷன் என்பவன் பற்களையும், பகன் என்பவன் கண்களையும் நீக்கினவனே! குணக்குன்றே! தில்லையம்பல கூத்தனே 
 

12 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும்
நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண்
மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங்
கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச்
செழுஞ்சுடரே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-4)

 

பொருள்: வெண்மையான  பிறையானது விளங்கு கின்ற, நீண்ட சடை முடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பொன்னையும், மின்னலையும் ஒத்த காட்சியையுடைய செழுமையாகிய சோதியே! வளர்ந்து கொண் டிருக்கிற, உனது கருணைக் கரத்தில் வளைத்துப் பிடிக்கவும் நீங்கி , இவ்வுலக வாழ்விலே புரளுகின்ற என்னை விட்டுவிடுவாயோ?

11 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.
 
              - சுந்தரர் (7-10-10)

 

பொருள்: வீடுப்பேறு (முத்தி) பெறுதற்பொருட்டுப் பல்லூழி காலமாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும் , அதனால் வினை நீங்கப்பெறும் இடமும் , பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று , அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவியில்  வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய ,  திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலைப் பாடும்பொழுது ,   நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார்   சிவபிரானது இடத்தை அடைவார்கள் 

10 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
                  - திருநாவுக்கரசர் (4-13-6)

 

பொருள்: நீருமாய்  நெருப்புமாய்  செல்வமுமாய்  செல்லும் வழியாய்  ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே ! பல திருநாமங்கள்  உடையவனே ! பிறை சூடியே ! பிணிகளைப் தீர்க்கும் பெருமானே,    அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன் .

07 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.
  
                  - திருஞானசம்பந்தர் (1-15-2)

எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுபவர்கள்  பழி பாவம் தீரும் என்பது திண்ணம். ஆரவாரத்துடன் வரும் அலைகள், பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுவதால்  பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

06 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இளமையின் மிக்கு ளார்கள்
இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி
ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி
வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.

           - சேக்கிழார் (12-3-9)

பொருள்: இளமை காலம் முதலே  திருநீலகண்டரும் அவர் மனைவியாரும்ஒருங்கு ஏற்று நின்ற அளவில்லாத சீர்மை மிகுந்த திருவாணையைப் போற்றி ஒழுகினர், ஆண்டுகள் பலவும் சென்றன. வளம் மிக்க இளமைப் பருவம் நீங்கி,   மூப்புப் பருவம் வந்து மிகவும் தளர்ந்த  பொழுதும், தாம் இது காறும் சிவபெருமானிடத்து வைத்த அன்பினின்றும் நீங்காராயினார்.

05 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

                 - காரைக்காலம்மையார் (11-3-20)

பொருள்: எவ்வளவுதான் உத்தமராய் வாழ்ந்தாலும், அவர் இறந்தால் மரத்தை வைத்து தீமூட்டிவிடுவர்கள். ஆதலால், நஞ்சுண்ட பிரானை நெஞ்சே நீ நினைத்தல் நிலையான வீடுபேரை நீ பெறுவாய். 

04 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

            - திருமூலர் (10-1-1)

பொருள்: தேவர்  ஒருவரும் சிவனோடு ஒப்பவர்  இல்லை; இப்பூவுலகில் அவனொடு ஒப்பவராவார் இல்லை; உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் விளங்கும் முழு முதற்கடவுள் அச்சிவ பெருமானேயாகும் .

03 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றிற்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்தா
கருவடி குழைக்கா தமலச்செங் கமல
மலர்முகம் கலந்ததென் கருத்தே.

             - திருமாளிகைத்தேவர் (9-2-9)

பொருள்: திருமால், இந்திரன்,பிரமன் ஏனைய தேவர்கள் எல்லோரும்  உன்னைத் தரிசிக்க வரும் போது உள் வாயில் காவலில் உள்ள தடையால் நெருக்கவே, அவர்களுடைய கிரீடங்கள் ஒன்றோடொன்று மோது வதால் பெயர்ந்து கீழே விழும் இரத்தினங்கள் வாயிலின் முன்னிடத் தில் ஒளிவீசும் பெரும்பற்றப் புலியூரின் சிற்றம்பலத்தில், பெரிய மேருமலையாகிய வில்லாலே திரிபுரத்தையும் தீக்கு இரை யாக்கிய கூத்தனே! பெரிய குழைகளை அணிந்த காதுகளை உடைய களங்க மற்ற செந்தாமரை மலர் போன்ற உன் திருமுகம் என் எண்ணத்தில் கலந்துவிட்டது.