18 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை

            -சுந்தரர்  (7-74-1)


பொருள்: மின்னலை உண்டாக்குகின்ற மேகங்கள் மழையைப் பொழிந்தபின் , அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற , அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது , அகன்ற கரையின்கண்  எழுந்தருளியிருப்பவரும் , திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவரும் , தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும் , என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது !

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...