31 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 

                 -திருமூலர்  (10-3-5,1)


பொருள்: ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.

30 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பிணையுங் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
   
              -திருக்கோவையார்  (8-16,9) 


பொருள்:- பிணையுங் கலையும்  மிக்க நீர் வேட்கையால்; நிரம்பிய அத்தமும் பெரிய பேய்த்தேரினைச் சென்றணுகும் முரம்பா னிரம்பிய சுரமும்; ஐயனே; நின்னொடு சொல்லின் மெய்யாக எம்பைந்தொடிக்கு; ஒப்பு மெல்லையு மில்லாத இறையோனுறைகின்ற தில்லை வரைப்பிற் பூக்களையுடைய குளிர்ந்த மருதநிலமும் பொய்கையு மல்லவோ! நீயிவ்வாறு கூறுவதென்னை

27 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி யன்றிமற் றறியான்
அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே

                 - சுந்தரர் (7-74-10)


பொருள்: மங்கை ஒருத்தியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தும் , இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற , பகைத்தலை யுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடைய வனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாத வனாகியும் , அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடிய வனாகிய நம்பியாரூரன் , கங்கை போலப் பொருந்திய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை , தங்கள் கையால் தொழுது , தங்கள் நாவிற் கொள்பவர்கள் , தவநெறிக் கண் சென்று , பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம் .

25 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த
எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை
அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

                        -திருநாவுக்கரசர்  (4-84-3)


பொருள்: தாங்குதற்கரிய சினம் கொண்டு தக்கன் செய்த வேள்வியினை அழித்து மகிழ்ந்தவனாய் , நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கிய சூலப்படையை உடையவனாய் , இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய பெரியவனாய் , மேம்பட்ட அடியார்களின் பிறவித்தொடர்பை அறுப்பவனாய் , தான் பிறவா யாக்கைப் பெரியோனாய் இருக்கும் சிவபெருமானுடைய அடி நிழல் கீழது எம் ஆருயிரே

24 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அடையார் புரமூன்று மனல்வாய் விழவெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.

                 -திருஞானசம்பந்தர்  (1-83-1)


பொருள்: பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு அழியுமாறு கணைஎய்தவனும், நீரைத் தேக்கும் மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை உடைய எம் தந்தையும், வெண்மையான பிறை மதியை அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் சாரா.

23 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.

             -திருநாவுக்கரசர் புராணம்  (48)


பொருள்:  அப்பெருமாட்டி யார்தம் கனவில், இளமையான ஆனேற்றை உடைய சிவபெருமான் எழுந்தருளி, நீ உன்னுடைய மனக் கவலையை ஒழிவாயாக, உன் தம்பி முன்னமே ஒரு முனிவனாக இருந்து எம்மை அடைவதற்குத் தவம் செய்தனன், இனி அவனுக்குச் சூலை நோய் தந்து ஆட் கொள் வோம் என அருளிச் செய்தார் 

20 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. 

                    -திருமூலர்  (10-3-4,2)


பொருள்: பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய், ``பதுமாதனம்`` என்று சொல்லுதலைப் பெறும்.



19 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஒராக மிரண்டெழி லாயொளிர்
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.

               -திருக்கோவையார்  (8-16,1) 


பொருள்: ஒருமேனி பெண்ணழகு மாணழகுமாகிய விரண்டழகாய் விளங்குமவனது தில்லைக் கணுளளாகிய வொண்ணு தலுடைய; பூசப் படுவன பயின்று; அமிர்தத்தைப் பொதிந்து;  நெய்த்த சுணங்காகிய செம்பொன்னின் பொடியைச் சிதறின முலைகள்; இப்படியே பெருத்த கதிர்ப்பைக்கண்டால்; வள்ளலே; எமர் எண்ணுவது இல்லையே இவண் மாட்டெமர் நினைப்பதில்லையே?

18 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை

            -சுந்தரர்  (7-74-1)


பொருள்: மின்னலை உண்டாக்குகின்ற மேகங்கள் மழையைப் பொழிந்தபின் , அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற , அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது , அகன்ற கரையின்கண்  எழுந்தருளியிருப்பவரும் , திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவரும் , தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும் , என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது !

10 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவில்
கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.

                -திருநாவுக்கரசர் (4-83-1)


பொருள்: மழு ஆயுதத்தைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தலம் யாது என்று வினாவினால் , நகர்ப்புற வாயிலில் கொடிகள் உயர்ந்து விளங்கும் நெடும் மாடங்களைக் கொண்டு விளங்கும் திருக்கழுமலமே அதுவாம் . அப்பதியானது நீர்மடைகளிற் பூம்பாளை விரியுந் தோறும் அவற்றிற் சொரியுந் தேனைப் பெண்வண்டுகள் முன்னதாக உண்ணவிட்டு அவற்றின் கடைவாயிற் சொட்டுந் தேனை ஆண் வண்கள் அருந்திக் கொண்டு பிரியாதிருக்கும் பெரும்பதியுமாம் .

09 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை யெழிலார் பொழிற்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.

                -திருஞானசம்பந்தர்  (1-82-11)


பொருள்: விண்ணிலிருந்து  வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல் சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை, அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.

06 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பேராத பாசப்
பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.

            -திருநாவுக்கரசர் புராணம்  (42)


பொருள்: பாசக் கட்டு நீங்குமாறு, சிவபெரு மானிடத்தே மீதூர்ந்த அன்பு கொண்ட திலகவாதியம்மையார் , புண்ணியத் தன்மை வாய்ந்த, திருக்கெடிலம் ஆற்றின் நீண்ட வடகரையில் அமைந்திருக்கும் நீடும் பெருஞ்சிறப்பு மிக்க திருவதிகை வீரட் டானத்தை அடைந்தார்.

05 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

             - திருமூலர் (10-3-3,2)


பொருள்: தவம், செபம், ஆத்திகம், இன்பம் , தானம், சிவன் விரதம், சித்தாந்தக் கேள்வி, மகம், சிவபூசை, நற்பண்பு பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.


04 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.

             - திருக்கோவையார் (8-15,12) 


பொருள்: ஒளியார்ந்த மதியே;  தில்லைக்கணுளனாகிய தொல்லோனது அருளுடையா ரல்லாதாரைப்போலக் கண்ணோட்டமின்றிப் போனவர் போதலா லுண்டாகிய இன்னாமையை நீயேகண்டாய் யான் சொல்ல வேண்டுவதில்லை; வளைகணிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சு நெகிழ்ந்துருகாநின்றது;  நெடுங்கண் கடுயிலாவாய்க் கண்ணீர்த்துளியாகிய கதிர் முத்தங்களை  அவர்க்குச் சொல்வாயாக; இது நின்னை யானின்றிரக் கின்றதிது என்றவாறு 

03 July 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி யுரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

              - சுந்தரர் (7-73-10)


பொருள்: எனக்கு உள்ள ஆசையை ஒன்றையும் நீக்கமாட்டேன் ; அவ்வவாவினால் யாவ ரிடத்தும் வெகுளிதோன்றுதலின் , எவரிடத்தும் பகைத்தே பேசுவேன் ; ஒன்று சொல்லின் , பொய்யல்லது சொல்லேன் ; எனினும் புகழை மிக விரும்புவேன் ; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன் . ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

02 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண் டிங்கள் சூடும்
கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய கழுமலமே.

                    -திருநாவுக்கரசர்  (4-82-7)


 பொருள்: எம் பெருமானுடைய திருமேனியைச் சுற்றிப் பாம்புகள் பின்னிக் கிடக்க , விரும்பத்தக்க கொன்றைமலர் பொருந்த , வெள்ளிய பிறையைச்சூடும் கற்றையான சடையை உடைய எம்பெருமானுக்கு உறைவிடமாகிய கழுமலத்திருத்தலம் எல்லா நலன்களும் நிரம்பப் பெற்றதாய் ஊழிப்பெருவெள்ளத்துள் கடலில் மிதந்து தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கித் தொழப்படும் சிறப்புடையது .