28 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.
 
           - (9-5-2)

 

பொருள்: கற்றவர்களால் அநுபவிக்கப்படும் தெய்வீக மரத்தில் பழுத்தகனி போன்றவனாய், எல்லை இல்லாத பெருங் கருணைக் கடலாய், மற்றவர்கள்தம் முயற்சி யில் அறியமுடியாத மாணிக்க மலைபோன்றவனாய், தன்னை வழிபடும் அடியவருடைய உள்ளத்தில் மாணிக்கச் சுடர் போன்ற ஞான ஒளி வீசுபவனாய், பகைவர்களுடைய முப்புரங்களையும் அழித்த, எங்களுக்கு நன்மையைத் தருபவனாய், அடியார்களுக்கு அருளுவதற்காகவே திருவீழிமிழலையில் வீற்றிருந்த வெற்றியனாகிய சிவபெருமானைப் கண்டு  தரிசித்ததனால் என் உள்ளம் குளிர என் கண்களும் குளிர்ச்சி அடைந்தன .

27 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப்
புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய
கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர்
உம்பரும்பர்
பெறும்பத மேஅடி யார்பெய ராத
பெருமையனே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-25)

 

பொருள்:  இயமன் ஒடுங்கும்படி, அவன் மேல் பொருந்திய மணம் நிறைந்த தாமரை மலர்களையொத்த உன் திருவடிகளாகிய அவற்றையே அழுத்தி அறிந்தவர்கள் பெறுகின்ற மிக மேலான பதவியாய் உள்ளவனே! அடியவராயினர், பின்பு உன்னை விட்டு நீங்காத பெருமையுடையவனே! எறும்புகட்கு இடையே அகப்பட்ட, நாங்கூழ் புழு அரிப்புண்டு வருந்தினாற்போல, புலன் களிடையே அரிப்புண்டு அரித்துத் தின்னப்பட்டு வருந்திய தனி யேனை விட்டு விடுவாயோ?

26 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலையாரரு வித்திரள்
மாமணி யுந்திக்
குலையாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர்
ஆடுந் துறையூர்த்
தலைவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

            - சுந்தரர் (7-13-1)

பொருள்: மலையின்  அருவிக் கூட்டம்,  மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண்,   அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே தவிர வேறொன்றையும் வேண்டிக் கொள்ளமாட்டேன்.  

25 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளும்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.

           - திருநாவுக்கரசர் (4-16-1)

பொருள்: சடை உடையபெருமான்  வெண்ணீறு அணிந்தவராய், கரிய மான் குட்டி துள்ளும் கையினராய், ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய காலினராய், உண்மையான நெறியில் ஒழுகும் அடியவர்களுக்கு மெய்யராய், அத்தகுதியில்லாதவர்க்குப் பொய்யராய் உள்ளார்.

22 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிணிபடு கடல்பிற விகளறல் எளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமல மினிதமர் அனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை யுமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநலம் மலிகழ லிணைதொழன் மருவுமே.
 
            - திருஞானசம்பந்தர் (1-19-2)

 

பொருள்:  நம்மைப் இடைவிடாமல் பிணிக்கும் கடல் போன்ற பிறவிகள் நீங்குதல் மிக எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும், உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக்கண்டனும் ஆகிய சிவபிரானின்  திருவடிகளைத் தொழுதல் நலமாகும் .

21 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்ற வர்செய லின்ன தன்மைய
தாக மாலய னானஅக்
கொற்ற ஏனமும் அன்ன முந்தெரி
யாத கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வதும் இன்றி நீடிய
பேதை யாளுடன் இன்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு
ஞால முய்ந்திட நண்ணினார்.
 
            - இளையான்குடிமாற நாயனார் புராணம் (8)

 

இளையான்குடிமாற நாயனாரின் செல்வம் படிப்படியாக குறைந்து கொண்டிரும்பொழுது , மாலான பன்றியும் அயனான அன்னமும் தாம் காணச் சென்ற அடியையும், முடியையும் அறிய இயலாதவராகிய சிவ பெருமான், ஆனேற்றை ஊர்தியாகக் கொள்ளாமலும், உமையம்மை யாரை ஒரு மருங்கில் கொள்ளாமலும், ஒரு நற்றவ வேடமுடைய அடியார் வேடத்தைக் கொண்டு இவ்வுலகம் உய்யும் பொருட்டு எழுந் தருளினார்.

20 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.

             - காரைகாலம்மையார் (11-4-15)

பொருள்: வானவர்கள் இறைவனின் பொற்பாதங்களை நினைந்து இருக்கமாட்டார்கள். அவன் பொற்பாதங்களை நினைந்து இருக்கும் அடியார்களுக்கு அவன் என்ன தான் செய்யமாட்டான் ? 

19 March 2013

மயிலாப்பூர் பங்குனி உற்சவம் (2013)

மயிலாப்பூர் பங்குனி உற்சவம் (2013) - உலா விவரம்



 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.
 
            - திருமூலர் (10-1-10)

 

பொருள்: அயனும் , மாலும் ஓரு  எல்லையளவில் பெருநிலை உடையவராயினும், அனைவரினும் மேம்பட்டவன்   சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் கடந்து  நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

18 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏகநா யகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிர்இல்
போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.

        - (9-5-1)

பொருள்: எல்லோருக்கும் ஒரே தலைவனாய், தேவர் களுக்கு அரசனாய், அடியேனுடைய உயிருக்கு  அமுதமாய், ஒப்பில்லாத இன்பம் நல்கும் தலைவனாய், கார்மேக நிறத்தினனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கி, அவனைப் பொன்மயமான பல்லக்குப் போல வாகனமாகக்கொண்டு செலுத்திய, மேகம் போலக் கைம்மாறு கருதாமல் உயிர்களுக்கு உதவும் தலை வனாய், மேம்பட்ட திருவீழிமிழலையிலே தேவருலகிலிருந்து இறங்கி வந்து நிலவுலகில் நிலையாகத் தங்கியுள்ள மேம்பட்ட கோயிலில் முத்தியை வழங்கும் தலைவனாய் உள்ள சிவபெருமானை அன்றி மற்றொரு பரம்பொருள் உள்ளது என்பதனை நான் அறிகின்றேன் அல்லேன்.

திரு.சிவ. திருச்சிற்றம்பலம் - சிவனடி சேர்ந்தார்

திரு.சிவ. திருச்சிற்றம்பலம் - சிவனடி சேர்ந்தார்

முனைவர். சிவ. திருச்சிற்றம்பலம் பங்குனி 1ம் தேதி (மார்ச் மாதம் -14) அதிகாலை சிவனடி சேர்ந்தார். அன்னாருடைய இறுதி ஊர்வலம் அன்று மாலை சுந்தரபெருமாள் கோயில் இல்லத்திலிருந்து புறப்பட்டது. பஞ்ச வாத்தியம் இசைக்க, சிவபுராணம் பாடி  மாலை 7.30 மணியளவில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அன்னாருடைய இறுதி ஊர்வலத்தில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  பல சைவ அன்பர்கள்
கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

படத்திறப்பு விழா  பங்குனி 16ம் தேதி (மார்ச் மாதம்  29ம் தேதி) காலையில் சுந்தரபெருமாள் கோயிலில்  நடைபெறுகிறது.  

13 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித்
தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய்
யடியவர்கட்
கண்மைய னேஎன்றுஞ் சேயாய் பிறற்கறி
தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.
 
                 - மாணிக்கவாசகர் (8-6-22)

 

பொருள்: ஒளியாயானவனே ! திருவெண்ணீற்றை நிறையப் பூசி  மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடி யார்க்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியாரல்லாத ஏனையோர்க்கு தொலைவில்  இருப்பவனே! அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே! பழமையானவனே! பெண்ணாய், ஆணாய் , அலித் தன்மையாய் இருப்பவனே! என்னை விட்டுவிடுவாயோ?

12 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பேணி நாடத னிற்றிரி
யும்பெரு மான்றனை
ஆணை யாஅடி யார்கள்
தொழப்படும் ஆதியை
நாணிஊரன் வனப்பகை யப்பன்வன்
றொண்டன்சொல்
பாணி யால்இவை ஏத்துவார்
சேர்பர லோகமே.
 
         - சுந்தரர் (7-12-11)

 

பொருள்: நாடுகளில் விரும்பித் திரியும் பெருமானும் , அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை , நாணுடையவளாகிய ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையும் , இறைவன்முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் பாடித் துதிப்பவர் சிவலோகத்தை அடையலாம். 

11 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தே னென்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
 
               -திருநாவுக்கரசர்  (4-15-10)

 

பொருள்: புத்தூரில் உறையும் புனிதன் , பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை ,  விதையாகி மிழலையில்  முளைத்தவன் , வேள்விக்குடியில் உள்ள  எம் வேதியன் , நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன் , பொதிய மலையில் உறையும் பழையோன் , மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக வைத்தேன்  .

08 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குன்றம்மது வெடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தானின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.
 
           - திருஞானசம்பந்தர் (1-18-11)

 

பொருள்:  இராவணனின் உடல் தோளும்   நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப்பதியில் வாழும்  தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த  நலம் குன்றாத இந்த திருப்பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் நிறையும் புகழே.

07 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
 
              - சேக்கிழார் (இளையான்குடிமாற நாயனார் புராணம் - 6)

 

பொருள்: செல்வம் பெருகியிருந்த காலத்தில் இவ்வாறு அடியவர் வழிபாட்டைச் செய்துவந்ததன்றி, வறுமையிலும் , தமக்குரிய உண்மை யான பத்திமையால் இவ்வாறு செய்வரென்பதை எல்லோருக்கும்  அறிவிக்கும் பொருட்டு, வளத்தால் உயர்ந்த இவர் செல்வம் மெல்ல மெல்லக் குறைந்து நாள்தோறும் நலிய , தில்லைமாநகரில் வீற்றிருந்தருளும் சிவ பெருமான் எண்ணினார். 

06 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.

                - காரைகாலம்மையார் (11-4-11)

பொருள் :ஒன்றையே நினைத்து, ஒன்றையே நிச்சயித்து, ஒன்றையே என் உள்ளத்தில் மறவாது நினைத்திருந்தேன், அவன் கங்கைசடைமுடி உடன் திங்களை சூடிய எம் சிவபெருமான் ஆவான்.    

05 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.
 
                  - திருமூலர் (10-1-9)

 

பொருள்: சிவபெருமானது நிலையை  ஒருவராலும் அளத்தற்கரிது என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணாது  அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

04 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிறப்புடை அடியார் தில்லைச்
செம்பொன்அம் பலவற் காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ்
உறைப்பர்சே வடிநீ றாடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.
 
         - திருமாளிகைத்தேவர் (9-4-11)

 

 பொருள்: சிறப்புடைய  அடியவர்கள் வாழும் தில்லையிலே உள்ள செம்பொன்மயமான அம்பலத்தில் ஆடும்  பெருமானுக்கு அடியவராக இருக்கும் உறுதிப்பாட்டை உடைய அடியவர்களுக்கு அடியவராக இருக்கும் உறுதிப் பாட்டினையும், அவர்களுடைய திருவடித்துகள்களை அணியும், சிறப்பினையும் இழந்து, இறத்தல் பிறத்தல் என்ற தொழில்களுக்கே இனிய இலக்காகி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கக் கூடிய கீழ் மக்களை என் கண்கள் காணாது . அப்பேயரோடு என்வாய் பேசாது. 

01 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள்
தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதிகண் டாய்என்
பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக்
கொம்பினையே.
           - மாணிக்கவாசகர் (8-6-19)

 

பொருள்:  கொடிய என் வினை காட்டினை அழியும்படி உனது அருளாகிய, நெருப்பை இட்டு எரிக்கின்ற வீரனே! திருவுத்தரகோச மங்கைக்குத் அரசனே ! கொடிய யானையை  உரித்து உமையம்மையை அஞ்சுவித்தவனே!என்னை விட்டுவிடுவாயோ? எனது பிறவி யாகிய மரத்தை வேரொடும் களைந்து ஆட் கொண்டருள்வாயாக.