31 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாதுசெய்சமணுஞ் சாக்கியப்பேய்க ணல்வினைநீக்கிய வல்வினையாளர்
ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா ருள்கலாகாததோ ரியல்பினையுடையார்
வேதமும்வேத நெறிகளுமாகி விமலவேடத்தொடு கமலமாமதிபோல்
ஆதியுமீறு மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

                      -திருஞானசம்பந்தர்  (1-77-10)


பொருள்: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேதநெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.

30 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மீள மீள இவ்வண்ணம்
வெண்பால் சொரிமஞ் சனமாட்ட
ஆள உடையார் தம்முடைய
அன்ப ரன்பின் பாலுளதாய்
மூள அமர்ந்த நயப்பாடு
முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோளம் அதனில் உள்நிறைந்து
குறித்த பூசை கொளநின்றார்.


          - சண்டேசுவரநாயனார் புராணம் (35)


பொருள்: மீண்டும் மீண்டும் இவ்வண்ணமே  பாலைத் திருமுழுக்கு ஆட்டிட, அவரை அடிமையாகக் கொண்டிருக்கும் பெருமானும், தம் அன்பர் விசாரசருமரின் அன்பின் பாலராக நின்று, அவர் பூசனையால் அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றிட, அங்கு ஆத்திமர நீழலின் கீழாக அமைந்த, வெண்மணலின் சிவலிங்கத் திருமேனியின் உள் நிறைந்து நின்று, அவர் புரியும் பூசனையை ஏற்ற நின்றார் 

29 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

             - திருமூலர் (10-2-20,1)


பொருள்: நிலவுலகத்தில்  அசுரனால் விளைந்த துன்பத்தை தேவர்கள் விண்ணப்பித்து, `எம் பெருமானே, இறைவனே, முறையோ` என்று முறையிட, `அழகிய பவழம் போலும் மேனியை உடைய அறுமுகன் சென்று அவர்தம் பகைவனை அழிக்க` என்று திருவுளம் பற்றிய பெருமான் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நிற்கும் அவனே.

25 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அக்கின்ற வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே.

          -திருக்கோவையார்  (8-8,2)


பொருள்:  அக்காகிய நல்ல மணிபொருந்திய மிடற்றையுடையான்; அவனது பொதியின் மலயத்தின் கணுளராகிய இக்குன்ற வாணருடைய மகளாகிய வளவிய இத்தண்புனங் காவனுடையாள்; அக்குன்றத்தின்கணுண் டாகிய ஆற்றைமேவி ஆடப் போயினாள் ;  ஆறு நின்னு றுப்புக்கள் அவளுறுப்புக்களாகிய அவற்றை யேயொக்கின்றபடி;  உனக்கு அவள் இணங்கு ஆகும் நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக

24 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே
 
                       - சுந்தரர் (7-70,4)

 

பொருள்: காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய கூத்து உடையவனே , மாணிக்கம் போல்பவனே , மணவாளக் கோலத்தினனே , தேவர்கள் , முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , தேவர்களாய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , அறிவில்லேனாகிய யான் உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் , செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன் ! எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

23 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.

                 -திருநாவுக்கரசர்  (4-75-1)


பொருள்: தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி , தலையில் இண்டை மாலையை அணிவித்து , நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல் , காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டேன். 

22 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தேனினுமினியர் பாலனநீற்றர் தீங்கரும்பனையர்தந் திருவடிதொழுவார்
ஊனயந்துருக வுவகைகடருவா ருச்சிமேலுறைபவ ரொன்றலாதூரார்
வானகமிறந்து வையகம்வணங்க வயங்கொளநிற்பதோர் வடிவினையுடையார்
ஆனையினுரிவை போர்த்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

                     -திருஞானசம்பந்தர்  (1-77-2)


பொருள்: தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றிபெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர் அச்சிறுபாக்கத்தில் அமர்ந்தவர் ஆவர் 

19 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தம்மை அணைந்த ஆன்முலைப்பால்
தாமே பொழியக் கண்டுவந்து
செம்மை நெறியே உறுமனத்தில்
திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார்
எய்த நினைந்து தெளிந்ததனில்
மெய்ம்மைச் சிவனார் பூசனையை
விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.

                         -சண்டேசுவரநாயனார் புராணம்  (31)


பொருள்: தம்மை அணைந்த பசுக்கள் பாலைத் தாமே பொழிந்திடக் கண்டு, விசாரசருமர் உவந்து, செம்பொருளாய சிவ பெருமான் வழியே உற்ற தமது மனத்தில், இப்பால் எம்பெருமாற்குத் திருமுழுக்கிற்குத் தகும் என்னும் குறிப்பை உணர்ந்து, எம்மை உடைய வள்ளலார் அதன் பயனைத்தாம் அடைந்திட நினைந்து, தெளிந்து, அத னால் என்றும் உண்மைப் பொருளாய சிவபெருமானாரின் பூசனையை விரும்பிடும் வேட்கை உள்ளத்தில் தோன்றி எழலும்.

18 January 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 

                -திருமூலர்  (10-2-19,1)


பொருள்: கோயிலில் உள்ள அசையாத சிவக் குறியைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால், அச்செயல் முற்றுப்பெறுவதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும்; அச்செயலுக்கு உரியவன், தான் இறப்பதற்கு முன்பு தொழுநோய் கொண்டு துன்புற்று இறப்பான். இவ்வாறு நந்திபெருமான் எங்கட்கு உறுதிப்பட உரைத்தார்.

17 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப
திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
தேனுண் டெழிறருமே.

             - மாணிக்கவாசகர் (8-7,4) 

பொருள்: இறைவனது புலியூரையொப்பாளுடைய மையழகையுடைய குவளைபோலுங் கண்ணாகிய வண்டினம்; தான் வாழ்தற்குத் தகும் இவன் முகமாகிய செந்தாமரை மலர்க்கண்; எய்யேம் எனினும் யாமறியேமாயினும்; குடைந்து இன்பமாகிய தேனை யுண்டு;  இவற்கு மெய்யாகவே வேட்டையின் மேல் உள்ளமில்லைஇவளும் புனத்தினையைக் காப்பது பொய்யே என்றவாறு 

16 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
கருத்த ழிந்துனக் கேபொறை யானேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

                   - சுந்தரர் (7-70-2)


பொருள்: இவ்வுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே , தெளிவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே , இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக் கின்ற அண்ணலே , தேவர்களாகிய , விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , யான் கண் இல்லேனாயினேன் ; அதன்மேலும் , உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால் , உனக்குத்தான் சுமையாய் விட்டேன் ; எனக்கு உறவாவார் உன்னை யன்றி வேறு யாவர் உளர் ! ஆதலின் , என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .

12 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


நீதியா னினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்கவெண் ணீற் றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

                    - திருநாவுக்கரசர் (4-74-7)


பொருள்: நீதிப்படி தியானிக்கப்படுபவனாய் , சாதி மாணிக்கமாய் , சங்கைப்போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய் , வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய் , தூண்டா விளக்காய் உள்ள , ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

11 January 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.

                                   - திருஞானசம்பந்தர் (1-76-11)


பொருள்: மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

10 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


யானே இனியிந் நிரைமேய்ப்பன்
என்றார் அஞ்சி இடைமகனும்
தானேர் இறைஞ்சி விட்டகன்றான்
தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம்
அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு
வானே யென்ன நிரைகாக்க
வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.


              - சண்டேசுவரநாயனார் புராணம் (24)


பொருள்: நானே  இப்பசுக்களின் கூட்டத்தினை மேய்ப்பேன் எனக் கூறினார் விசாரசருமர். அது கேட்டு அஞ்சிய இடையனும் அவரை வணங்கி, அப்பசு மேய்த்தலை விட்டு நீங்கி னான். இப்பால், மறைவழி நிற்கும் அச்சிறுவராய விசாரசருமர் தாமும், அங்குள்ள மறையவரின் இசைவு பெற்றுப், பசுக்கள் நெருங்க இருக்கும் அப்பெருங் கூட்டத்தினை மேய்த்திடுவாராகி, பசிய பயிர் களுக்கு வானின் மழை, இன்பம் பயக்குமதுபோல, அப்பசுக்களின் நிரைகளைக் காத்திட முற்பட்டார்;

09 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

                  -திருமூலர்  (10-2-18,6)


பொருள்: நீர்  ஆனது நிலம், காற்று என்பவற்றில் கலப்பினும் அது அதுவாம் இயல்புடையது. ஆதலின், அஃது எவ்வுடம்பிற் கலந்ததாயினும் அவ்வுடம்பின் தன்மைக்கு ஏற்பக் கறுத்தும், சிவத்தும், வெளுத்தும் நிற்பதாம்.

08 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே.

                -திருக்கோவையார்  (8-7,2)


பொருள்: அரனது தில்லையையொப்பாள் புனத்து மன்னுங்கிளியைக் கடிவதற்குச் சிறிதகல நிற்பினும்;  இவளுடைய விளங்காநின்ற அளகத்தின்கண் வண்டுகள் மேவி யேறினும்;  ஒளி முகத்து பளிங்கு அடுத்த ஒளி அமர்ந்தாங்கு இவனதொளியையுடைய முகத்தின்கண்ணே பளிங்கு தன்னிறத்தை விட்டுத் தன்னையடுத்த நிறத்தை மேவினாற்போல; ஒன்று போன்று ஒன்று தோன்றும் அதனால் அளிய அண்ணல் எண் மன்னும் ஒன்று உடைத்து அளிய அண்ணலது குறிப்பு மன்னுமொன்றுடைத்து; அஃதிவள் கண்ணதே போலும்

05 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவல்ஆ ரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே

                    -சுந்தரர்  (7-69-11)


பொருள்: தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும் , திருமாலும் அச்சங் கொள்ளும்படி , அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய , கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும் , மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள் , நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி , தேவர்களுக்கு அரச ராகும் நிலையை அடைவர் .

04 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

              -திருநாவுக்கரசர்  (4-74-1)


பொருள்: முத்து , மணி , பொன் , சிறந்த பவளக்கொத்து , வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய் , தேவர்கள் வழிபடும் வித்து , வேதவேள்வி , வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை , நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே !

03 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திருமலர்க்கொன்றையா னின்றியூர்மேயான் றேவர்கடலைமகன் றிருக்கழிப்பாலை
நிருமலனெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கருமலர்க்கமழ்சுனை நீண்மலர்க்குவளை கதிர்முலையிளையவர் மதிமுகத்துலவும்
இருமலர்த்தண்பொய்கை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

                     -திருஞானசம்பந்தர்  (1-76-2)


பொருள்: கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன். திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ?

02 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஓது கிடையின் உடன்போவார்
ஊர்ஆன் நிரையின் உடன்புக்க
போது மற்றங் கொருபுனிற்றா
போற்றும் அவன்மேன் மருப்போச்ச
யாது மொன்றுங் கூசாதே
யெடுத்த கோல்கொண் டவன்புடைப்ப
மீது சென்று மிகும்பரிவால்
வெகுண்டு விலக்கி மெய்யுணர்ந்து.


           -சண்டேசுவரநாயனார்  புராணம்  (17)


பொருள்: மறைகளை ஓதிவரும் , ஊரவரின் பசுக் கூட்டத்துடன் சென்ற பொழுது, ஈன்றணி மையையுடைய ஒரு பசு, தன்னை மேய்க்கும் இடையன்மேல் தன் கொம்பை அசைத்துச் செல்ல, அவ்வளவில் அவ்விடையன், யாதும் கூச்சம் இல்லாதவனாய்த், தான் கொண்டிருந்த தடி கொண்டு அப் பசுவை நைய அடித்திட, அதுகண்ட விசாரசருமர், அவனிடம் சென்று அப்பசுமேல் கொண்ட மிகுந்த அன்பால் இடையனைச் சினந்து, அவன் அப்பசுவை மேலும் அடிக்காதவாறு விலக்கி, தாம் உண்மையை உணர்ந்தவராய்.