20 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

                  -சுந்தரர்  (7-67-10)


பொருள்: பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து , அதனை நிரப்ப , மாயோனது உதிரத்தை ஏற்றவனும் , யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை யுடையவனும் , தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும் , தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும் , அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...