31 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை


பத்துமோ ரிரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோ ரிரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள் கொடுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்து நனிபள்ளிப் பரம னாரே.

                    -திருநாவுக்கரசர்  (4-70-9)


 பொருள்:  பக்தர்கள் முன் நின்று துதித்துப் புகழும் நனிபள்ளிப் பெருமான் இருபது தோள்களை உடைய இராவணன் தன் பெருமையைப் பரக்கச் சொல்லிக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட , இருபது தோள்களை உடைய அவன் உடல் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றிப் பின் அவன் தன் பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட அவனுக்கு அருள் செய்தவர் ஆவர் .

26 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாணாரமணர் நல்லதறியார் நாளுங் குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசே லவரோடும்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோ ணத்தாரே.

                             -திருஞானசம்பந்தர்  (1-72-10)


பொருள்: சமணர்கள் நாணம் இல்லாதவர்கள். நல்லதை அறி யாதவர்கள். நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்களோடு பேசவும் செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத் தோயும் மாடவீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச் சென்று வழிபடுவீர்களாக.

25 October 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


பொன்னிமயப் பொருப்பரையன்
பயந்தருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்றளக்க
எழுந்தருளும் நம்பெருமான்
தன்னுடைய அடியவர்தம்
தனித்தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டன்பர்க்
கருள்புரிவான் வந்தணைவார்.

                          -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (115)


பொருள்: பொன் போல் விளங்கிடும் இமயமலை அரசரின் திருமகளாராய பூங்கொடி போன்ற உமையம்மையாரது தவநிலையை உலகவர் அறிய எழுந்தருளிவந்த பெருமான், தன்னுடைய அடியவர் களின் தனித்தொண்டரான திருக்குறிப்புத்தொண்டரின் அன்புமிகுந்த நிலையினைக் கண்டு, அவ்வன்பருக்கு அருள் புரிந்திட வேண்டி வந் தணைந்தார்.

24 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே. 

                      -திருமூலர்  (10-2-15,5)


பொருள்: இயற்கையில் அகலராய் நில்லாது, தவமாகிய செயற்கையால் அகலராய் நிற்பார் ஒன்பது வகைப்படுவர். அவரும், `விஞ்ஞானகலர், பிரளயாகலர்` என்னும் பெயரைப் பெறுவர். அவ்வொன்பதின்மராவர், விஞ்ஞானகலருள் அபக்குவர் ஒழிந்த நால்வரும், பிரளயாகலருள் அபக்குவர் ஒழிந்த, `உருத்திரர், மால், அயன், இந்திரன், பிறகடவுளர்` என்னும் ஐவருமாவர்.

23 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.

               -திருக்கோவையார்  (8-2,2)


பொருள்: சிறைவான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என்சிந்தையுள்ளும் உறைவான் காவலாயுள்ள மிக்க நீரையுடைய தில்லைச்சிற்றம்பலமாகிய நல்லவிடத்தும் என்னெஞ்சமாகிய தீயவிடத்தும் ஒப்பத்தங்குமவனது; உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒள் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ உயர்ந்த மதிலையுடைய கூடலின்கணாராய்ந்த ஒள்ளிய வினிய தமிழின்றுறைகளிடத்து நுழைந்தாயோ?; அன்றி ஏழிசை சூழல் புக்கோ அன்றி ஏழிசை யினது சூழலின்கட் புகுதலானோ; இறைவா இறைவனே; தடவரை தோட்கு புகுந்து எய்தியது என் கொலாம் பெரிய வரைபோலு நின்றோள்கட்கு மெலியப்புகுந்தெய்தியதென்னோ?

20 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

                  -சுந்தரர்  (7-67-10)


பொருள்: பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து , அதனை நிரப்ப , மாயோனது உதிரத்தை ஏற்றவனும் , யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை யுடையவனும் , தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும் , தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும் , அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

19 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புலர்ந்தகால் பூவு நீருங் கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயி னூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை யரைய னாக்கிச் சீர்மைக ளருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி யடிக ளாரே.

                     -திருநாவுக்கரசர்  (4-70-2)


பொருள்: பொழுது புலர்ந்த  அளவில் பூவும் அபிடேக தீர்த்தமும் கொண்டு திருவடியை வணங்க இயலாத பிறப்பினதாகையாலே , பெருமானைச் சுற்றி வலமாக வந்து தன் வாயிலிருந்து சுரக்கும் நூலினாலே வட்டமாகப் பந்தலை அமைத்து வழிபட்ட சிலந்தியை அரசனாக்கி , எல்லா நலன்களையும் அருளிய ஆற்றலுடையவராவர் யார் எனில் அழகு விளங்கும் சோலைகளால் சூழப்பட்ட நனிபள்ளிப்பெருமான் ஆவார்   .



17 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும் மேத்தும்
படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே.

                 -திருஞானசம்பந்தர்  (1-72-2)


பொருள்: முடிவேந்தர்கள், மான் போன்ற விழியினை உடையமகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப்பணிந்து போற்ற விடைக்கொடியோடு விளங்குபவர் , மாட வீதிகளை உடைய குடந்தை என்னும் திருத் தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர் ஆவர் 

16 October 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


அவ்வகைய திருநகரம்
அதன்கண்ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால்
ஏகாலிக் குலத்துள்ளார்
செவ்வியஅன் புடைமனத்தார்
சீலத்தின் நெறிநின்றார்
மைவிரவு கண்டரடி
வழித்தொண்டர் உளரானார்.


                  -திருகுறிப்புத்தொண்டர்  நாயனார்  (111)


பொருள்: அவ்வகையான திருவுடைய காஞ்சி நகரின் ஒரு புறமாக வாழ்பவர், இவ்வுலகத்தில் பிறப்பினால் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர், செப்பமாய அன்புடைய மனமுடையவர், சிவ பெருமானை உளங்கொண்ட சீலமுடையவர், கருமை பொருந்திய கழுத்தினையுடைய சிவபெருமானின் திருவடிகளில் வழிவழியாகத் தொண்டு செய்து வரும் வழியடிமைத் தொண்டராக வாழ்பவர் ஒருவர் உளரானார்.

12 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. 

               -திருமூலர்  (10-2-15,1)


பொருள்: உயிர்கள்  எல்லாம்  `விஞ்ஞானகலர், பிரளயா கலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும். அம்மூவகையினருள் விஞ்ஞானகலர் நான்கு வகையினர்; பிரளயாகலரும், சகலரும் தனித்தனி மும்மூன்று வகையினர்; ஆக அனைவரும் பத்து வகையினராவர்.

11 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உயிரொன் றுளமுமொன் றொன்றே
சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
லாகும் பணிமொழிக்கே.

            - திருக்கோவையார் (8-1,18)


பொருள்: என்னொடு இவட்கு உயிர் ஒன்று உளமும் ஒன்று சிறப்பு ஒன்று என்ன என்னோடு இவட்கு உயிருமொன்று மனமுமொன்று குரவர்களாற் செய்யப்படுஞ் சிறப்புக்களும் ஒன்றென்று சொல்லி; பணி மொழிக்கு தாழ்ந்த மொழியை உடையாட்கு; செவி உற நீள் படை கண்கள் சென்று பயில்கின்ற செவியுறும் வண்ணம் நீண்ட படைபோலும் கண்கள் இவள்கட் சென்று பயிலாநின்றன; அதனால் இவள் போலுமிவட்குச் சிறந்தாள் என்றவாறு.

10 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

                - சுந்தரர் (7-67-5)


பொருள்: சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும் , திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த , தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய , முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும் , அடியேனது அறியாமையை அறிந்து , கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி , கழல் அணிந்த தனது திருவடியைப் பெறுவித்து , எனது குற்றங்களை எல்லாம் அறுத்த வன்மையையுடைய , தேவர் பலரும் வணங்க நிற்கின்ற பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

09 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விரிகட லிலங்கைக் கோனை விரிகயி லாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களு நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்ட னாரே.

                   -திருநாவுக்கரசர்  (4-69-10)


பொருள்: குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான் , விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர் .

06 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே.

                   -திருஞானசம்பந்தர்  (1-71-11)


பொருள்: குயில்கள் வாழும் அழகிய மாதவிகளும், குளிர்ந்த அழகிய சுரபுன்னைகளும் வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவரை மயில்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பயில்பவர்க்கு இனியவாய்ப் போற்றிப்பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம்.

05 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங்
கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள
மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி
மனைய றம்பெருக் குங்கரு ணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.


                -திருகுறிப்புத்தொண்டர் நாயனார்  (71)


பொருள்: இவ்வாறு எண்ணற்ற பெரு வரங்களைப் பெற்று, அங்கு எம்பெருமாட்டியார் தம் பெருமான் மகிழ்ந்து அருளிட, இம்மண்ணின் மேல் அவரை அங்கு வழிபாடு செய்தருளி, இல்லறம் இனிது பெருக, கருணையினால் உலகில் தோற்றும் உயிர்கள் யாவும் பெருக உற்ற காதலினால், நீடி நிலைத்திருக்கும் தம் வாழ்க்கையைப் புண்ணியம் நிறைந்த திருக்காமக்கோட்டம் என்னும் கோயிலில் மேற்கொண்டருளிப் பொலிந்திட, அங்கிருந்து தம் முப்பத்திரண்டு அறங்களையும் நிகழ்த்தி ஆண்டருளுவாளாயினள்.

04 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.

               -திருமூலர்  (10-2-14,40) 


பொருள்: உலகம் ஒடுங்குங் காலத்து உடம்பும் பல தத்துவங்களாய் ஒடுங்கி, முடிவில் எல்லாவற்றுடனும் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடல் மீளவும் முன்போலத் தோன்றுதல் வேண்டும் எனச் சிவபெருமான் திருவுளம் கொள்ளின், கடல் நீரில் தோன்றாது நின்ற உவர்ப்புச் சுவை பின் தோன்றி நிற்கும் உப்பாகத் திரண்டு உருவெடுத்தல்போல, அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்போலத் தோன்றும்.

03 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாயும் விடையரன் றில்லையன்
னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.

                 -திருக்கோவையார்  (8-1,3) 


பொருள்:பாயும் விடை அரன் தில்லை அன்னாள் பாய்ந்து செல்லும் விடையையுடைய அரனது தில்லையை யொப்பாளுடைய; படைகண் இமைக்கும் படைபோலுங் கண்கள் இமையா நின்றன; நிலத்து அடி தோயும் நிலத்தின் கண் அடி தீண்டா நின்றன; தூமலர் வாடும் தூய மலர்கள் வாடா நின்றன, ஆதலின் துயரம் எய்தி ஆயும் மனனே துயரத்தையெய்தி ஆராயும் மனனே ; அம் மாமுலை சுமந்து அழகிய பெரியவாகிய முலைகளைச் சுமந்து; தேயும் மருங்குல் தேயாநின்ற மருங்குலையும்; பணை பெருந்தோள் பணைபோலும் பெரிய தோள்களையும் உடைய; இச்சிறு நுதல் அணங்கு அல்லள் இச்சிறு நுதல் தெய்வம் அல்லள்