17 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புவனநா யகனே அகவுயிர்க் கமுதே
பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ பன்னகா பரணா
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே.
 
              - கருவூர்த்தேவர் (9-11-1)

 

பொருள்: எல்லா உலகங்களுக்கும் நாயகனே !உயிர்களுக்கு  அமுதம் போன்ற இனியனே! எல்லாப் பண்பு நலன்களாலும் நிறைந்தவனே! வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! உன்தொண்டுகளைச் செய்யும் அடியவர்பால் இரக்கம் காட்டிஅருளும் உயிர்களுக்குத் தலைவனே! பாம்புகளை அணிகளாக உடையவனே! இவ்வுலகிலே சூரியனைப் போன்று ஞானஒளி பரப்பி அருள்புரிந்து, தன்னுணர்வில்லாத அடியேனுடைய துணைஇல்லாத நிலை நீங்குதற்கு அடியேன் உள்ளத்திலும் திருமுகத்தலை என்ற திருப்பதியில் உள்ள வெண்மையான ஒளியை உடைய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய கோயிலிலும் விரும்பி உறைகின்றவனே! உன் திருவருள்வாழ்க.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...