30 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.
 
              - திருமூலர்  (10-4-9)

 

பொருள்: குருவருளால் சிவயோகம் கைவரப் பெற் றவர்கள், பிறவிக்கு வித்தாகிய கிடைவினையை (சஞ்சித கருமத்தை) முற் கூறியபடி அழித்து, குரு அருளிச்செய்த உபதேச மொழியிலே உறைத்து நின்று, சுத்த துரிய நிலை மிகவும் தோன்றப் பெற்று, ஐம் புலன்களை நுகர்கின்ற உணர்வு அவற்றால் கட்டுண்ணாமலே அவற் றோடு பொருந்தி நிற்கச் சிவத்தோடு ஒன்றாய் உடம்பு உள்ளபொழுதே செத்தார்போல உலகத்தை நோக்காது புருவ நடுவிலே நிற்பார்கள்.

27 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டென்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக்
கென்னையாள் ஆண்ட நாயகனே
முக்கணா யகனே முழுதுல கிறைஞ்ச
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
பக்கலா னந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.
 
               - கருவூர்த்தேவர் (9-11-5)

 

பொருள்: விரைவில் மறையும் செல்வத்தைத் திரட்டுதலையே பலகாலும் நினைத்து ஐம்பொறிகளோடு சீவான் மாவாகிய அடியேனுக்கு ஏற்பட்ட இந்தப் பூசல்முழுதும் நீங்குமாறு வந்து என் உள்ளத்திலிருந்து என்னை ஆட்கொண்ட தலைவனே! மூன்று கண்களை உடைய மேம்பட்டவனே! உலகம் முழுதும் உன்னை வழிபடும்படி திருமுகத்தலை என்ற திருத்தலத்தில் உறைந்து அடியேன் உள்ளத்தும் உறைந்து, உன் பவளம்போன்ற வாயினால் மெய்ப் பொருளை உபதேசித்து அடியேனிடத்தும் ஆனந்தம் தொடர்ந்து நிகழு மாறு செய்தாய். இஃது ஒரு வியப்பே.

26 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
            - மாணிக்கவாசகர்  (8-9-15)

 

பொருள்: கருங்குவளை மலர் போன்ற பெரிய கண்களையுடைய இளம் பெண்களே! ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தெளிவானவனும், அதன் பாகானவனும், தேடுவதற்கு அருமையான நன்மைப் பொருளானவனும், சுவை கெடாத தேனானவனும், முக்கனிகளின் சுவையானவனும், மனத்தில் புகுந்து இனிக்க வல்ல தலைவனும், பிறவித்தளையை அறுத்து ஆண்டுகொண்டருளின கூத்தப் பெருமானுமாகிய இறைவனை நாவில் வடுவுண்டாகும்படி, துதித்துப் பாடிப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

25 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உற்றார் சுற்றமெனும் மது
விட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இட
ரைத்து றந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந் திரு
மேற்ற ளிஉறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்
தேத்த மாட்டேனே.
 
              - சுந்தரர் (7-21-4)

 

பொருள்:  உறவினர்  மற்றும் சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து , அவர்கள் தொடர்பிலே பட்டு , உய்ந்து போகமாட்டாது நிற்கின்ற அந்நிலையைத் துறந்து , உன்னையே புகலிடமாக அடைந்தேன் . அதனால் , இப்பொழுது , எத்தன்மையதான பொருளால் , என்ன குறை அடியேனுக்கு இருக்கின்றது ? ஒன்றும் இல்லை .  மூன்று மதில்களையும் அழித்தவனே , கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே என் துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன் . ஆதலின் இனி , உன்னையன்றிப் பிறரைப் பணிந்து புகழ்தலைச் செய்யவே மாட்டேன் .

24 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மடக்கினார் புலியின் றோலை மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி யதிகை வீரட்ட னாரே.
 
               - திருநாவுக்கரசர் (4-27-1)

 

பொருள்: புலியின்தோலை உடையாக சுற்றி இடையில் உடுத்துப்பாம்பினை அதன் மீது கச்சாக இறுக்கிக் கட்டிப் பிறையைச் செறிந்த சடைமீது செருகித் தொண்டைக்கனி போன்ற சிவந்த வாயையும் துடி போன்ற இடையையும் கடல் போன்ற அல்குலையும் உடைய பார்வதியைத் தம் உடம்பின் ஒருபாகமாக அடக்கியவர் கெடில நதியை ஒருபுறம் எல்லையாக உடைய அதிகை வீரட்டனார் ஆவர் .

 

23 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்வி யாளர் கனகம் மழன்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கட் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
 
                - திருஞானசம்பந்தர் (1-29-3)

 

பொருள்: !  கல்வியாளர் நிறைந்ததாய், பொன்னை  ஒத்த மேனியராய்,கங்கை தங்கும் முறுக்கேறிய சிவந்த சடையினை உடையவராய் விளங்கும் சிவபிரானது ஊர், திங்கள் தங்கும் பொழில்கள் சூழ்ந்ததாய் விளங்கும் நறையூராகும். அவ்வூரில் செல்வர் வணங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாய் நெஞ்சமே!!

20 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோலப்பூங் கூடை தன்னை
நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு
மலர்க்கையில் தண்டுங் கொண்டங்
காலய மதனை நோக்கி
அங்கணர்க் கமைத்துச் சாத்தும்
காலைவந் துதவ வேண்டிக்
கடிதினில் வாரா நின்றார்.
 
               - எறிபத்த நாயனார் புராணம் (10)

 

பொருள்: பூங் கூடையில் அம் மலர்களை நிறைத்துக் கொண்டு, தம் உள்ளத்தில் தூய மெய்யன்பையுடைய வராய், மலர்போலும் திருக்கரத்தில், அம்மலர்க் கூடையைத் தொங்க விட்டிருக்கும் தண்டத்தையும் கொண்டு, அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குத் திருமாலை கட்டிச் சாத்தும் அமையத்து, அம்மலர்களைக் கொண்டு வந்து உரிய நேரத்தில் கொடுக்க விரும்பி விரைந்து வந்தார்.

19 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.
 
               -சேரமான் பெருமாள் நாயனார்  (11-6-1)

 

பொருள்: தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே. தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே. பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே.

18 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.
 
               - திருமூலர் (10-4-4)

 

பொருள்:  நிலையற்றதான இவ்வுடம்பு என்கின்ற கோயிலிலே நீங்காது குடிகொண்டு மறைந்திருக்கின்ற தலை வனாகிய சிவன், மூங்கிலில் மறைந்து நின்ற தீ, தான் வெளிப்படுங் காலத்து வெளிப்பட்டு விளங்குதல்போல, ஆன்மாவின் பக்குவ காலத்தில் மும்மல இருளை நீக்கி எழுகின்ற சூரியனாய் வெளிப்பட்டு விளங்குவான். அப்பொழுது அவன் தாயன்பினும் மிக்க பேரருளாகிய வெள்ளமாயும் நின்று பேரின்பத்தைத் தருவான்.

17 June 2014

திருமயிலை கபாலீசுவரர் கோயில் ஆணி மாத நிகழ்ச்சிகள்

திருமயிலை கபாலீசுவரர் கோயில் ஆணி மாத நிகழ்ச்சிகள்



 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புவனநா யகனே அகவுயிர்க் கமுதே
பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ பன்னகா பரணா
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே.
 
              - கருவூர்த்தேவர் (9-11-1)

 

பொருள்: எல்லா உலகங்களுக்கும் நாயகனே !உயிர்களுக்கு  அமுதம் போன்ற இனியனே! எல்லாப் பண்பு நலன்களாலும் நிறைந்தவனே! வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! உன்தொண்டுகளைச் செய்யும் அடியவர்பால் இரக்கம் காட்டிஅருளும் உயிர்களுக்குத் தலைவனே! பாம்புகளை அணிகளாக உடையவனே! இவ்வுலகிலே சூரியனைப் போன்று ஞானஒளி பரப்பி அருள்புரிந்து, தன்னுணர்வில்லாத அடியேனுடைய துணைஇல்லாத நிலை நீங்குதற்கு அடியேன் உள்ளத்திலும் திருமுகத்தலை என்ற திருப்பதியில் உள்ள வெண்மையான ஒளியை உடைய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய கோயிலிலும் விரும்பி உறைகின்றவனே! உன் திருவருள்வாழ்க.

16 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மையமர் கண்டனை வான நாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
 
                 - மாணிக்கவாசகர்  (8-9-12)

 

பொருள்: தாமரை மலர் போன்ற செவ்வரிபடர்ந்த இரண்டு கண்களையும் பொன் வளையணிந்த தோள்களையும் பாம்பின் படம் போன்ற அல்குலையுமுடைய மடந்தைப் பருவத்தையுடைய பெண்களே! கருமையமைந்த கழுத்தினையுடையவனும் விண்ணுலகத் தாருக்கு அமுதமாயிருப்பவனும் செம்மை நிறமுடைய கூத்தனும், தேவனும், தேவர்க்குத் தலைவனும் நம்மைத் தன் வசப்படுத்தி அடிமை கொண்டு தனது அரிய தன்மையைப் புலப்படுத்தினவனும் பொய்ம்மை யாளருக்குப் பொய்ம்மையானவனும் மெய்ம்மையாளருக்கு மெய்ம் மையானவனுமாகிய இறைவனைப் பாடிப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

13 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நொந்தா வொண்சுடரே நுனை
யேநி னைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
மனமேபு குந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திரு
மேற்ற ளிஉறையும்
எந்தாய் உன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.
 
               - சுந்தரர் (7-21-1)

 

 பொருள்:ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே , என் தந்தைக்கும் பெருமானே , கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே , என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய் ; ஆதலின் , இனி அடியேன் உன்னை யன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .

12 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும்
இருவரு மெழுந்தும் வீழ்ந்து மிணையடி காண மாட்டா
ஒருவனே யெம்பி ரானே யுன்றிருப் பாதங் காண்பான்
அருவனே யருள வேண்டு மதிகைவீ ரட்ட னீரே.
 
                          - திருநாவுக்கரசர் (4-26-10)

 

பொருள்: அதிகை வீரட்டனே ! வடிவம் புலப்படாது இருப்பவனே ! திருமகள் கேள்வனாய திருமாலும் , நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் ஆகிய இருவரும் கீழ் நோக்கித் தோண்டியும் மேல்நோக்கிப் பறந்தும் , திருவடிகளையோ உன் உச்சியையோ காண இயலாத ஒப்பற்ற பெருமானாகிய உன் திருப்பாதங்களை அடியேன் காணுமாறு அருள் செய்யவேண்டும் .

11 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மி னடியா ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.
 
             - திருஞானசம்பந்தர் (1-28-11)
 
பொருள்:   திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும்.

10 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
அவர்எறி பத்த ராவார்.
 
                   - எறிபத்த நாயனார்  புராணம் (6)

 

பொருள்: அழகிய மறைகளை அருளிச் செய்த புனிதர் சிவபெருமானை, இனிதாக அக்கோயிலில், உலகியல் உணர்விற்கு ஏதுவாகிய மயக்க நெறிகளை நீக்குமாற்றால் வழிபாடு செய்கின்ற தொழிலை உடையவராய், கருநிறமுடைய நஞ்சு சேர்ந் திருக்கும் திருமிடற்றையுடைய முதல்வராகிய சிவபெருமானுக்கு உரிமையாகிய, அடிமை பூண்ட அன்பர்க்குத் தாம் கொண்ட அருள் நிறைந்த பெரிய திருத்தொண்டைச் செய்து வருகின்ற அடியவர் ஒருவர்; அவர் எறிபத்த நாயனார் என்பவராவர். 

09 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
 
                   - ஐயடிகள் காடவர் கோன் நாயனார் (11-5-24)

 

பொருள்: இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்து சுற்றத்தார் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை வருவதற்கு முன் திருமயானம் சேர். 

06 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.
 
                    - திருமூலர்  (10-4-3)

 

பொருள்: பதி, பசு, பாசம் என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ளது  போல் , ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம்.  பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும்; அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது.

05 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே.
 
                - கருவூர் தேவர் (9-10-11)

 

பொருள்: கித்தி என்னும் விளையாட்டை நிகழ்த்துகின்ற பெண்கள் தெருவில் ஆரவாரம் செய்யும் கீழ்க்கோட்டூரில் ஊமத்த மலரைச் சூடியவனாய், மணியம்பலத்துள் நின்று ஆடும் வலிய வனாகிய சிவபெருமானைப் பற்றி, வேதங்களை ஓதும் இறைப் பித்துடைய அடியேன் பாடிய மணிகள் போன்ற நெடிய பாமாலை பெரியோர்களுக்கு அகன்ற பெரிய சிவலோகத்தில் முத்தியை வழங்கும் என்று உலகத்தவர் இதனை உயர்த்திக் கூறுவாராயின் திருமகள் அவர்களை முகம் மலர்ந்து எதிர்கொள்வாள்

04 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
 
             - மாணிக்கவாசகர் (8-9-7)

 

பொருள்: கைவளையும் தோள்வளையும்  ஒலிக்க, அடியார் கூட்டம் புறப்பட்டு அரகரவென்று முழங்க, நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்க, நாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய, கால் அணி மென்மையான பாதங்களில் ஒலிக்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவனாகிய எங்களுக்கு மிக மேலானவனும் பெரிய பொன் மலையை ஒத்த தலைவனுமாகிய இறைவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

03 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவுந் திரு
நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்
தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர்
வானுல காள்பவரே.
 
              - சுந்தரர் (7-20-10)

 

பொருள்: கொல்லை வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் இருக்கின்ற பெருமானை , நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான் , தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி , மனம் பொருந்திப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் பாடவல்லவர் , இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி , அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள் .

02 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே.
 
                               - திருநாவுக்கரசர் (4-26-5)

 

 பொருள்: பஞ்சகவ்வியத்தால் அபிடேகிக்கப்படுதலால் விளங்குகின்ற மேனியை  உடைய அதிகை வீரட்டப் பெருமானே ! ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட  இவ்வுடலைப் பெற்று அதன்கண் வாழும் ஐம்பொறிகளால் வருத்தப்பட்டு இவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக , அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்