31 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.
 
              - அமர்நீதி நாயனார் புராணம் (40)

 

பொருள்: இந்நிலையில்  நாயனார், மறையவர் முன் நின்று,  பல்வகைச் செல்வங்களையும் ஒன்று கூட விடாமல் தட்டில் வைத்துள்ளேன்; என், மனைவியும், சிறுவனும் ஒப்பாதற் குரிய பொருளாமேல், துலையில் ஏறப் பெறுதற்கு உன் அருள் முன்னிற்பதாகுக எனத் தொழுதனர்.

28 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
 
            - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-4)

 

 

பொருள்: கட்டிளைஞனாக உள்ள பொழுதே நாம் ஆரூரரை தொழவேண்டும். காலம் கடந்து மூப்பு வந்து இச்செயலை செய்ய கூடாது என்று பொருள்.
  

27 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.
 
            - திருமூலர் (10-3-5) 

 

பொருள்: தடத்த நிலைகளுள் மேலானதாகிய சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்து வத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அச்சத்தி தன்னினின்றும் தோன்றிய சதாசிவர்க்கு உணர்த்த, அவர் தம்மிடத்தினின்றுந் தோன்றிய சம்புபட்ச மகேசுரரோடு ஒத்த அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.

26 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குமுதமே திருவாய் குவளையே களமும்
குழையதே யிருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
கனகமே திருவடி நிலை நீர்
அமலமே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
               - கருவூர் தேவர் (9-9-9)

 

பொருள்: குமுத மலர் போன்ற செய்யவாயினர். கருங் குவளைபோலக் கரிய கழுத்தினர். இருகாதுகளில் வலக்காதில் குழையை அணிந்தவர். இடப்பகுதியில் களங்கமற்ற மேகலையை உடையவர். சடையின் மேல் புள்ளிகளையும் கோடுகளையும் உடைய பாம்பு நெளிகின்றது. அவருடைய முகமும் கண்ணும் தாமரை போன்று உள்ளன. அவருடைய பாதுகை பொன்மயமானது. அவருடைய நீர்மை களங்கமற்றது. அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சர மாகும்.

25 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                     - மாணிக்கவாசகர் (8-8-19)

 

பொருள்: மூவர்க்கும் முதல்வனும், எல்லாம் தானேயான வனும், அவை அழிந்த பின்னே இருப்பவனும், திருப்பெருந்துறையில் நிலைபெற்றவனும், பெண்பாகனும், திருவானைக்காவில் எழுந்தருளி இருப்பவனும், பாண்டி நாட்டை உடையவனும், என் காளை போல் பவனும், என்னப்பன் என்று புகழ்வோர்க்கு இனிய அமிர்தம் போல் பவனும், எம் தந்தையும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடு வோம்.

24 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அங்கையின் மூவிலை வேலர்
அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த
இடம்வளம் மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
யுந்திரு நின்றியூரே.
    
                  - சுந்தரர் (7-19-3)

 

பொருள்: கையில் மூவிலை சூலத்தை  உடையவரும் , தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க , அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து , பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர் ,  மங்கையை  ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம் , வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே

19 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்த ரேத்த
விரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்ட ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
அரவுகொப் பளித்த கைய ரதிகைவீ ரட்ட னாரே.
 
                      - திருநாவுக்கரசர் (4-24-9)

 

 பொருள்: வாழ்த்துப்பாடல்களை  பண்ணுடன் பாடி அடியவர்கள் போற்ற , சடைமுடியில் கலந்து தங்குதற்கு மகிழும் கங்கையைத் தம் விரிந்த சடையில் மகிழுமாறு வைத்து , இருள் கம்மிக் கறுத்த நீலகண்டராய் , தம்மை வழிபட்டுப் புகழ்பவர்களின் துயரங்களைத் தீர்ப்பவராய் , பாம்பு மகிழ்ந்து ஆடும் கையினராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

18 March 2014

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேட ருறையுந் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரு மவல மடையாவே.
 
                  - திருஞானசம்பந்தர் (1-26-11)

 

பொருள்: நன்மை தரும் மறைகளை  உணர்ந்த ஞான சம்பந்தன், செல்வரும் உயர்ந்தவருமான சிவபெருமான் உறையும் திருப்புத்தூரை அடைந்து வழிபட்டுச் சொல்லிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கட்குத் துன்பங்கள் நீங்கும். எக்காலத்தும் அவலம் அடையமாட்டார்கள் .

17 March 2014

அறுபத்துமூவர் திருவிழா - மயிலாப்பூர்


அறுபத்துமூவர் திருவிழா - மயிலாப்பூர் 








 

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மங்கை பாகராம் மறையவர் மற்றதற் கிசைந்தே
இங்கு நாமினி வேறொன்று சொல்லுவ தென்கொல்
அங்கு மற்றுங்கள் தனங்களி னாகிலும் இடுவீர்
எங்கள் கோவண நேர்நிற்க வேண்டுவ தென்றார்.
 
                    - அமர்நீதி நாயனார் புராணம் (37)

 

பொருள் : மங்கையை  ஒரு கூற்றில் உடைய இறைவராகிய மறையவர், அதற்கு இசைந்து இவ்விடத்து, இனி நாம் வேறு எதனைச் சொல்ல இருக்கின்றது? அங்குள்ள `உம் பொருள்களையாகிலும் இடுவீர்` எவ்வாற்றானும் எங்கள் கோவணத்திற்கு ஒப்பாக அப் பொருள்கள் அமைதல் வேண்டுமென்றார்.

14 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
 
              - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-3)

 

பொருள்: தொடர்ந்து  நடந்துபோக இயலாமல் இடையிடையே குந்திக் குந்தி எழுந்து நடத்தல் கோழை  நுரைத்து, மேலே ஏறி, வெளிவருமுன் ஐயாறு, என்று சொல்லுங்கள். 

13 March 2014

திருவான்மியூர் , திருமயிலை தேரோட்டம் 130314

திருவான்மியூர் , திருமயிலை தேரோட்டம் 130314

திருவான்மியூர் 




 
திருமயிலை 






 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.
 
          - திருமந்திரம் (10-3-4)

 

பொருள்: சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

12 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவந்
துவளுமே கலையும் துகிலுமே யொருபால்
துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
                   - கருவூர்த்தேவர் (9-9-5)

 

பொருள்: சிவபெருமானுடைய சடையும் திருவாயும் திரு வுடம்பும் பவளம் போலச் செய்யன. உடம்பில் பூசிய திருநீறும் அணிந்த புரிநூலும் பற்களும்வெண்ணிறத்தன. பாம்புகள்  நெளிகின்றன. ஒரு புறம் புலித்தோல் ஆடை; ஒருபுறம்  நல்ல ஆடை. இடப்பகுதியாகத் துடிபோன்றஇடையை உடைய ஒப்பற்ற வளாகியபார்வதியும் இருப்பாள். இவையாவும் உண்மையாவது போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் ஆகும். 

11 March 2014

மயிலை பங்குனி உற்சவம் 090314

மயிலை   பங்குனி உற்சவம் 090314







 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்
தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.
 
                      - மாணிக்கவாசகர் (8-8-15)

 
பொருள்: சந்திரனை  தேய்த்தும் இந்திரனின் தோளை நெரித்தும் எச்சன் என்னும் போலித் தெய்வத்தின் தலையை அரிந்தும் சூரியனின் பல்லைத் தகர்த்தும் தேவர்களை விரட்டியும் தக்கன் யாகத்தில் அவமானப்படுத்தித் தண்டித்த சிவபெருமானது மந்தார மலர் மாலையைப் புகழ்ந்து பாடுவோம்.

10 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

அற்றவ னாரடி யார்தமக்
காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபரர் என்று
பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.
 
            - சுந்தரர் (7-19-1)

 

பொருள்: பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும் , பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடைய வரும் ,  எம் இறைவர்   என்று பலராலும் விரும்பப் படுகின்ற தலைவரும் , பகைவருடைய ஊரினை , பெரிய , கொடிய அம்பினால் அழித்த வரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே .

07 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீறுகொப் பளித்த மார்பர் நிழறிகழ் மழுவொன் றேந்திக்
கூறுகொப் பளித்த கோதைக் கோல்வளை மாதோர் பாகம்
ஏறுகொப் பளித்த பாத மிமையவர் பரவி யேத்த
ஆறுகொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே.
 
                    - திருநாவுக்கரசர் (4-24-5)

 

பொருள்: நீறு பரந்து விளங்கும் மார்பினராய் , ஒளி விளங்கும் மழுப்படையைக் கையில் ஏந்தி , எல்லோரும் புகழும் மாலையும் திரண்டவளைகளும் அணிந்து ஒரு பாகத்தை விளக்கும் பார்வதி சமேதராய் , காளையைத் தழும்பேற வைத்த தம் திருவடிகளைத் தேவர்கள் துதிக்குமாறு கங்கை நதி பெருகித்தங்கியிருக்கும் செஞ்சடையை உடையவராய் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

06 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு  திருமுறை

இசைவி ளங்கு மெழில்சூழ்ந் தியல்பாகத்
திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும்
வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே.
 
                      - திருஞானசம்பந்தர் (1-26-5)

 

பொருள்: கங்கையாகிய பெண் விளங்கும் அழகிய சென்னியினராகிய இறைவர், புகழால் விளக்கம் பெற்றதும், இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும், நாற்றிசைகளிலும் பொழில்கள் சூழ்ந்ததுமான திருப்புத்தூரில், வழிபடுவார்க்கு அன்பு வளருமாறு பழகும் பெருமானார் ஆவார்.

05 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகில் இல்லதோர் மாயையிக் கோவண மொன்றுக்
கலகில் கோவணம் ஒத்தில வென்றதி சயித்துப்
பலவும் மென்துகில் பட்டுடன் இடஇட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை யெடுத்துமே லிட்டார்.
 
                        - அமர்நீதிநாயனார் புராணம் (34)

 

பொருள்: இவ்வுலகில் இல்லாததொரு மாயையாய் உள்ளது என்று எண்ணி  இம்மறையவரின் கோவணம் ஒன்றினுக்கும் அளவற்ற கோவணங்கள் ஒத்தில என்று  மேலும் தம்பாலுள்ள மெல் லிய ஆடைகள், பட்டாடைகள், ஆகியவற்றையும் அத்தட்டின் மேல் இட இட, அத் தட்டு உயர்ந்து கொண்டே செல்லப் பின்னும் விளங்கு கின்ற பொலிவினையுடைய நல்ல ஆடைப் பொதிகளை எடுத்து அவ்வாடைகளின் மேல் இட்டார்.

04 March 2014

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.
 
             - ஐயடிகள்கடவர்கோன் நாயனார் (11-5-2)

 

 

பொருள்: நம் பேச்சு நீகும் முன்னம் திருக்குடமூக்கு என்ற திருத்தலத்தை அடைந்து துதித்து இரு என்றல் ஆகும்.

03 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
 
                - திருமந்திரம் (10-3-2)

 

பொருள்: சிவபெருமான் அருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்களை எண்ணாற்கூறின், `இருபத் தெட்டு` என்னும் அளவில் நில்லாமல், அளவின்றியுள்ளன. அவைகளால் மேற்கூறிய அறுபத்தறுவரும், பிறரும் சிவபெரு மானது மேன்மையைத் தத்தமக்கியைந்தவாற்றால் விளங்க உரைத்தார்கள். அவ்வாறு உரைக்கப்பட்ட அளவிலே நானும் கேட்டுச் சிந்தித்துத் துதிக்கத் தொடங்கினேன்