11 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தே னென்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
 
               -திருநாவுக்கரசர்  (4-15-10)

 

பொருள்: புத்தூரில் உறையும் புனிதன் , பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை ,  விதையாகி மிழலையில்  முளைத்தவன் , வேள்விக்குடியில் உள்ள  எம் வேதியன் , நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன் , பொதிய மலையில் உறையும் பழையோன் , மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக வைத்தேன்  .

08 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குன்றம்மது வெடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தானின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.
 
           - திருஞானசம்பந்தர் (1-18-11)

 

பொருள்:  இராவணனின் உடல் தோளும்   நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப்பதியில் வாழும்  தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த  நலம் குன்றாத இந்த திருப்பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் நிறையும் புகழே.

07 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
 
              - சேக்கிழார் (இளையான்குடிமாற நாயனார் புராணம் - 6)

 

பொருள்: செல்வம் பெருகியிருந்த காலத்தில் இவ்வாறு அடியவர் வழிபாட்டைச் செய்துவந்ததன்றி, வறுமையிலும் , தமக்குரிய உண்மை யான பத்திமையால் இவ்வாறு செய்வரென்பதை எல்லோருக்கும்  அறிவிக்கும் பொருட்டு, வளத்தால் உயர்ந்த இவர் செல்வம் மெல்ல மெல்லக் குறைந்து நாள்தோறும் நலிய , தில்லைமாநகரில் வீற்றிருந்தருளும் சிவ பெருமான் எண்ணினார். 

06 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.

                - காரைகாலம்மையார் (11-4-11)

பொருள் :ஒன்றையே நினைத்து, ஒன்றையே நிச்சயித்து, ஒன்றையே என் உள்ளத்தில் மறவாது நினைத்திருந்தேன், அவன் கங்கைசடைமுடி உடன் திங்களை சூடிய எம் சிவபெருமான் ஆவான்.    

05 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.
 
                  - திருமூலர் (10-1-9)

 

பொருள்: சிவபெருமானது நிலையை  ஒருவராலும் அளத்தற்கரிது என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணாது  அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

04 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிறப்புடை அடியார் தில்லைச்
செம்பொன்அம் பலவற் காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ்
உறைப்பர்சே வடிநீ றாடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.
 
         - திருமாளிகைத்தேவர் (9-4-11)

 

 பொருள்: சிறப்புடைய  அடியவர்கள் வாழும் தில்லையிலே உள்ள செம்பொன்மயமான அம்பலத்தில் ஆடும்  பெருமானுக்கு அடியவராக இருக்கும் உறுதிப்பாட்டை உடைய அடியவர்களுக்கு அடியவராக இருக்கும் உறுதிப் பாட்டினையும், அவர்களுடைய திருவடித்துகள்களை அணியும், சிறப்பினையும் இழந்து, இறத்தல் பிறத்தல் என்ற தொழில்களுக்கே இனிய இலக்காகி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கக் கூடிய கீழ் மக்களை என் கண்கள் காணாது . அப்பேயரோடு என்வாய் பேசாது. 

01 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள்
தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதிகண் டாய்என்
பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக்
கொம்பினையே.
           - மாணிக்கவாசகர் (8-6-19)

 

பொருள்:  கொடிய என் வினை காட்டினை அழியும்படி உனது அருளாகிய, நெருப்பை இட்டு எரிக்கின்ற வீரனே! திருவுத்தரகோச மங்கைக்குத் அரசனே ! கொடிய யானையை  உரித்து உமையம்மையை அஞ்சுவித்தவனே!என்னை விட்டுவிடுவாயோ? எனது பிறவி யாகிய மரத்தை வேரொடும் களைந்து ஆட் கொண்டருள்வாயாக.