29 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்க வருபுனற் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே. 

                   -திருமூலர்  (10-2-18,4)


பொருள்: சிவபெருமானை அறிவால் அறிகின்றவரே அமரர் (இறப்பும், பிறப்பும் இல்லாதவர்) ஆவர். அவரே சிவலோகத்தில் சென்று வீறு பெற்று வாழ்ந்து, பின் மீளாநிலையைப் பெறுவர். ஆகவே, சிலர் அவனை அங்ஙனம் அறிவால் அறிதலைச் செய்யாமலே, தன்னிடத்து மூழ்குவாரை ஈர்த்துச் செல்ல வருகின்ற கங்கையாற்றில் மரக்கலம் போன்ற துணையானே விடுவாரோ ?

28 December 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நிருத்தம் பயின்றவன் சிற்றம்
பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
மெல்லியல் வாடியதே.

                    -திருக்கோவையார்  (8-6,1)


பொருள்: சிற்றம் பலத்தின்கண் நிருத்தத்தை யிடைவிடாதே யாடியவன்; நெற்றியிலுண்டாகிய தனிக்கண்ணை யுடைய ஒப்பிலாதான்; அவன் பயிலுங் கயிலையாகிய மலையினது உயர்ந்தவுச்சியில்; புண்ணிய நீர் இடையறாது நிற்குஞ் சுனையைக் குடைந்தாடி; சிலம்பிற் கெதிரழைத்து; இவ்வாறு வருத்தத்தைச் செய்யும் விளையாட்டைப் பயின்றோ பிறிதொன்றி னானோ;வல்லிபோலும் மெல்லிய வியல்பினை யுடையாள் வாடியது

27 December 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

                  -சுந்தரர்  (7-69-6)


பொருள்: மாற்றாது வழங்கும் வள்ளலே , வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே , திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , யான் பொய்யையே பேசி , குற்றங் களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின் , யான் பெற்ற பேறு , மற்று யார் பெற வல்லார் ! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன் ; அது , தவறுடைத்தே . ஆயினும் , அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின் , அடியேன் வேறொரு துணை இல்லேன் ; ஆதலின் , அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய் .

26 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை யடிமுடி யறியா வண்ணம்
செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

                      -திருநாவுக்கரசர்  (4-73-8)


பொருள்:  முன்னர்  இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன் , திருமாலோடு , எங்கள் ஒப்பற்ற தலைவனே !` என்று வணங்கித் துதிக்க ,  எல்லை யில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப் பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கியவர்  சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆவர் 

22 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்த னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியுமாடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர்விமானங் கொடுவரவேறி வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே.

                                      -திருஞானசம்பந்தர்  (1-75-11)


பொருள்: விண்  விமானத்தை விரும்பி, வெங்குரு வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி,  நல்ல நூல்களை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும், பண்ணிசை யோடும் பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து, அதன்கண் வீற்றிருப்பர்.

21 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நன்றி புரியும் அவர்தம்பால்
நன்மை மறையின் துறைவிளங்க
என்றும் மறையோர் குலம்பெருக
ஏழு புவனங் களும்உய்ய
மன்றில் நடஞ்செய் பவர்சைவ
வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயம்
செய்தார் விசார சருமனார்.

                -சண்டேசுவரநாயனார் புராணம்  (12) 


பொருள்: நன்மைகள் பலவற்றுள்ளும் தலையாய நன்மை யான இறையன்பு பூண்டொழுகும் அவர்கள் பால், நன்மையை விளை விக்கும் நான்மறைகளின் துறைகள் பலவும் விளங்கிடவும், அந்தணர் களின் அரிய ஒழுக்கம் இவ்வுலகில் பெருகிடவும், ஏழுலகங்களும் உய்ந்திடவும், பொற் பொதுவில் நடனம் புரிபவரான கூத்தப் பெருமா னையே உறுதிப் பொருளாகக் கொண்டு வணங்கிடும் சைவ மெய்ந் நெறி வளர்ந்தோங்கவும், மாதவத்தினர் புரியும் அரிய செயல்கள் பலவும் வெற்றியுடன் விளங்கிடவும் தோன்றினார் விசாரசருமனார் என்பவர் ஆவர்.

20 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

                    -திருமூலர்  (10-2-18,1)


பொருள்: உள்ளத்தில்  நற்புண்பகளாகிய பல தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்குமாறு அவற்றில் மூழ்குதலை மெல்லப் பயிலாத வஞ்ச மனம் உடைய அறிவிலிகள், புறத்தே பல தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும், மேடும் கடந்து நடந்து இளைக்கின்றனர்.

19 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பல்லில னாகப் பகலைவென்
றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.

              -திருக்கோவையார்  (8-5,1) 


பொருள்: பல்லிலனாம்வண்ணம் பகலோனை வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல ஒளியையுடைய னல்லன்; வினாவப்படுகின்றன யானையும் ஏனமுமாயிருந்தன;கையில் நாகத் தழை கையின் நாக மரத்தின்றழை களாயினும்;  கண்டவாற்றான் மெய்யா யிருப்பதொரு சொல்லையு முடையனல்லன் கற்ற வா ,பொய்யுரைத்து வறிது போவானுமல்லன் இச்சுனைப் புனத்தைக் கடவான் இவன் யாவன் கொலாம்; இவன்யாவனோ?

18 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழம்அன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

              -சுந்தரர்  (7-69-3)


பொருள்: விண்ணுலகம் வணங்குகின்ற வேதியனே  , மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து , அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே , சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்களுக்குத் தலைவனே , தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே , சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உன் அடியேன் படு கின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

15 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெருந்திரு விமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் றவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பா லங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

                    -திருநாவுக்கரசர்  (4-73-1)


பொருள்: திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு , மிக்க செல்வத்தை உடைய , இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய , பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு , தன் உடம்பில் ஒருபாகமாகக் கொண்டார் .

14 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப்
பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி
மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந் தெடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

                    -திருஞானசம்பந்தர்  (1-75-2)


பொருள்: பார்வதியை  விரும்பி ஏற்று, செஞ்டைமேல் பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து, பண் வகைகளை அழகாகப்பாடி ஆடியவராய்ச் சென்று, மகளிரிடம் பலியேற்கும் பரமராகிய எம் அடிகளார், ஊழிக் காலத்தில் உலகை மூடி வான்முகடு வரை உயர்ந்து  அலைகடல் நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி மீள நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள், வீற்றிருந்தருள்கிறார்.

13 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை
பொன்னின் மயமாக் கியவளவர்
போரே றென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன்
வருந்தொல் மரபின் முடிசூட்டுந்
தன்மை நிலவு பதிஐந்தின்
ஒன்றாய் விளங்குந் தகைத்தவ்வூர்.


           - சண்டேசுவரநாயனார் புராணம் (8)


பொருள்: சோழ மரபில் அபயன் என்றும், குலோத்துங்க சோழன் என்றும் போற்றப்பெற்றவரும், தில்லையில் கூத்தப் பெருமான் வீற்றி ருந்தருளும் பேரவையைப் பொன்னின் மயமாகப் புனைவித்த வரும், இந்நிலவுலகைக் காத்துவரும் போரேறாய மன்னர் மன்னனும் ஆன அநபாயரின் மரபினர் வழிவழியாக முடி சூடற்குப் பொருந்திய ஐந்து பதிகளுள் ஒன்றாய் விளங்குவது திருசேய்ழலூர்  ஆகும் .

12 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே. 

              -திருமூலர்  (10-2-17,4)


பொருள்: தலைவனே, சிவபெருமானே என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.

11 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இரத முடைய நடமாட்
டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே.

             -திருக்கோவையார் (8-4,8) 


பொருள்: இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் இனிமையையுடைய கூத்தாட்டையுடையவர்; எம் உடையர் எம்முடைய தலைவர்; வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இப் புனத்தார் விருந்தொடு பேச்சின்மை விரதம் உடையர் அவரது வரதமுடைய அழகிய தில்லையையொப்பாராகிய இப்புனத்துநின்ற இவர்கள் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு பேசாமையை விரதமாகவுடையர்; அது அன்றேல் அதுவன்றாயின்; மீட்டு வாய்திறக்கின் சலக்கு என்ப மணி சரதம் உடையர் பின் வாய்திறக்கிற் சலக்கென விழுவன முத்தமணிகளை மெய்யாகவுடையர்

08 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள்என் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

               -சுந்தரர்  (7-69-1)


பொருள்: தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , வீட்டின்பமும் , அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும் , இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து , பிறர் ஒருவரையும் துணையாக நினையாது , அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும் , அவர்கள் என்னைப் பற்ற வரின் , பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரி வேன் ; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை , நீ நீக்கியருளாய் .

07 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆர்த்தெழு மிலங்கைக் கோனை யருவரை யடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலும்
தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தவே ழுலகும் வைத்தார் இன்னம்ப ரீச னாரே.

                     -திருநாவுக்கரசர்  (4-72-10)


பொருள்:  கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை விரலை ஊன்றி  மலையின் கீழ் நசுக்கியவர் . அருச்சுனனோடு போரிட்டு , அவனுக்குத் தெய்வப் படைகளைக் கொடுத்து அருளியவர் .  தீர்த்தமான  கங்கையைச் சடையில் வைத்தவர் . தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் உள்ளவர்களை வாழ வைத்தவர்  இன்னம்பர் ஈசன் ஆவார்.

06 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோ ழந்தேவர்
விண்ணிற்பொலிய வமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம் பதியாக
எண்ணிற்சிறந்த விமையோரேத்த வுமையோ டிருந்தானே.
 
                                  -திருஞானசம்பந்தர்  (1-74-7)


பொருள்: அரிய நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

05 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முன்னவரை நேர்நோக்கி
முக்கண்ணர் மூவுலகும்
நின்னிலைமை அறிவித்தோம்
நீயும்இனி நீடியநம்
மன்னுலகு பிரியாது
வைகுவாய் எனஅருளி
அந்நிலையே எழுந்தருளி
அணிஏகாம் பரம்அணைந்தார்.


                  -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (127)


பொருள்: தம்முன்பு நின்ற அடியவரை முக்கண்களை யுடைய இறைவன், `மூவுலகும் உனது அன்பின் நிலையை அறியுமாறு அறிவித்தோம், நீயும் இனி நீடிய வாழ்வுடைய நம் பேருலகை வந்த டைந்து எம்முடன் பிரியாது இருந்திடுவாய் என அருள் புரிந்து, அந் நிலையே தாம் எழுந்து மறைந்தருளி, அழகுடைய ஏகாம்பரம் என்னும் திருக்கோவிலைச் சென்று சேர்ந்தார்.

04 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே. 

             -திருமூலர்  (10-2-17,2)


பொருள்: பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்

01 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குவளைக் கருங்கட் கொடியே
ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே.

                    -திருக்கோவையார்  (8-4,2) 


பொருள்: குவளை கருங் கண் கொடி ஏர் இடை இக் கொடி கடைக்கண் குவளைப்பூப்போலுங் கரியகண்ணினையுங் கொடியை யொத்த இடையினையுமுடைய இக்கொடியினது கடைக்கண்; உவளைத் தன்னுடைய வுயிரென்று சொல்லிற்று, அதனால்; தன்னோடு உவமை இல்லாதவளைத் தன் பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் துவளத் தலைவந்த இன்னல் தனக்கொப்பில்லாதவளைத் தன்னொருகூற்றின்கண் வைத்த சிற்றம்பலத்தானது